[ad_1]
நாம் விரும்புகிறோமோ இல்லையோ தண்ணீர் என்பது முக்கியமான சந்தைப் பொருளாக மாறிவிட்டது. இந்திய சந்தையில் பல முக்கியமான வெளிநாட்டு பிராண்டுகள் இருந்தாலும் பிஸ்லரி தவிர்க்க முடியாத சந்தையை வைத்திருக்கிறது. பிஸ்லரியின் வெற்றிக்கதையைப் பார்ப்பதற்கு முன் ஒரு சிறிய ப்ளாஷ்பேக்.
பிஸ்கட் தயாரிப்பு To குளிர்பானம் தயாரிப்பு…
குஜராத்தில் இருந்து ஒரு குடும்பம் மும்பைக்கு வருகிறது. டெய்லர் வேலை பார்க்கும் அவருக்கு ஐந்து மகன்கள். இந்த ஐந்து மகன்களும் நன்றாகப் படித்தனர். இந்தச் சகோதரர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான், பார்லி நிறுவனம். 1922-ம் ஆண்டு இவர்கள் பார்லே நிறுவனத்தை உருவாக்குகிறார்கள். 1939-ம் ஆண்டு பார்லேஜி பிஸ்கட் தயாரிப்பு தொடங்கப்படுகிறது.
இந்தியாவில் சாப்பாட்டுக்கு கஷ்டம் என்னும் சூழலில் பிஸ்கட் விற்பதெல்லாம் பெரிய சவாலாக இருந்த சமயம் அது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிஸ்கட்டுக்கு தேவை ஏற்பட்ட நிலையில், அந்த நிறுவனம் அடுத்த கட்டத்துக்குச் சென்றது. சகோதரர்கள் உழைக்கத் தயாராக இருந்ததால், தொழிலை விரிவுபடுத்துகின்றனர். லிம்கா, தம்ஸ் அப் எனக் குளிர்பானத்திலும் இவர்களின் குடும்பம் தொழிலை விரிவுபடுத்தியது.
1954-ம் ஆண்டு குடும்பத்தின் பெரியவர் மறைந்துவிடுகிறார். சகோதரர்கள் நிறுவனத்தை இணைந்து நடத்துகிறார்கள். இப்போது ஒரு சிக்கல். நிறுவனத்தையும் தொழிலையும் மும்பைக்குள்ளே நடத்த வேண்டும் என்பது பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் மாற்றி யோசிக்கிறார்.
பிஸ்கட்டை ஒரு ஆலையில் மட்டுமே தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்ய முடியும். ஆனால், குளிர்பானத்தை ஒவ்வோர் ஊரிலும் தயாரித்தால்தான் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல முடியும் என ஒரு சகோதரர் கூறுகிறார். ஆனால், மும்பைக்கு வெளியே பிசினஸைக் கொண்டு செல்ல மற்ற நால்வருக்கும் விருப்பம் இல்லை. அதனால் அந்த ஒருவருக்கு குளிர்பானத் தொழில் கிடைக்கிறது. (இந்த ஒருவர்தான் ரமேஷ் சவுகானின் அப்பா) மற்றவர்கள் பார்லே நிறுவனத்தைக் கவனித்துக்கொள்கிறார்கள்.
கோக கோலாவின் வருகை…
ரமேஷ் சௌகான் குளிர்பானம் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. 1977-ம் ஆண்டு கோக கோலா இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது. அதனால் விற்பனை வேகமாக உயர்கிறது. இந்தச் சமயத்தில் மாசா உள்ளிட்ட புது பிராண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆனால், 1991-ம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் இந்தியாவில் செயல்பாட்டைத் தொடங்கத் திட்டமிட்டன. முதலில் பெப்சி வந்தது. சில ஆண்டு இடைவெளியில் கோக கோலா வந்தது. பெரும்பாலான பிரான்ஸைசிகள் கோககோலாவுடன் இணைய விரும்பின. அதனால் அனைத்து பிராண்டுகளும் கோக கோலாவுக்கு 1993-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. சுமார் 400 கோடி ரூபாய்க்கு இவை கோக கோலாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. தம்ஸ் அப், லிம்கா, கோல்ட் ஸ்பாட், மாஸா, சிட்ரா உள்ளிட்ட ஐந்து பிராண்டுகள் விற்பனை செயய்ப்பட்டன.
அந்த சமயத்தில் கோக கோலா வாங்காமல் விட்ட ஒரு பிராண்ட் பிஸ்லரி. அதுதான் தற்போது தண்ணீர் பிரிவு விற்பனையில் முக்கியமான நிறுவனமாக விளங்குகிறது.
இத்தாலிகாரரிடம் ரூ.4 லட்சம் தந்து…
இத்தாலியைச் சேர்ந்தவர் தொடங்கிய பிராண்ட் இது. ஆனால், இந்தியாவில் சரியாகச் செயல்பட முடியவில்லை என்பதால், 1969-ம் ஆண்டில் ரூ.4 லட்ச ரூபாய்க்குக்கு விற்பனை செய்யப்பட்டது.
அந்தக் காலத்தில் தண்ணீரை விற்பனை செய்வதா, தண்ணீரை விற்பனை செய்தால் யார் வாங்குவார்கள் என்பதுதான் நிலையாக இருந்தது. இதர பிராண்டுகள் இருந்ததால், மற்றவற்றுடன் இணைந்து செயல்பட்டன. தற்போது எந்த பிராண்டும் இல்லை என்பதால், பிஸ்லரியில் மட்டுமே ரமேஷ் சௌகான் முழு கவனமும் செலுத்தினார்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஐரோப்பாவில் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு பெரிதாக இல்லை. ஆனால், அதன்பிறகு தண்ணீரின் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்கள். அதே போன்றதொரு சூழல் இந்தியாவிலும் வரும் என ரமேஷ்சௌகான் கருதினார்.
1991-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியர்கள் பலர் வெளிநாடு செல்லத் தொடங்கினார்கள். வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கினார்கள். மக்களின் வருமானம் பெருக தொடங்கியதால், தூய்மையான நீரை பணம் கொடுத்து வாங்க முன்வந்தனர். அதனால் பிஸ்லரி விற்பனையாகும் நகரங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருந்தது.
வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்குத் தேவையான 20 லிட்டர் கேன் அறிமுகம் செய்யப்பட்டது. (பின்னாள்களில் சிக்கல் வரும்போது இதன் விலையைக் கடுமையாகக் குறைத்து சந்தையை தக்கவைத்தது.)
அதே சமயத்தில் போட்டியும் வளர்ந்தது. வண்ணம் இல்லாத, வாசனை இல்லாத, சுவை இல்லாத நீரை விற்பனை செய்வது எளிதாக இல்லை. சிறு நகரங்களில் புதிய பிராண்டுகள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருந்தன. தண்ணீர் விற்பனையில் லாபம் அதிகமாகக் கிடைப்பதால், உள்ளூர் பிராண்டுகளுக்கு சந்தையில் அதிக முக்கியத்துவம் இருந்தன. இதைச் சமாளிக்க தொடர்ந்து பல புதுமைகளைச் செய்தது பிஸ்லரி.
கண்ணாடி பாட்டிலை பிளாஸ்டிக் பாட்டிலாக மாற்றியது. 5 ரூபாய்க்கு அரை லிட்டர் என அறிமுகம் செய்தது. இந்த புது முயற்சி, விற்பனையை சுமார் 400% அளவுக்கு ஒரே ஆண்டில் உயர்த்தியது. இதுபோல தேவைக்கு ஏற்ற புதுமைகளைச் செய்து கொண்டே இருந்தது. உள்ளூர் நிறுவனங்களை சமாளித்து வந்த அதே வேளையில் வெளிநாட்டு நிறுவனங்களும் களம் புகுந்தன. கின்லே, அக்வாபினா உள்ளிட்ட நிறுவனங்களும் இந்திய சந்தையில் களம் இறங்கின.
மார்க்கெட்டிங் முக்கியம் பாஸ்…
காலத்துக்கேற்ற மார்க்கெட்டிங் யுக்திகளை செய்ததால் மட்டுமே பிஸ்லரி தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. தண்ணீர் குறித்த விழிப்புணர்பு தொடர்ந்து ஊடகங்களில் உருவாக்கிக்கொண்டே இருந்தது. வாட்டர் பாட்டிலின் டிசைன் மற்றும் வடிவமைப்பைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் போட்டியாளர்களிடம் இருந்து தனித்து தெரிவதற்காக மொத்த லோகோவையும் மாற்றியது. நீல வண்ணத்தில் இருந்த பிராண்டை, பச்சை வண்ணத்தில் மாற்றியது பிஸ்லரி. 2006-ம் ஆண்டு மொத்தமாக பச்சை வண்ணத்துக்கு பிராண்ட் மாறியது.
இது மட்டுமல்லாமல், ஹிமாலயன் வாட்டர் மற்றும் குளிர்பானங்களையும் அறிமுகம் செய்தது. தவிர, 250 எம்.எல். பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஹோட்டல்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து பிராந்திய மொழிகளில் விளம்பரம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து `பாட்டிலில் அடைக்கப்பட்ட அனைத்தும் பிஸ்லரி அல்ல’ என்னும் கேம்பைன் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தியாவில் தண்ணீர் சந்தை என்பது ஆண்டுக்கு 20% அளவுக்கு வளர்ந்துவரும் பிரிவாக இருக்கிறது. அதனால் இந்த சந்தையைப் பிடிப்பதற்கு ஆயிரக்கணக்கான பிராண்டுகள் போட்டி போடுகின்றன. இருந்தாலும் பிஸ்லரி முதல் இடத்தில் இருக்கிறது.
(திருப்புமுனை தொடரும்)