பண்டைக்காலத்தில் கடலில் போக்குவரத்துக்கும் வணிகத்திற்கும் பயன்படுத்திய கப்பலை மரக்கலம் என்று அழைத்தனர்.அத்தகைய மரக்கலங்களில் வந்த அரபு வணிகர்களை மரக்கலராயர்கள் என்று அழைத்தனர். மரக்கலராயர் என்பதே மரைக்காயர் என்று மறுவியது.
16ஆம் நூற்றாண்டில் கோழிக்கோட்டை ஆண்ட சமூத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படைத் தளபதிகளாக இருந்தவர்கள் குஞ்ஞாலி மரைக்காயர் வம்சத்தினர். அந்த வம்சத்தில் நான்காவது மரைக்காயராக இருந்த முகமதலி மரைக்காயரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் மோகன்லால் நடித்து பிரியதர்ஷன் இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான மரைக்காயர். இந்த குஞ்சாலி மரைக்காயர்தான் இந்திய கடற்படை எல்லையில் முதல் கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவர் என்றும் கூறப்படுகிறது.
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதையாய், பணக்காரர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ஜென்டில்மேனாய் (கே டி குஞ்சுமோனின் ஜென்டில்மேன்) வாழ்கிறார். எல்லோரும் ராபின் ஹுட்டைப் போல வாழ்கிறார் என்று சொல்லவேண்டுமா என்ன? அந்த நாட்டின்மீது போர்ச்சுகீசியர்கள் படையெடுக்கும் அபாயம் நேர்கிறது, கொள்ளைக்காரனான மன்னிக்கவும் பிறர் பொருளைக் கவர்பவரான குஞ்ஞாலிக்கு கடற்படைத் தளபதி பதவி கொடுக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்களைப் போரில் வெல்கிறான் குஞ்ஞாலி இதனால், அரசவையில் அவனது மதிப்பு உயர்கிறது. இந்த சமயத்தில் குஞ்ஞாலியின் நெருக்கமான தளபதிக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் காதல் என்னென்ன சிக்கல்களைக் கொண்டுவருகிறது அந்த சிக்கலை எப்படிக் கையாண்டார் என்பது மீதிக் கதை.
பிரியதர்ஷன்–மோகன்லால் கூட்டணி ஏற்கனவே சிறைச்சாலை (காலாபாணி) என்ற படத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பிரமாண்டமான கோட்டைகள், போர்க்களங்கள், கப்பல்கள் என கண்களை வியப்பில் விரியவைக்கிறார் ப்ரியதர்ஷன்.
மலையாளப் படங்கள் பெரும்பாலானவை சிறிய பட்ஜெட் படங்களாக இருக்கும்.ஒரு கிராமம்,ஆறு,வீடு என குறிப்பிட்ட குறுகிய லொக்கேஷன் களிலேயே நிறைவான வெற்றிப்படங்களைக் கொடுக்க வல்லவை. (சில மலையாளப் படங்கள் படுக்கை அறை, குளியலறையிலேயே முடிந்துவிடும் வல்லமை கொண்டவை என்பது வேறுவிஷயம்). அப்படிப்பட்ட மலையாளத் திரைப்பட உலகில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டத்தில் நம்மைப் பிரமிக்கவைக்கிறது.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் நாம் மலையாளப் படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மெதுவாக நகர்கின்றன.
குஞ்சாலி மரைக்காயரின் இளம் வயது கதாபாத்திரத்தில் மோகன்லாலின் மகன் பிரணாவ் நடித்திருப்பது சிறப்பு. அந்தக் கதாபாத்திரத்தையும் மோகன்லாலே நடிக்காமல் இருப்பது பாராட்டத்தக்கது.
படத்தின் முதல் பாதி பரபரப்போ,விறுவிறுப்போ இன்றி மெதுவாக நகர்கிறது. ஒரு வீர தீர பராக்கிரமசாலிக்கு உண்டான பரபர பஞ்ச் டயலாக்கோ,தெறிக்கவிடுகின்ற மாஸ் இண்ட்ரோ இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.
அரசியல் கூட்டங்களில் வார்டு மெம்பரில் தொடங்கி வட்டச் செயலாளர் என நீண்டுகொண்டே செல்லும் அறிமுகப் படலம்போலவே,படம் தொடங்கி இடைவேளை வரை புதிது புதிதாக கதாபாத்திரங்களின் அணிவகுப்பு நடந்துகொண்டே இருக்கிறது.
இரண்டாம் பாதியின் யுத்த காட்சிகள் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.முன்னனி நடிகர்களின் பட்டாளமே இதில் நடித்திருப்பதால் அனைவருக்கும் முக்கிய காட்சிகளை பகிர்ந்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் போல.பலர் ஒன்றிரண்டு காட்சிகளில்மட்டும் வருகின்றனர்.
சாபு சிரிலின் கலை வேலைப்பாடுகள் நம்மை அந்தக் காலகட்டத்திற்கே கொண்டுசெல்கின்றன.
திருவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
படத்தில் கிராபிக்ஸ் குழு கலக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்து வியந்த போர்க்கள காட்சிகளை ஒரு மலையாளப் படத்திலும் பார்க்கும் வாய்ப்பை அமர்க்களமாய் வழங்கியிருக்கிறார்கள்.
படத்துக்கு இசை ராகுல் ராஜ், அன்கித் சுரி, லயல் எவான்ஸ் ரோடர், ரோனி ரஃபேல். ஒரு வரலாற்றுப் படத்துக்கான பொருத்தமான இசையையும்,குறைவில்லாத பின்னணி இசையையும் தந்திருக்கிறார்கள்.
வரலாற்று கதை,அதுவும் ஏற்கனவே வாழ்ந்த ஒரு வீரனின் கதை என்பதால் மிகப்பெரிய பில்டப் காட்சிகளோ,மசாலாவோ சேர்க்கமுடியாமல் போவது இயல்புதான், கதையின் போக்கிலேயே செல்லவேண்டிய நிர்ப்பந்தம்.கவனமாகக் கையாண்டிருக்கிறார் பிரியதர்ஷன்.
படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்து விறுவிறு,பரபரவென திரைக்கதையின் வேகத்தையும் கூட்டியிருந்தால் மரைக்காயர் மனதை இன்னும் கவர்ந்திருப்பார்.