புறணி என்பதைப் பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது. புரோட்டா வாங்கிக் கொடுத்தாவது புறணி பேசுவதைக் கேட்க விரும்புபவர்களே இவ்வுலகில் அதிகம். சினிமா தொடர்பான புறணிக்கு கிசுகிசு என்று பெயர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சினிமா கிசுகிசுக்களுக்குப் புகழ்பெற்றவர்தான் பயில்வான் ரங்கநாதன். பூமர் அங்கிள்களைத் தன் பேச்சால் மிஞ்சுபவர்தான் இந்த ரூமர் அங்கிள்!
மிஸ்டர். மெட்ராஸ் பட்டத்தை வென்ற நிகழ்வு இவரைத் திரையுலகிற்கு உள்ளே அழைத்து வந்தது. இந்த 1983 ல் முந்தானை முடிச்சு எனும் படத்தில் நடிகராக அறிமுகமானார். சினிமா பற்றி இதழ்களில் செய்திகளும் விமர்சனமும் எழுதிவருகிறவர். கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாய் தமிழ் சினிமாவின் இண்டு, இடுக்கு, சந்து, பொந்து என எல்லா இடங்களையும் அறிந்தவர். பக்கத்தில் இருந்து பார்த்தவரைப்போல், படப்பிடிப்பு செய்திகள் முதல் படுக்கையறை செய்திகள் வரை பொதுமக்களுக்குப் பகிர்வது அன்னாருடைய தனிச்சிறப்பு. சினிமாத்துறையில் இருப்பவர், பத்திரிகையிலும் பணியாற்றுபவர் என்பதால் எதையும் நேரில் சென்று அறியும் வாய்ப்பிருக்கிறது என்றாலும் அன்னார் சொல்வதெல்லாம் “இதெல்லாம் நம்புற மாதிரியா சார் இருக்கு?” ரகங்கள்.
அடுத்தவரின் அந்தரங்கங்கள் பற்றி அறிந்து கருத்து சொல்வதில் அன்னாருக்கு நிகர் அவர்தான். சினிமாக்காரர்களின் வீட்டுக்குள் சிசிடிவியாய் இருப்பது பயில்வான்தானோ என்ற எண்ணம் அவர் சொல்லும் செய்திகளைக் கேட்கும் பலருக்கும் வந்தே தீரும். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது பகவானுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பயில்வானுக்கு நிச்சயம் பொருந்தும். காற்று புகாத இடத்திலும் இந்தக் கட்டுமஸ்தான பயில்வான் புகுந்து கிசுகிசுக்களைக் கொண்டுவருவதில் ஒரு கில்லாடி.
கிசுகிசு சொல்வதில், இவருக்கு பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற பேதமில்லை, தமிழ், தெலுங்கு, மலையாளம் என்ற மொழிகளும் தடையில்லை என தன் கடமையைச் செவ்வனே செய்துகொண்டே இருப்பவர். பயாஸ்கோப் பயில்வான் எனும் நிகழ்ச்சியில் திரையுலகப் பிரபலங்களைப்பற்றிய அனுபவங்களைப் பகிர்கிறார். இதற்கு பெருத்த வரவேற்பும் இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பலரும் அறிந்திராத தகவல்களைத் தருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. சிலசமயம் சம்பந்தப்பட்ட பிரபலமே அறியாத தகவலாய் அது இருக்குமோ எனும் ஐயமும் ஏற்படத்தான் செய்கிறது. “என்னது எனக்கு போதைப்பழக்கம் இருக்கா” எனக்கே இப்பத்தான் தெரியும் என சம்பந்தப்பட்டவரே திகைத்துப் போகவும் வாய்ப்பிருக்கிறது.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அதேபோல்தான் சினிமாத் துறையில் யாரேனும் விவாகரத்து செய்தால் அன்னார் ஓவர்டைம் செய்து, பல அந்தரங்க ஆய்வுகளைச் செய்து தன் ஆய்வறிக்கையைச் சமர்பிப்பார். அன்னாரது ஆய்வறிக்கைக்குப்பின் ஆயிரக்கணக்கில் வீடியோக்கள் வெளியாகும். அதற்கான விதை போட்டது அன்னாராகத்தான் இருக்கும்.
சமீபத்திய வைரலான தனுஷ், ஐஸ்வரியா விவாகரத்து தொடர்பான வீடியோவில் அன்னார் சற்று அதிகமாகவே ‘பாடி டிமான்ட், திருமணத்திற்கு முன்பே உறவு என கொச்சைப்படுத்தி இருந்தார். சினிமாக்காரர்களைப் பற்றி பயில்வான் என்ன சொன்னாலும் யாரும் எதிர்வினை ஆற்றுவதே இல்லை. குடிபோதை, பெண்கள் மோகம், பாடி டிமான்ட் என எப்படிப் பேசினாலும் எதிர்ப்பும் இல்லை என்பதுதான் புரியாத புதிர். இத்தோடு விட்டாரே என்ற மகிழ்ச்சியில் அவர்கள் இருக்கிறார்களா என்பதும் விளங்க இயலாத ஒன்று.
எது எப்படியோ, அடுத்தவரின் குடும்பப் பிரச்சினையைப் பொதுவெளியில் பேசுவது அநாகரீகம்தான். அதை எந்தக் கூச்ச நாச்சமும் இல்லாமல் செய்ய அவரால் முடிகிறது, நம்மாலும் அதைப் பார்க்க முடிகிறது. பொதுவாழ்வுக்கு வந்துவிட்டால் அவமானங்களுக்கு அஞ்சக்கூடாது என்பது எல்லோருக்கும் பொருந்தித்தான் போகிறது