வெள்ளத்தில் வாழ்க்கை அடித்து சென்றபோதும் ஓடியோடி உதவி செய்தவர் – தே.மு.தி.க. முத்துராஜ்.

DMDK Muthuraj With Captain Vijaykanth

2005 மும்பை வெள்ளத்தில் தனது தொழில் எந்திரங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து சென்றபோது கலங்கிவிடாமல், அக்கம்பக்கத்தில் அகால மரணம் அடைந்த வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட உடல்களை மீட்டு இறுதி மரியாதை செய்தது உள்ளிட்ட சேவைகளை செய்தவர் தே.மு.தி.க. பிரமுகரான முத்துராஜ் தங்கசாமி (வயது52).

ஏழை மாணவர்கள், பெண்களுக்கு உதவுவது என தொண்டு செயல்கள் ஏராளமாக செய்து வருகிறார். அவரது தொண்டு பணி, அரசியல் பணி மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார் முத்துராஜ்.
கேப்டன் விஜயகாந்த் 2005-ல் கட்சி தொடங்கியதில் இருந்தே மராட்டிய மாநில தொண்டரணி செயலாளராக பொறுப்பில் உள்ளேன். அதற்கு முன்பே விஜயகாந்த் மீதான ஈர்ப்பில் ராஜ்ஜியம் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை மும்பையில் தொடங்கி நடத்தினேன்.

எனக்கு எம்.ஜி.ஆர். படங்கள் ரொம்ப பிடிக்கும். விஜயகாந்த் நடிப்பில் சட்டம் ஒரு இருட்டறை படம் வந்ததில் இருந்து அவர், எம்.ஜி.ஆரை பின்பற்றி அவரது டிசர்ட் அணிவது, ஸ்டைல்களை கடைப்பிடிப்பது என செயல்பட்டதால் விஜயகாந்த் மீதும் ஈர்ப்பு வந்தது. அவரது ரசிகராக மாறினேன்.

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பதே எங்கள் தாரக மந்திரம். ஜெயலலிதா, கருணாநிதி, போன்ற பெரிய தலைவர்களின் வாழ்க்கையே கடைசி காலத்தில் மாறிவிட்டது. எனவே வாழும் காலத்தில் நல்லதை செய்ய வேண்டும்…

Muthuraj Thangaswami

1984-ல் இருந்து இருந்து ரசிகர் மன்றத்தை இயக்கி வருகிறோம். தலைவர் விஜயகாந்த் அவர்கள் ரசிகர் மன்றங்கள் மூலமாகவே நிறைய உதவிகள் செய்து வந்தார். 2006-ல் ரசிகர் மன்றங்களை கட்சியாக மாற்றி அறிவித்தபோது, கட்சி தொடக்கவிழா கூட்டத்தில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து மதுரைக்கு 200 பேர் கிளம்பி சென்றோம். எனக்கு மராட்டிய தொண்டர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

எங்கள் தாரக மந்திரமே இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கே, அன்னை மொழி காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம் என்பவைதான். அந்த கொள்கைகள் அடிப்படையில் கேப்டன் (விஜயகாந்த்) வழியில் நாங்கள் தொடர்ந்து ஏழை மக்களுக்கு உதவி செய்வோம். மொழி-இன பேதம் இல்லாமல் மக்கள் தொண்டு செய்து வருகிறோம்.” என்றார் முத்துராஜ்.

ரசிகராக இருந்து கட்சிப் பொறுப்புக்கு வந்த அவர், மறக்க முடியாத மக்கள் தொண்டு பற்றி மனம் திறந்தார்.

“2005 ஜூலையில் கடும் மழை வெள்ளத்தில் மும்பை மாநகரமே ஸ்தம்பித்தது. ஏராளமானவர்கள் வெள்ளத்தில் இறந்தார்கள். தமிழ் மக்கள் 11 பேர் வெள்ளத்தால் பலியானார்கள். பலரது உடல் கண்முன் வெள்ளத்தில் அடித்து செல்வதை பார்த்தோம்.
வீடுகளுக்கு மேல் வெள்ளம் சென்றது. அக்கம்பக்கத்தில் வசித்த 2 பேரின் உடல்கள் வெள்ளத்தில் இழுத்து செல்லப்படுவதை பார்த்து துடித்து, அவர்களது உடல்களை பிடித்து இழுத்து கயிறுகொண்டு கட்டி வைத்திருந்தோம். அருகில் இருந்த உயரமான சர்ச்சில் இருந்து கயிறுகட்டித்தான் உடல்களை விடிய விடிய பாதுகாத்தோம். நாங்களும் மாடியில்தான் வெள்ளத்தில் தவித்து வந்தோம். விடிந்ததும் வெள்ளம் மற்றும் சகதியில் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போர்வையை பாடைபோல கட்டி இறந்தவர் உடல்களை தோளில் சுமந்து சென்றோம். 1 கிலோமீட்டர் சென்றபிறகுதான் ஆம்புலன்ஸ் வருவதற்கான வழி இருந்தது. பின்னர் 4 சுடுகாடுகளுக்கு அந்த உடல்களை கொண்டு சென்றோம். அங்கெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் உடல்களை அடக்கம் செய்யவோ, எரிக்கவோ முடியவில்லை. பின்னர் வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று மின் மயானத்தில் உடல்களை எரித்து தகனம் செய்தோம்.DMDK Muthuraj with Mumbai BJP MLA Gopal Shettyதேசிய தமிழ் சங்கம் இந்த உதவிகளை திறம்பட செய்தது. அப்போது தே.மு.தி.க. ஆரம்பிக்கப்படவில்லை. நண்பர் எம்.ஜி.ஆர். தொண்டரான டாக்டர் வி.சுப்பிரமணியன் தேசிய தமிழ் சங்கத்தை நடத்தி வந்தார். அவரை மும்பை பொன்மனசெம்மல் என்று புகழ்வோம். அவர் தொடங்கிய அமைப்பில் நட்பால் இணைந்து சேவை செய்கிறேன். அதில் நான் பொது செயலாளராக உள்ளேன்.
கட்சி மூலம் செய்யும் பணிகளுக்கு கட்சி மேலிட உத்தரவுக்காக காத்திருக்க வேண்டும். எனவே கட்சி சாராமல் தொண்டு செய்வதற்காக இந்த தொண்டு அமைப்பை நடத்திவருகிறோம். இந்த தொண்டு இயக்கம் மூலம் உடனே எங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்வோம். ஏழை பெண்களுக்கு சேலைகள், தையல் எந்திரம், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட உதவிகளை இந்த தொண்டு அமைப்பு மூலம் செய்து உள்ளோம். தே.மு.தி.க. சார்பிலும் கேப்டன் பிறந்தநாளையொட்டி ஏராளமானவர்களுக்கு உதவி செய்துள்ளோம். அனாதை ஆசிரமங்களுக்கு சென்று உணவு, துணிமணிகள் கொடுப்போம்” என்றார்.

2005 கனமழையில் இறந்து மிதந்த 2 பேரின் உடல்கள் வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க கயிற்றில் கட்டி விடியவிடிய பிடித்திருந்தோம்… பின்னர் 5 சுடுகாடுகள் அலைந்து இறுதிக்கடன் செய்தோம்…

Muthuraj Thangaswami

உதவிகள் பல செய்தாலும் அவர் வசதி படைத்தவர் அல்ல. பிழைப்பு தேடி மும்பை வந்த அவர் உழைப்பால் உயர்ந்து பலருக்கும் உதவி செய்யும் வகையில் முன்னேறி உள்ளார். அதுபற்றி அவர் பேசுகிறார்…DMDK Vijaykanth Fan Muthuraj Family“1982-ல் மும்பை வந்தோம். பொருளாதார கஷ்டத்திற்காக கிடைத்த வேலைகளை செய்தோம். மாசம் 50 ரூபாய் கூலி கிடைத்தது. 91-ல் காதல் திருமணம் செய்தேன். தமிழ் பெண் என்றாலும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணத்தை இருவரது வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எனது மனைவி எனது எண்ணங்களை புரிந்து செயல்படுபவர் என்பதால் எனக்கு எல்லா வகையிலும் ஊக்கம் கொடுத்து செயல்பட்டார். நாங்கள் மெல்ல மெல்ல முன்னேற தொடங்கினோம். 1993ல் பிளாஸ்டிக் டையிங் எந்திரம் மூலம் சிறுசிறு பொருட்களை தயாரிக்கும் தொழில் தொடங்கினேன். 1993-ல் மூத்த மகன் பிறந்தான். அது வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியையைும், மாற்றத்தை அடைந்தேன். 94-க்கு பிறகு தொழில் வளர்ச்சி அடைந்தேன். அதன் பின்னர் சொந்தபந்தங்கள் தேடி வர ஆரம்பித்தனர்.
நாங்கள் பெண்களுக்கான ஹேர்பேண்ட், சடை மாட்டி உள்ளிட்ட பலவிதமான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தேன். ஆரம்பத்தில் தொழிலில் நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினார்கள். அப்போது சுமார் 8 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனது மனைவிதான் என்னை சமாதானப்படுத்தி ஊக்கப்படுத்தி அந்த இழப்பில் இருந்து மீண்டுவர உதவியாக இருந்தார். தொழில் வளர்ச்சி அடைந்தபோது சுமார் 15 பேருக்கு வேலை கொடுத்தேன். 2005 வெள்ளத்தில் எனது எந்திரங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மீண்டும் நஷ்டத்தில் மாட்டிக்கொண்டேன். அப்போது 2006-ல் முருக்கு கம்பெனி ஆரம்பித்து கொஞ்சம் நஷ்டம் அடைந்தேன். பின்னல் 2006-ல் பிளாஸ்டிக் பொருளை செய்யும் ஆட்டோமேட்டிக் எந்திரம் வாங்கி மீண்டும் தொழில் வளர்ச்சி அடைந்தோம். இப்போது கொரோனாவால் கொஞ்சம் தொழில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் 5 பேருக்கு வேலை வழங்கி வருகிறேன். வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது ” என்றார்.

கட்சி தொடங்கிய 2005-ல் இருந்து அதில் இருக்கிறோம். எனது சேவைகளை பார்த்து பா.ஜ.க., சிவசேனா என பல்வேறு பெரிய கட்சிகளில் இருந்தும் அழைப்பு விடுத்தார்கள். ஆனால் கேப்டன் கட்சியில் இருந்தே பணியாற்றுகிறேன். அதுவே எனக்கு திருப்தியாக உள்ளது. வேறு எங்கும் செல்ல மாட்டேன்.
அடுத்தகட்ட பணிகள் என்ன என்று அவரிடம் கேட்டபோது, “
நண்பர் ஒருவர் ெஜயமங்களம் சேரிட்டபிள் டிரஸ்ட் ஆரம்பிக்கிறார். அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய உள்ளோம். வரும் தமிழ் புத்தாண்டில் அதை தொடங்க உள்ளோம். தொடர்ந்து தே.மு.தி.க. மூலமும், தேசிய தமிழ் சங்கம் மூலமும் மக்களுக்கு எங்களால் இயன்றதை செய்வோம். மும்பை உள்ளாட்சி தேர்தலையும் எதிர்கொள்ள இருக்கிறோம்.” என்றார்.

கட்சி தலைமையுடன் உள்ள நெருக்கம் பற்றி கேட்டபோது

கேப்டன் எளிமையாக பழகுவார். இலங்கையை சேர்ந்த நண்பர் ஒருவரை, கடிதம் கொடுத்து கேப்டனை சந்திக்க அனுப்பி வைத்தேன். அவர் தமிழர் நிலை பற்றி பாடல் எழுதியிருந்தார். அதை இசையமைத்து வெளியிட உதவி கேட்டிருந்தார். அதை வெளியிட ஏற்பாடு செய்தோம். கட்சி தொடங்கும் முன்பு இந்த இசை ஆல்பம் தயாரித்தோம். அதை கட்சி தொடங்கியதும் விஜயகாநத் முன்னிலையில் வெளியிட்டோம். பின்னர் விஜயகாந்த் பற்றி அவர் சில பாடல்களை எழுதினார். அதையும் ஆல்பமாக தயாரித்தோம். மும்பை வரும்போது கேப்டனை சந்திப்போம். இயல்பாக பழகுவார்” என்றார்.

மும்பை அரசியல் சூழல் மற்றும் தே.மு.தி.க. வளர்ச்சி பற்றி, “மும்பையில் ஆட்சி மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது. உத்தவ் தாக்கரே, சரத்பவார் போன்ற பெரிய தலைவர்கள் மக்கள் நலனுக்கான திட்டங்களை பெரிய அளவில் செய்யவில்லை. அது வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். மேலும் மும்பையில் கணக்கில்லாத சாதிய அமைப்புகள் தோன்றி வளர்ந்து வருகின்றன. அது ஆபத்தானது. இளைஞர்கள் மனதில் அவை வெறுப்பை வளர்த்து வருகின்றன. சாதி மத அமைப்புகள் வளர்வது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

தே.மு.தி.க. ஆரம்பகாலத்தில் இருந்ததுபோன்றே கட்டு கோப்பாக செயல்பட்டு வருகிறோம். கட்சி தொடங்கியபோது புதிதாக பதவி ஆசையோடு வந்தவர்கள்தான் கேப்டனின் உடல்நலம் குன்றியபோதும், சறுக்கல்களின்போதும் கட்சியைவிட்டு விலகிப் போயிருக்கிறார்கள். ஆனால் கேப்டன் ரசிகர்கள் தொடர்ந்து கட்சியில் செயல்பட்டு வருகிறோம். மும்பை தமிழர்கள் தவிர்த்து மற்ற மராட்டிய மக்களும் எங்கள் இயக்கத்தில் உள்ளார்கள். நாங்கள் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளுக்காக முதல் மந்திரிகளையும் நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஜல்லிக்கட்டு தடை இருந்த சமயத்திலும் தே.மு.தி.க. மும்பையில் போராட்டம் நடத்தியது.” என்றார்.DMDK Muthuraj Familyவாழ்க்கை பயணத்தை பற்றி மனம் திறந்த அவர், “பெரிய பெரிய ஆட்களின் நிலையே மாறிவிடும். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நிலையே எப்படி மாறியது என்று நாம் பார்த்தோம். எவ்வளவோ, பணம் புகழ் இருந்தும் இறுதிக்காலம் எவ்வளவு சிரமமாக மாறியது என பார்த்தோம். தலைவர் விஜயகாந்தும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே மனிதனின் வாழ்வு நிலையற்றது. வாழும் கலத்தில் நம்மால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். அதுவே வாழ்க்கை நமக்குத் தரும் பாடம்” என்று தத்துவார்த்தமாக முடித்தார் முத்துராஜ்.

சொந்த வாழ்க்கை பற்றி பேசிய அவர், “மராட்டியம் நிறைய தமிழர்களை வாழ வைத்த பூமி. நானும் 50 ரூபாய் சம்பளத்தில் இருந்து இன்று நல்ல நிலைமையில் முன்னேற காரணமாக இருந்துள்ளது. எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. அப்பாவின் வேலை காரணமாக சேரன்மகாதேவியில் நீணடகாலம் வசித்தோம். எனவே சொந்த ஊருக்கும், குலதெய்வம் கோவிலுக்கும் அவ்வப்போது வந்து செல்வோம். 1982-ல் மும்பைக்கு வந்த நாங்கள் இப்போது மல்லாடு ஒரளத்தில் வசித்து வருகிறோம். வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது.

எஙகள் குடும்பத்தில் என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா மற்றும் ஒரு தங்கை உள்ளனர். எனது மனைவி பெயர் விஜயலட்சுமி, மூத்த பையன் தமிழ்ராஜ், இரண்டாவது பையன் பிரேம்குமார். இருவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளது. பேரன்பேத்தி மற்றும் உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.” என்றார்.
முத்துராஜின் வாழ்வும், தொண்டும் மேலும் வளரும் என வாழ்த்துவோம்…

Related Post

2 thoughts on “வெள்ளத்தில் வாழ்க்கை அடித்து சென்றபோதும் ஓடியோடி உதவி செய்தவர் – தே.மு.தி.க. முத்துராஜ்.”
  1. அருமை மிகவும் துள்ளியமான பதிவு
    மும்பை தமிழ் மக்கள் சேனல் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *