பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உண்டு. பொழுதைப் போக்கவேண்டும், அதுவும் பயனுள்ள முறையில் இருக்க வேண்டும், மூளைக்கு வேலை தருவதாயும் அது இருக்க வேண்டும், மொழியில் புதுப்புதுச் சொற்களைத் தெரிந்துகொள்ளவும் வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் செய்யவேண்டியது குறுக்கெழுத்துப் புதிர் எனும் சொல் விளையாட்டை விளையாடுவதுதான்.
குறுக்கெழுத்துப் புதிர் என்றால் என்ன?
கட்டங்களை சொற்களால் நிரப்பும் ஒருவித சொல் விளையாட்டே குறுக்கெழுத்துப் புதிர் எனப்படுகிறது. கருப்பு, வெள்ளை நிறங்களில் கட்டங்களும் அதில் வெள்ளைக் கட்டங்களில் எண்களும் கொடுக்கப்பட்டிருக்கும். வெள்ளைக் கட்டங்களை நிரப்புவதற்குக் குறிப்புகள் உண்டு. கருப்புக் கட்டங்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும் கட்டத்தை நிரப்புமாறு புதிர் அமைக்கப்பட்டிருக்கும். சில புதிர்கள் இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்று நிரப்பும் வகையிலும் அமைந்திருக்கும்.
குறுக்கெழுத்துப்புதிர் விளையாடுவதன் நன்மைகள் என்ன?
குறுக்கெழுத்துப் புதிர் விளையாடுவதால் கணக்கற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில.
உங்கள் சொற்களஞ்சியம் (vocabulary) அதிகரிக்கிறது
எந்த மொழியையும் சரளமாய்ப் பேசுவதற்கான அடித்தளத்தைக் கொடுப்பது அதன் சொற்கள்தான். ஏராளமான, புதிய வியப்பூட்டும் சொற்களைத் தெரிந்துகொள்ளவும், சொற்களஞ்சியத்தை மேம்படுத்தவும் குறுக்கெழுத்து புதிர்கள் உதவுகின்றன. இதன்மூலம் புதுப்புதுச் சொற்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது. எழுத்துப் பிழையின்றி மொழியைப் பயில உதவுகிறது.
மன அழுத்தத்தைக் (stress) குறைக்கிறது
மன அழுத்தமாக உணரும்போது உங்கள் மனதை அமைதிப்படுத்தி, தெளிவாகச் சிந்தித்து, மன அழுத்தத்தைக் குறைத்து உடலையும் மனதையும் அமைதியான நிலைக்கு கொண்டுவரக் குறுக்கெழுத்துப் புதிர் ஒரு சிறந்த வழியாகும். இந்தப் புதிர்களின் மீதான ஆர்வம் அதிகமாகும்போது மன அழுத்தம் குறைவதை நீங்களே உணரலாம்.
உங்கள் படைப்பாற்றலைத் (creativity) தூண்டுகிறது.
குறுக்கெழுத்துப்புதிரில் சில விடைகளைக் கண்டுபிடிப்பது கடினமாய் இருக்கும். இதன் காரணமாக, நீங்கள் வழக்கத்திற்கு மாறாகச் சிந்திக்க வேண்டும், அதாவது மாத்தி யோசிக்க வேண்டும். இப்படி வெவ்வேறு வழிகளில் சிந்திப்பது உங்கள் படைப்பாற்றலைத் தூண்டுகிறது.
பகுப்பாய்வுத் திறன்களை (analytical skills ) மேம்படுத்துகிறது.
ஒரு துப்பறிவாளரைப்போல நீங்கள் விளையாடும் குறுக்கெழுத்து புதிர்கள் உங்கள் பகுப்பாய்வுத் திறன்களை மேம்படுத்துகின்றன. சிக்கல்களைத் தீர்த்து,விடைகளைக் கண்டறியும் திறமை வாழ்க்கையிலும் பல சவால்களைக் கையாளும், எதிர்கொள்ளும் நம்பிக்கையை உங்களுக்கு வழங்குகிறது.
துருப்பிடித்த மூளையைத் துருதுருவென ஆக்குகிறது.
ஒருபோதும் உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கவில்லை என்றால், அது சோம்பேறியாகி, சிந்திக்கும் திறனை மெல்ல இழக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது குறுக்கெழுத்து புதிர்களைச் செய்வதன் மூலம் உங்கள் மூளைச் செல்கள் புத்துணர்வோடு இருக்கும்.
அதிகம் செலவில்லா அற்புத பொழுதுபோக்கு.
பொழுதுபோக்கு என்று எடுத்துக்கொண்டாலே அவை அதிக பொருட்செலவைக் கொண்டவையாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குறுக்கெழுத்து புதிரை விளையாடுவதற்கு உங்களுக்கு அதிக செலவு ஆகாது. இதனால் பொது அறிவும் வளரும் என்பது கூடுத சிறப்பு.
குறுக்கெழுத்துப் புதிரை எங்கு விளையாடுவது?
தினசரி வாங்கும் செய்தித்தாள்கள், வார இதழ்களிலேயே குறுக்கெழுத்துப் புதிர்கள் வெளிவருகின்றன. இதற்கென புத்தகங்களும் இருக்கின்றன. இணையத்திலும் இவை வெளிவருகின்றன. பேனா, பென்சில், பேப்பர், எரேசர், கம்யூட்டர் இதையெல்லாம் பயன்படுத்த பொறுமை பொறுமையில்லை என்பவர்கள் உங்கள் மொபைலிலேயே குறுக்கெழுத்து புதிர் செயலிகளைப் பதிவிறக்கலாம். அவற்றில் பல இலவசமாகவும் கிடைக்கின்றன.அவற்றைத் தரவிறக்கம் செய்துகொண்டால் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விளையாடலாம்.அவற்றுள் கீழ்க்கண்டவை தமிழில் விளையாட சிறந்ததாக இருக்கின்றன.
https://play.google.com/store/apps/details?id=nithra.tamilcrosswordpuzzle
இவற்றை விளையாடி உங்கள் மொழியறிவை, பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்!