மும்பையின் சுற்றுலாத்துறைக்கு சிரப்பு சேர்க்கும் வகையில் மும்பையில் உள்ள ஆறு இடைக்கால மற்றும் ஆங்கிலேயர் கால கோட்டைகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன. விரைவில் அவற்றை அழகு மிளிறும் சுற்றுலா தலங்களாகவும், கலாச்சார நிகழ்வுகளுக்கான இடங்களாகவும் மற்றும் நாணயவியல் அருங்காட்சியகமாகவும் மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
எந்தெந்த கோட்டைகள்?
பாந்த்ரா, வோர்லி, செவ்ரி, மாஹிம், தாராவி மற்றும் செயிண்ட் ஜார்ஜ் ஆகியவைதான் அழகுறப்போகும் அந்த 6 கோட்டைகள். இந்த கோட்டைகளில் மும்பையின் வரலாற்றை விவரிக்கும் ஒலி மற்றும் ஒளி காட்சிகள் அமைக்கப்படவிருக்கின்றன. (மதுரை திருமலை நாயக்கர் மண்டபத்தில் இருப்பது போன்று). மேலும், இந்த கோட்டைகளின் பாதுகாப்பு மற்றும் கோட்டையின் வளர்ச்சிக்கான திட்டத்தைத் தயாரிக்க ஒரு கட்டிடக் கலை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சரும், மும்பை புறநகர் மாவட்டத்தின் பாதுகாப்பு அமைச்சருமான ஆதித்யா தாக்கரே மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறை அமைச்சர் அமித் தேஷ்முக் ஆகியோருக்கு இடையேயான சந்திப்புக்குப் பிறகு, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைகளால் இந்தத் திட்டம் வெளியிடப்பட்டது. மேலும் தொல்லியல் பாதுகாப்பு தொடர்பான பணிகளைத் தவிர மற்ற பணிகளை மும்பை மற்றும் புறநகர் மாவட்ட ஆட்சியர்களின் கீழ் உள்ள குழுக்கள் கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மறுசீரமைப்பு திட்டத்தில் என்னென்ன சிறப்புகள்:
கோட்டைகள் சுற்றுலா மற்றும் செயல்பாட்டு மையங்களாக உருவாக்கப்படும்.. கண்கவர் விளக்குகள், ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிகளுடன் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
- பாந்த்ரா கோட்டையின் ஒரு பகுதி தகவல் மையம், பாதுகாப்பு மையமாக சீரமைக்கப்படும்.
- மாஹிமில், பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) சுமார் 600 குடிசைகள் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கு மாற்றப்படும். மாஹிம் கோட்டை குடிசைகளை சீரமைக்கும் திட்டத்துக்கு சுமார் ₹50 கோடி செலவாகும் என்பதும் தெரிய வந்துள்ளது.
- CSMT நிலையத்திற்குப் பின்னால் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அரிய நாணயங்கள் கொண்ட நாணயவியல் அருங்காட்சியகம். அமைக்கப்படும்.
- வொர்லி கோட்டை நீர் விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்படலாம். பாந்த்ரா மற்றும் வொர்லியில் கோட்டைகளில் பொழுதுபோக்கு, இசை மற்றும் ஒலி மற்றும் ஒளி காட்சிகள் உருவாக்கப்படலாம்.
- இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கீழ் உள்ள சியோன் கோட்டை, பாறை ஏற்றம் மற்றும் இளைஞர்களின் செயல்பாட்டு தளமாக இருக்கலாம், மேலும் செவ்ரி கோட்டையில் குழந்தைகளுக்கான செயல்பாடு மற்றும் இயற்கை மையம் உருவாக்கப்படலாம்.
- சியோன் மற்றும் வடலாவில் உள்ள இரண்டு சிறிய கண்காணிப்பு கோபுரங்கள் பாதுகாக்கப்பட்டு, இவ்வளாகத்தில் சேர்க்கப்படலாம், இந்த கோட்டைகள் அனைத்தும் பேருந்து சேவையுடன் இணைக்கப்படவுள்ளன.