மாநாடு திரைவிமர்சனம் – கம்பேக் கொடுத்த சிம்பு

Maanadu Simbu Come Back Moview Review

தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா எனும் சந்திரமுகிப் பாடலில் ரிப்பீட்டு என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் அல்லவா? அதுபோல ஒருவர் வாழ்வின் நிகழ்வுகள் திரும்பத் திரும்ப தொடர்ந்து ரிப்பீட்டாக நடந்துகொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? என்பதன் சுவாரஸ்யமான கற்பனைதான் மாநாடு

நண்பனின் காதலை சேர்த்துவைப்பதற்காகத் துபாயில் இருந்து கோயம்பத்தூர் வரும் பாய் அப்துல் காலிக்காக சிம்பு. திருமணமாகப்போகும் பெண்ணையும் அவளைக் காதலித்த தன் நண்பனையும் சேர்த்துவைக்க முடிவுசெய்து,பெண்ணைக் கடத்தி நண்பனுக்கு திருமணம் செய்துவைக்கப் போகும்போது, எதிர்பாராவிதமாக ஒரு விபத்து நடக்கிறது.

அங்கு வரும் போலீசான தனுஷ்கோடி (எஸ்.ஜே. சூர்யா) அப்துல் காலிக்கைக் கைது செய்து கூட்டிச்செல்கிறார். (அவருக்கு ‘தனுஷ்’கோடி எனப் பெயர் வைத்திருப்பதில் எதுவும் உள்குத்து உண்டா?) போன இடத்தில் அப்துல் காலிக் வழக்கில் இருந்து தப்பிக்க, அவருக்கு முதல்வரைக் கொலை செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

முதலமைச்சரைக் கொல்கிறான் அப்துல் காலிக். பிறகு காவல்துறை அவனைக் கொல்கிறது. சட்டென விழித்துப் பார்த்தால், காலிக் மீண்டும் விமானத்தில் இருக்கிறான்.அப்போதுதான் ஒரு டைம் லூப்பில் சிக்கியிருப்பது அப்துல் காலிக்குக்குப் புரிகிறது,நமக்கும்தான்.பின்னர், முதலமைச்சரையும், தன்னையும் காப்பாற்ற காலிக் மேற்கொள்ளும் முயற்சிகளே மீதிப் படம்.

மிகவும் சிக்கலான, ஒரு சவாலான கதையை எடுத்துக்கொண்டு அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் சொல்லி,டைம்லூப் என்ற புதிய வித்தியாசமான கதைக்களத்தைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தியமைக்கு வெங்கட் பிரபுவிற்கு வாழ்த்துக்கள்.

இதே கதைக்களத்தில் பல ஆங்கிலப்படங்களை நாம் பார்த்திருந்தாலும் (படத்திலேயே இவை குறிப்பிடப்படுவது வெங்கட்பிரவுவின் புத்திசாலித்தனம்) தமிழிலும் இதே கதைக்களத்தில் படம் எடுக்கமுடியும் என்று அழகாக நிருபித்திருக்கிறார் வெங்கட்பிரபு.

திரும்பத் திரும்ப நடக்கும் காட்சிகள் கண்டிப்பாகக் காண்பவரை அலுப்படையச் செய்துவிடும் என யோசித்து ஒவ்வொரு முறையும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களைச் சேர்த்திருப்பதுதான் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.வெங்கட் பிரபுவின் நகைச்சுவை,குறும்புத்தனம் ஆங்காங்கே தென்படுவது படத்தைச் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது.

எஸ்.ஏ.சி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் சிம்பு – எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவர்தான் இந்தக் கதையின் மையம். விக்ரம் வேதா படத்தில் எப்படி விஜயசேதுபதிக்கு எப்படி வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்பு எஸ்.ஜே.சூர்யாவுக்கு திரையரங்குகளில் கிடைக்கிறது.  சில காட்சிகளில் தோன்றினாலும் மனதில் நிற்கும்படியான நடிப்பை வழங்கி இருக்கிறார்  ஒய்.ஜி. மகேந்திரன் இந்தச் சிக்கலான, பரபரப்பான கதையில் கதாநாயகிக்கு பெரிய வேலையில்லை. சில காட்சிகள் மட்டுமே வந்து வழக்கமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.அவ்வளவே.

ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருவது,உடல் பருத்தது என பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு மிக நீ…….ண்ட இடைவெளியில் புதுப்பொலிவோடு சிம்பு. ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என ஒரு இயக்குநரின் நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகனின் அறிமுகப்பாடல், காதைப் பதம்பார்க்கும் பஞ்ச் வசனங்கள் இல்லாதது ஒரு பெரிய ஆறுதல். உடல் பருமனைக் கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் திரை முழுவதையும் இவரே ஆக்கிரமிக்கும் வாய்ப்பும் இருந்திருக்கும்.

சிக்கலான கதையை பார்ப்பவரைக் குழப்பிடாமல் பார்த்துக்கொள்ள படத் தொகுப்பின் பங்கு மிகப் பெரியது. எந்த காட்சியும் குழப்பமில்லாமல் எளியவர்க்கும் தெளிவாக புரியும்படி காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் பிரவீன் கே.எல்.அதற்கு நூறு படங்கள் பணியாற்றிய  அனுபவம் கைகொடுத்திருக்கிறது.

மாநாடு சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பிரம்மாண்டமாக ஒளிப்பதிவாக்கியதில் கவனம் ஈர்க்கிறார் ரிச்சர்ட் எம். நாதன்.

அமெரிக்கால ஒருத்தன் குண்டு வச்சா அவன சைக்கோனு சொல்றிங்க..இங்க குண்டுவச்சா உடனே முஸ்லிம் தீவிரவாதின்னு சொல்றீங்க..தீவிரவாதத்துல ஏதுடா சாதி மதம் என படத்தின் வசனங்கள் ஆங்காங்கே கவனம் ஈர்க்கின்றன.

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் என்பார்களே அதுபோல படத்தில் ஒரே ஒரு இனிமையான பாடல். சிங்கிள் பாடலாக இருந்தாலும் நம்மோடு மிங்கிளாகும் பாடல். பின்னணி இசை இந்தப்படத்தைத் தாங்கி நிற்கும் முக்கியமான தூண்.ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு பின்னணி இசை என பின்னணி இசையால் படத்தை முன்னணிக்குக் கொண்டு வந்திருப்பது யுவன்தான்.

சிறப்பான வெற்றியைச் சமீபத்தில் சுவைக்காத சிம்பு, வெங்கட்பிரபு, யுவன்ஷங்கர் ராஜா என அனைவருக்கும் இது ஓர் அட்டகாசமான வெற்றி. இவர்கள் அனைவருக்கும் இது ஒரு சிறந்த கம்பேக். புதிய கதைக்களம் ஒன்றை நேரடியாகத் தமிழ் சினிமாவில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் ரசிகர்களுக்கும் ஒரு கம்பேக் என்றே சொல்லவேண்டும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *