கூடங்குளத்து சோகம் | மலிவுவிலையில் மனித வளம்

affordable human resources koodankulam tragedy

மலிவு விலையில் இந்த உலகில் என்னென்னவோ கிடைத்தாலும், மனித வளம் மலிவு விலையில் கிடைப்பதுதான் மனதை வருந்தவைக்கும் செய்தி. அப்படி ஒரு ஒப்பற்ற துயரத்தைச் சந்திப்பவர்கள்தான் ஒப்பந்த தொழிலாளர்கள்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பவர்கள் யாவர்?

ஒரு நிறுவனத்தின் மூலம் நேரடியாக வேலைக்கு அமர்த்தப்படாமல், ஓர் ஒப்பந்தக்காரர் மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு பணிக்கு அமர்த்தப்படும் பரிதாபத்துக்கு உரியவர்கள்தான் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள். இவர்கள் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இவர்களுக்கு நிறுவனத்தோடு இல்லை. இவர்களுக்கு ஊதியம், பணிபுரியும் காலம் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பது ஒப்பந்தக்காரர்தான்.

ஒப்பந்தத் தொழிலாளர்களால் நிறுவனத்துக்கு என்ன நன்மை?

தேவைப்படும்போது வேலைக்குச் சேர்க்கலாம், தேவையில்லை எனில் நீக்கலாம் எனும் பெரும் சுதந்திரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதால் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் நன்மை. இதுபோக குறைந்த ஊதியத்தில் அதிக அனுபவம் கொண்டவர்களை வேலைக்கு அமர்த்தும் வசதி, பதவி உயர்வு, சம்பள உயர்வு குறித்த கவலையின்மை, தொழிலாளர் சேம நிதி. காப்பீடு போன்றவற்றில் இருந்து விடுபடுதல் போன்ற காரணங்களால் நிறுவனங்கள் இத்தகைய ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்புகின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ன நடக்கிறது?

பெரு நிறுவனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பது எல்லா இடங்களிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. கட்டுமானப் பணிகளுக்கும், பராமரிப்புப்பணிகளுக்கும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்களைப் பெறும் ஒப்பந்தக்காரர்கள் (காண்ட்ராக்டர்), அந்தப் பணிகளை மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல், சிவில் என துறைவாரியாகப் பிரித்து துணை ஒப்பந்தக்காரர்களை (சப் காண்ட்ராக்டர்) நியமிப்பது வழக்கம்.  நிறுவனத்தில் பணிபுரிய ஆட்களையும் (மேன் பவர் சப்ளை) இவர்கள் மூலமாக நிறுவனங்கள் பெறுகின்றன. இந்தப் புள்ளியில்தான் கூடங்குளத்தில் குளறுபடிகள் நடக்கின்றன.

பிழைப்பு தேடி பீகாரிலிருந்து வந்திருக்கின்ற தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் பணிக்கு வருபவர்கள். சொந்த பந்தம் எல்லாவற்றையும் விட்டு இங்கே வேலைக்கு வருவதால் கல்யாணம், காதுகுத்து, கருமாதி என அடிக்கடி விடுப்பு எடுக்காதவர்கள். இதுபோன்றவர்களின் உழைப்பைத்தான் சுரண்டி, ஒப்பந்தம் வாயிலாக பணிக்கு அமர்த்தி அதன்மூலம் மிகுந்த பலனை அடைகிறார்கள் இந்த ஒப்பந்தக்காரர்கள். தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு உள்ளே போவதற்கு நுழைவு அனுமதி (எண்ட்ரி பாஸ் அல்லது அடையாள அட்டை) தேவை. அது இருந்தால்தான் நிறுவனத்தின் உள்ளே நுழைவது சாத்தியம். அந்த அட்டை காலாவதி ஆகும்போது அதைப் புதுப்பிப்பதும் ஒப்பந்தக்காரர்கள்தான் செய்யமுடியும். அத்தகைய எண்ட்ரி பாஸை ஒப்பந்தக்காரர்கள் வாங்கி வைத்துக்கொள்வதும், அதைவைத்து இத்தொழிலாளர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும் இங்கே நடைபெற்று வருகிறது. புலம் பெயர்ந்த அந்தத் தொழிலாளர்கள் மட்டும்மின்றி, மண்ணின் மைந்தர்களுக்கும் இதே நிலைமைதான். வெளி மாநிலத் தொழிலாளர்களின் தங்குமிடம், உணவு, கழிப்பிட வசதிகளும் திருப்திகரமாக இருப்பதில்லை. ஆபத்து நிறைந்த அணு உலைச்சூழலில் பணிபுரிவதே கடினமான ஒன்று. அதிலும் இதுபோன்ற துயரங்களும் அவர்களுக்கு இருந்தால் என்ன செய்வது? நல்ல ஒரு பணிச்சூழல் இருந்தால்தான் தொழிலாளர்கள் நிம்மதியாகப் பணிபுரிய முடியும். அதுதான் அனைவருக்குமே நன்மை பயக்கும்.

பெரும்பாலான நிறுவனங்களில் நிரந்தர தொழிலாளர்களுக்கான கேன்டீன், ஓய்வறை, மருத்துவமனை, குடியிருப்பு, நிர்வாகத்தின் வாகனம் உட்பட எதிலும் ஒப்பந்த தொழிலாளர்களை அனுமதிப்பதில்லை இன்னும் சொல்லப்போனால் அவர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. இதுவும் ஒரு வகை நவீன தீண்டாமை என்றாலும் மிகையன்று.

இவர்களின் துயர் துடைக்க என்ன வழி?

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை அளிக்கவும், மேலும் அவர்களின் பணிச் சூழலை ஆரோக்கியமானதாக சூழலாக மாற்றவும் உண்டாக்கப்பட்ட சட்டம்தான் 1970 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்த தொழிலாளர் கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு சட்டம் (Contract Labour Regulation and Abolition Act).

இச்சட்டம் தொழிலாளர்களின் நலன், ஒழுங்குபடுத்துதல், சுகாதாரம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம், மற்றும் அந்த நிறுவனங்களின் பதிவு குறித்த தகவல்கள், ஒப்பந்தக்காரரின் உரிமத்தின் மானியங்கள் குறித்த விரிவான விதிகளைத் தெரிவிக்கின்றன. ஒப்பந்தக்காரர் மற்றும் நிறுவனத்துடைய முதலாளியின் கடமைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அதில் உழைப்பாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான ஊதியம் செலுத்தப்படுகிறதா என்பதைக் கவனித்தல், தொழிலாளர்களுக்கு கேண்டீன் வசதிகள், ஓய்வறைகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான சிறுநீர் கழிப்பறைகளின் வசதிகள், உழைப்பாளர்களுக்கு தேவையான குடிநீர், துவைக்கும் இடம், முதலுதவி, க்ரெச் போன்றவை உள்ளதா என்பதைக் கவனித்தல், பதிவேடுகள் மற்றும் பதிவுகளையும் அறிவிப்புகளையும் முறையாகப் பராமரிக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும் என்பதெல்லாம் தெளிவாகக் குறிபிடப் பட்டிருக்கின்றன.

ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் மீறல்களும் அதற்கான தண்டனைகளும் இதில் கூறப்பட்டிருக்கின்றன. சட்டத்தின் எந்தவொரு பகுதியையும் மீறும்பட்சத்தில் எந்தவொரு நபருக்கும் மூன்று மாதங்களுக்கும் மேலாக கஸ்டடியில்வைக்க அல்லது ரூ.1,000 அபராதமாக செலுத்த நேரிடும் அல்லது, இரண்டு தண்டனைகளையும் சேர்த்தும் அவர்களுக்கு தண்டனையாக கொடுக்கப்படலாம்.

சட்டம் எத்தனை போட்டாலும் அதைப் பின்பற்றுவதற்கு சட்டத்தை மதிக்கின்ற ஒரு குணமும், மனிதர்களை நேசிக்கும் மனமும் தேவை. “திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது திருடராய் பார்த்து திருந்தா விட்டால்திருட்டை ஓழிக்க முடியாது” என்பதுதான் நிதர்சனம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *