அமெரிக்காவில் 8 வயது சிறுவன், 1 வயது பெண் குழந்தையைத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் ரோடரிக் ராண்டால் என்பவர் தனது மகன் மற்றும் பெண் தோழியின் மூன்று கை குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அப்போது, ராண்டால் தனது துப்பாக்கியை விடுதி அறையில் உள்ள அலமாரியில் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதைப்பார்த்த அவரது 8 வயது மகன் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளார்.
மேலும் குழந்தைகளை நோக்கி துப்பாக்கியைக் காட்டி சுட்டுள்ளார். இதில் துப்பாக்கியல் இருந்த குண்டு வெளியே வந்து குழந்தை மீது பாய்ந்துள்ளது. பிறகு துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விடுதி உரிமையாளர்கள் அறைக்கு வந்து பார்த்தபோது, குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு வந்த போலிஸார் சிறுவன் கையில் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் சிறுவனின் தந்தையைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சிறுவனின் தந்தை மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பதும், கள்ளத்துப்பாக்கியை வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக இப்படியான சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதே புளோரிடாவில் 2 வயது சிறுவன் தனது அப்பாவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவமும் நடந்துள்ளது. இப்படியான கொடூர சம்பவங்களுக்கு அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரமே காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.