திரைப்பட நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், சமூக வலைதள கணக்குகள் என எங்கேயும் அவரைக் காண முடியாது. திரைப்படத்தை தவிர அவரின் முகத்தை வேறு எந்த திரையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் காணமுடியாது. விழாக்களில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் இவர் பெயரைச் சொன்னதும் விழாக்களில் ஆரவாரம் அடங்க வெகுநேரமாகிறது.
80 கிட்ஸ், 90 கிட்ஸ், 2k கிட்ஸ் என எல்லாத் தரப்பு ரசிகர்களும் இவருக்கு உண்டு. இவர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி என்றால் இளைஞர்கள் மட்டுமல்ல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாகவே அது இருக்கிறது.
எல்லாப் பிரபலங்களுக்குமே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டுதான். ஆனால் பிரபலங்களே பலரே இவருக்கு ரசிகர்களாக இருப்பது இவருக்குத்தான்.
இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் இவரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாகவே கொண்டாடி வருகின்றனர்.
இவரை நடிகர் எனும் குறுகிய வட்டத்தில் அடைத்துவிட முடியதபடி பைக் பிரியர், கார் ரேஸ், ஏரோ மாடலிங், துப்பாக்கி சுடுதல், புகைப்படம் எடுத்தல், சமையல் என எல்லாத்துறைகளிலும் புகழ் பெற்றவர்.
இத்தகைய பெருமைகளைப் பெற்றவர் வேறு யாருமல்ல ஆசை நாயகனாய் அறிமுகமாகி, காதல் மன்னனாய் கவனம் ஈர்த்து அமர்க்களமாய், அட்டகாசமான வலிமையோடு வரலாறு படைக்கும் தல (தப்பு…தப்பு ஏ.கே) என்று அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார்தான் அவர்.
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படம் மட்டுமே நடிக்கும் ஒருவருக்கு நாளுக்கு நாள் அளவுகடந்த ரசிகர்கள் கூட்டமும் அவர்களின் அன்பும் அதிகரித்துவருகிறதே எப்படிச் சாத்தியமானது இது?
வாருங்கள் ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
1.எளிமை
அஜீத் என்றாலே எளிமை தான் எளிமைதான் அவரது வலிமை. பந்தா இல்லாமல் எல்லோரிடமும் பழகக்கூடிய தன்மை.இதனால்தான் இவருக்கு ரசிகர்கள் திரைத்துறையிலும் அதற்கு அப்பாற்பட்டும் இருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
2.மற்றவரை மதிக்கும் குணம்
அனைவருக்கும் மரியாதை கொடுப்பதில் அஜித்துக்கு நிகர் அவர்தான்.ரசிகர்கள், வேலையாட்கள் மட்டுமல்ல பொதுமக்களிடம் மரியாதையாய் நடந்து கொள்ளும் அவரின் பண்பு அனைவரையும் கவர்ந்திருக்கிறது. மக்களோடு மக்களாக சாதாரணமாக வரிசையில் நின்று வாக்களிப்பது இதற்கு ஒரு சான்று.
3.துணிச்சல்
ஒரு மாநிலத்தின் முதல்வர் மேடையில் அமர்ந்திருக்க, பலரும் பார்க்க, அவருடைய ஆட்கள் செய்யும் அடாவடித்தனத்தை முதல்வரிடமே எடுத்துக்கூறிய துணிச்சல் எல்லோராலும் பாராட்டப்பட்டது. சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் இதற்கு எழுந்து கைதட்டியது வரலாறு.
4.விளம்பரத்தை விரும்பாமை
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு.அஜித்குமாரின் வாக்கும் அதுவே. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு சத்தமின்றி உதவி செய்துள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
5.ரசிகர்களின் மீதான அக்கறை
ஒருபோதும் தன் ரசிகர்களைச் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாத குணம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அதில் முக்கியமானது அரசியல் லாபங்களுக்காக எப்போதும் என் ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்’ என்னும் நிலைப்பாடு. தன் ரசிகர்களுக்கு அஜித் சொல்வது ஒன்றுதான், ‘உங்களையும் உங்கள் குடும்பத்தையும் முதலில் கவனியுங்கள்’ என்பதே அது. அக்கறையுள்ள ஒருவரிடம் இருந்துதான் இந்த சொற்கள் வரும்.
6.அரசியலில் ஈடுபடாமை
நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும்போதும் என்பதே என் கருத்து என்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார். நல்லது செய்ய நினைப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் எனும் அவர் கொள்கை பாருக்கும் பிடித்த ஒன்று.
7.மனதிற்குப் பிடித்ததைச் செய்தல்
ஒரே வேலையைச் செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் பலர். பைக், கார் ரேஸ், ஏரோ மாடலிங், துப்பாக்கி சுடுதல், புகைப்படம் எடுத்தல், சமையல்,பயணம் என மனதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ளும் மகத்தான பண்பு அஜித்துக்கு வாய்த்திருக்கிறது.அதுதான் அவருக்குத் திரையைத் தாண்டியும் ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொடுத்திருக்கிறது.
8.தோல்வியிலிருந்து மீளும் திறன்
ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள், ஏகப்பட்ட தோல்விப்படங்கள், சறுக்கல்கள் என இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து வெற்றிகளைக் கொடுக்கும் திறமை அனைவருமே அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று.
அஜித்துக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பு அனைவரையும் வியக்க வைக்கக்கூடியது. தொடர் தோல்விகளை கொடுத்தபோதும், பலரும் ஏகப்பட்ட கிண்டகள் கேலிகள் செய்தபோதும் அஜித்தை அவர் ரசிகர்கள் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கவில்லை. மீண்டு வருவார் என ரசிகர்களுக்கு இருந்த நம்பிக்கையையும் அவர் பொய்ப்பிக்கவில்லை. அதேபோல் அஜித்தும் தன் ரசிகர்கள் எப்போதும் பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பதை வலியுறுத்துவார். ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும் என்பதையும் அவர் சொல்லத் தவறுவதில்லை.
எளிமை, அன்பு, அக்கறை, துணிச்சல், மற்றவரை மதிக்கும் குணம், பன்முகத்தன்மை இப்படி படத்தில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருப்பதால்தான் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றால் அது மிகையன்று!