பிர்ரியா டகோஸ்
பிர்ரியா என்றால் ஆட்டிறைச்சியை மிளகாய்,தக்காளி,பூண்டு,எலுமிச்சை இவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு மெக்சிகன் உணவு வகை. டகோஸ் என்பது சோள மாவு அல்லது கோதுமை மாவில் செய்யப்படும் வட்ட வடிவ (சப்பாத்தி அல்லது அப்பளம் போன்ற) உணவு வகை. பிர்ரியாவை மடிக்கப்பட்டு அல்லது சுருட்டப்பட்டு இருக்கும் டகோஸில் வைத்துப் பரிமாறப்படுவதே பிர்ரியா டகோஸ். மிளகாய், மசாலா, இறைச்சி இவற்றை வேகவைத்த நீர்தான் இதன் இணை உணவு. இந்த பிர்ரியா டகோஸ் தான் 2021 உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த உணவு.
நாசி கோரெங்
இறைச்சித் துண்டுகளும் காய்கறிகளும் கலந்து செய்யப்பட்ட இந்தோனேஷியன் அரிசி உணவு என்பதுதான் நாசி கோரெங் என்பதற்கு கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி சொல்லும் வரையறை. ஃப்ரைடு ரைஸின் இந்தோனேஷிய வடிவம்தான் நாசி கோரெங். இது இந்தோனேசியாவின் தேசிய உணவாகக் கருதப்படுகிறது. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றை வேகவைத்து அரைத்து, சோயாசாஸ், நிலக்கடலைப் பருப்பு. எலுமிச்சைச்சாறு, மசாலாப் பொருள்கள் சேர்த்து சமைக்கப்படும் நாசியைத் துளைக்கும் இந்த நாசிகோரெங் 2021 ல் ட்ரெண்டிங்கில் இருந்ததில் வியப்பேதுமில்லை.
ஃபெட்டா பாஸ்தா
ஃபெட்டா ஆட்டுப்பாலில் செய்யப்பட்ட பாலாடைக்கட்டி. அதனோடு தக்காளி, பூண்டு, எண்ணெய் மற்றும் துளசி, வோக்கோசு மற்றும் சிவப்பு மிளகுச் செதில்களுடன் மைக்ரோவேவ் அவனில் பேக் செய்து அதனுடன் வேகவைத்த பாஸ்தாவைக் கலந்து பிரட்டினால் கிடைப்பதுதான் இந்த நாவூறும் உணவு. டிக்டாக் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானது இந்த எளிதான மற்றும் சுவையான சமையல் வகையான ஃபெட்டா பாஸ்தா.
சார்குட்டரி போர்ட்
சார்குட்டரி என்பது இறைச்சிகள், பாலாடைக்கட்டிகள் மற்றும் பழங்கள், ஆலிவ்கள், கொட்டைகள், ஸ்ப்ரெட்கள் போன்றவற்றோடு இறைச்சியோடு உண்ணத்தகுந்த பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தட்டு. சமீப காலமாக இணையத்தில் பிரபலமானது இந்த சார்குட்டரி போர்டு.
ஷோகயாகி
ஷோகயாகி என்பது ஒரு ஜப்பானிய உணவு. ஷோகா என்றால் இஞ்சி என்றும் யாகி என்றால் கிரில் அல்லது வறுத்த என்று பொருள்படும். மெல்லியதாக வெட்டப்பட்ட பன்றி இறைச்சி சோயா சாஸ், சேக் (அரிசியிலிருந்து தயாரித்த ஆல்கஹால்) மற்றும் மிரின் (ஒருவகை ஒயின்),மற்றும் இஞ்சி சேர்த்து சமைக்கப்படுகிறது.
உருளைக்கிழங்கு சூப்
உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து அதனுடன் பால், வெண்ணெய் இவற்றைக் கலந்து உப்பு, மிளகு சேர்த்து பரிமாறப்படும் எளிமையான உணவுதான் இது. உருளைக்கிழங்குடன் காய்கறிகள் சேர்த்தும் இவை செய்யப்படுகின்றது.
ஆம்பர்ஜாக் டெரியாக்கி
ஆம்பர் ஜாக் டெரியாக்கி ஒரு ஜப்பானிய உணவு. ஆம்பர்ஜாக் என்பத் ஓர் மீன்வகை. டெரியாக்கி என்பது ஜப்பானிய சமையல் முறை. ஆம்பர்ஜாக் எனும் மீன் துண்டுகள், தாவர எண்ணெய்,சோயா சாஸ், சேக் மற்றும் மிரின்,சர்க்கரை இவற்றைப் பயன்படுத்திச் சமைக்கப்படும் ஓர் எளிமையான உணவு.
டோஞ்சிரு
டோஞ்சிரு ஒரு ஜப்பானிய சூப். இந்த சூப் மிசோ ( சோயாபீன்சில் தயாரிக்கப்படுவது), உருளைக்கிழங்கு, கேரட், பர்டாக்ஸ், பன்றி இறைச்சியை வேகவைக்க சமைக்கப்படுகிறது இந்த சூப் சூடாக இருப்பதால் குளிர்காலங்களில் அதிக பயன்பாட்டில் உள்ளது.
பேக்டு ஓட்ஸ்
டிக்டாக் வழியாக அதிகம் பிரபலமான ஒரு காலை உணவு இது. ஓட்ஸ், வாழைப்பழம், முட்டை, பேக்கிங் பவுடர், மேபிள் சிரப் இவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் ஓர் எளிமையான உணவு.
ஓவர்நைட் ஓட்ஸ்
ஒரு ஜாடியில் ஒரே இரவில் ஓட்ஸ் செய்வது மிகவும் எளிதானது. ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், காய்ச்சிய பால், தயிர், சியா விதைகள் மற்றும் மேப்பிள் சிரப் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாகக் கிளறவும். ஒரு இரவு ஊறவைத்தல் சிறந்தது,அவசரம் எனில் இரண்டு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்.இதனுடன் பழங்கள், ஆலிவ், முந்திரி, பாதாம், பிஸ்தா என உங்களுக்குப் பிடித்ததைத் தூவிப் பரிமாறலாம்.