ஜாதி என்பது தமிழ்ச்சொல் அல்ல என்பதை தமிழ் அறிந்த அனைவரும் அறிவர். ஜாதி என்பது வடமொழிச் சொல். ஜா என்ற சொல்லுக்கு பிறப்பு என்று பொருள். எடுத்துக்காட்டு-வனஜா என்றால் வனத்தில் பிறந்தவள், கிரிஜா என்றால் மலையில் (கிரி – மலை) பிறந்தவள். சாதி என்ற தமிழ்ச்சொல் சிறப்பான அஃறிணைப் பொருட்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்பட்டது. எடுத்துக்காட்டு – சாதிமல்லி, சாதிக்காய், சாதிப்பத்திரி.
ஆதியில் சாதி இல்லாத சமுதாயமாக இருந்ததுதான் அறிவார்ந்த தமிழ்ச் சமூகம். சாதி என்பதெல்லாம் பிற்காலத்தில் மக்களைப் பீடித்த நோய். நம் தமிழ் மக்கள் வேறு ஊர், மாநிலம், நாடு என பிழைப்புக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு எல்லைகளைத் தாண்டும்போதும் சாதியைத் தூக்கிக்கொண்டேதான் செல்கிறார்கள். விரும்பியோ, விரும்பாமலோ சாதி என்பது அடிப்பிடித்த பாத்திரத்தின் அழுக்கைப்போல ஒட்டிக்கொண்டே செல்கிறது.
தமிழ்நாட்டைவிட்டுத் தலைமுறை தலைமுறையாக மும்பையில் வசிக்கும் மக்கள் ஏராளம். அதனால் சாதிச்சங்கங்களோ அங்கு தாராளம். ‘குட்டித் தமிழ்நாடு’ எனப்படும் தாராவியில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சாதிச் சங்கங்கள், நடிகர்களின் இரசிகர் மன்றங்களின் மும்பைக் கிளை அலுவலகங்களும் ‘கொடி’கட்டிப் பறக்கின்றன.
தமிழ்நாட்டில் இருப்பதைவிட அதிகமான அளவில் சாதிச்சங்கங்கள் மும்பையில் உண்டு. அனைத்து விதமான சாதியினருக்கும் அளவுக்கு அதிகமாகவே, ஒவ்வொரு பகுதியிலும் சாதிச்சங்கங்கள் உண்டு. ஆனால் ஒருபோதும் அங்கு தமிழ்நாட்டைப்போல் சாதிச் சண்டைகளோ, சாதிக்கலவரங்களோ வந்தது இல்லை. தீண்டாமை, ஆணவக் கொலைகள் போன்ற அருவருக்கத்தக்க நிகழ்வுகள் அங்கு நடப்பதில்லை.
சாதிச்சங்கங்கள் ஒவ்வொன்றும் தம் சாதியினரின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தம் சாதியினரின் பிரச்சைனைகளுக்குக் குரல் கொடுப்பது, தம் மக்களின் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் இவற்றிற்கு உதவிக்கரம் நீட்டுவது, சமூக சேவைகள் செய்வது போன்றவற்றில்தான் கவனம் செலுத்துகின்றன. இவை ஒருபோதும் மற்ற சாதியினரோடு சண்டை மூட்டி, அதனால் குளிர்காய்வதில்லை. அதற்கான அவசியமும் அவற்றிற்கு இருந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த சங்கங்களின் தலைவர்களிடையே நல்ல நட்புறவும், புரிந்துணர்வும் உண்டு. அவர்கள் ஒன்றாக அமர்ந்து, உணவருந்தி மகிழும் வகையில் அவர்களுக்கிடையே ஆரோக்கியமான சூழ்நிலை அங்கு நிலவுகிறது.
சாதிச்சங்கங்கள் சாதிப்பற்றை வளர்ப்பது உண்மைதான் என்றாலும் அவை ஒருபோதும் சாதிவெறியையோ வன்மத்தையோ ஊக்குவித்ததில்லை. அவை தத்தம் சாதியினருக்கும், சமயங்களில் சாதியைக் கடந்தும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு தம் மக்களுக்கும் பல உதவிகளைப் புரிகின்றன.
மும்பையின் சாதிச்சங்கங்களின் இன்னுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால், வீட்டுக்குள் அண்ணன் தம்பி இடையே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் வெளியாளை வீட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம் அல்லவா? அதுபோல் சாதிச்சங்கங்கள் என்ற பெயரில் தனித்தனியே பிரிந்திருந்தாலும், தமிழர்க்கு ஒரு துயரம் என்றால் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே அணியில் திரள்வதுதான். அதில் அவர்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இருந்தது இல்லை. அதுவே மும்பை தமிழ்ச் சாதிச் சங்கங்களின் போற்றத்தக்க அம்சம்.
வீடு, வீதி, வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு, வேற்றுகிரகம் என எல்லைகள் விரியும்போது விரிசல்கள் குறைவது இயற்கையே. வெளிமாநிலத்தில் இருக்கும்போது நம்ம தமிழ்நாட்டு ஆள் என்பதும், வெளிநாட்டில் இருக்கும்போது நம்ம இந்திய நாட்டு ஆள் என்று வேறுபாடுகளை மறந்து பழகுவதும் எங்கும் பார்க்கும் ஒன்றுதான். நாம் வேற்றுக் கிரகத்திற்குச் செல்லும்நிலை வந்தால் பூமியில் இருப்பவர்கள் ஒன்றாகித்தானே ஆகவேண்டும்?!
சிகரெட் புகைப்பது நல்லதல்ல என்றாலும் பஞ்சு வைத்த ஃபில்டர் சிகரெட் புகைப்பதைப்போல்தான் சாதிவெறி இல்லாத சாதிப்பற்று என்பதும். சாதியை எண்ணாமல், சாதிக்க எண்ணுவோம்!