[ad_1]
இந்தியாவில் ஏசி விற்பனை அதிகரிக்கும் நிலையில், ஏசி நிறுவனங்களில் நம்பர் 1 இடத்தில் வோல்டாஸ் உள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் வோல்டாஸ் நிறுவனத்தின் விற்பனை 160 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வீடுகளுக்கான வோல்டாஸ் ஏசிகள் விற்பனையில் 170 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் முன்னணி பிராண்டாக உள்ள வோல்டாஸ் ஏசி சந்தையில் 25.4 சதவீதமாக உள்ளது. இவ்வளவு வலிமையான நிலையில் உள்ள வோல்டாஸ் நிறுவனம் மீண்டெழுந்த கதையைப் பார்ப்போம்.
வோல்டாஸ் ஆரம்ப காலகட்டங்களில் ஏர்கண்டிஷனர் உற்பத்தியில் இந்தியாவில் தனித்திறனுடன் முன்னணியில் இருந்தது. 1991-க்குப் பிறகு சாம்சங், வேர்பூல் என பல போட்டியாளர்களை வோல்டாஸ் சந்தித்தது. வோல்டாஸ் பழைய பாணி விண்டோ ஏசிகளையே பெருமளவு விற்பனை செய்து வந்தது. இந்தநிலையில் சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்களின் ஸ்பிளிட் ஏசிகள் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் வோல்டாஸ் பெரும் சரிவை சந்தித்தது. இந்திய ஏசி சந்தையில் 40 சதவீதத்தை கையில் வைத்திருந்த வோல்டாஸ் நிறுவனம் 2001-ம் ஆண்டில் சந்தையில் வெறும் 6 சதவீதம் மட்டுமே கையில் வைத்திருந்தது. அதாவது, 1991-ல் 100 ஏசி விற்பனையானால் அதில் 40 வோல்டாஸ் ஏசியாக இருந்தது. அதுவே 2001-ம் ஆண்டில் 100 ஏசிகளில் வெறும் 6 ஏசி மட்டுமே வேல்டாஸ் ஏசி விற்பனையானது. மீதமுள்ள 94 சதவீத சந்தையையும் மற்ற முன்னணி நிறுவனங்கள் ஆக்கிரமித்தன.
இதன் பிறகு தான் வோல்டாஸ் தனது ஏசி விற்பனை சரிவு ஏன் என்ற ஆய்வை தொடங்கியது. இந்த ஆய்வில் தான் பல புதிய தகவல்கள் தெரிய வந்தன. இந்திய மக்களும், ஏசி சந்தையும் பெரிய அளவில் மாறி வருவது தெரிய வந்தது. ஏசி என்பது எப்படி வேலை செய்கிறது என்பதை தாண்டி, ஏசி மெஷின் எப்படி இருக்கிறது, வோல்டாஸ் ஏசி பற்றிய கருத்து மக்களிடம் எப்படி சென்றடைகிறது என்பதை பற்றி அடுத்தடுத்து பல சந்தை ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில், வோல்டாஸ் நிறுவனத்தை விடவும் பல நிறுவனங்கள் வர்த்தக நுட்பத்தில் முன்னணியில் இருப்பது தெரிய வந்தது. அதாவது வோல்டாஸின் விண்டோஸ் ஏசியை மக்கள் டப்பா ஏசி கூறும் அளவுக்கு நிலைமை இருந்தது.
இதனையடுத்து விரிவான சந்தை ஆய்வுக்கு பிறகு வோல்டாஸ் நிறுவனம் உலகின் முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனமான பெடர்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் விரிவான தயாரிப்பு திறன், தொழிற்சாலை, போன்றவை பெரிய அளவில் வோல்டாஸ் நிறுவனத்துக்கு கைகொடுத்தது. இதன் மூலம் வோல்டாஸ் ஏசியில் பியூரிபிகேஷன் பில்டர், எக்னாமி மோட் என பல புதிய ஆப்ஷன்கள் கொண்டு வரப்பட்டன. இதுமட்டுமின்றி வோல்டாஸ் தயாரிப்பு செலவை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் இந்தியாவில் 15 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் தான் அதிகமான மக்களை ஏசி வாங்க வைக்க முடியும் என்பது சந்தை ஆய்வில் தெரிய வந்தது.
அதனால் வோல்டாஸ் நிறுவனத்தின் ஆலை தானேயில் இருந்து தாத்ராவுக்கு சென்றது. தாத்ரா தொழில் பூங்காவில் தயாரிப்புகளுக்கு அரசு வரி விலக்கு வழங்கியது. எனவே இந்த வரி விலக்கை மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஏசி விலையை குறைக்க முடியும் என்பதால் ஆலையை இடம் மாற்றியது வோல்டாஸ்.
அடுத்ததாக வோல்டாஸ் நிறுவனத்தின் உலகளாவிய கூட்டாளிகள் மலேசியா, தைவான், சீனாவில் 0.6 டன் ஏசிகளை தயாரித்தனர். இதற்கான செலவு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10,000 என்ற அளவில் இருந்தது. எனவே 10 ஆயிரம் ரூபாயில் சிறிய வகை ஏசியை அறிமுகம் செய்தால் ஏர்கூலர் வாங்கும் மக்களை ஏசி வாங்க வைக்க முடியும் என்ற சிந்தனை வோல்டாஸ் நிறுவனத்துக்கு உதித்தது. இந்த புதிய உத்தியால் சிறிய ஏசியின் வருகையால் ஏர்கூலர் வாங்க விரும்பிய மக்களை ஏசி வாங்க வைக்க முடிந்தது.
பின்னர், குறைந்தபட்ச மின்சார நுகர்வு என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தியாவில் நடுத்தர குடும்பங்களில் இந்திய நுகர்வோருக்கு 1000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் மட்டுமே ஏசிக்கு மின்சாரம் செலவு செய்யும் திறன் இருப்பது சந்தை ஆய்வில் தெரிய வந்தது. எனவே குறைவான மின்சார நுகர்வு கொண்ட ஏசிகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்பதை வோல்டாஸ் உணர்ந்து கொண்டது.
இதற்கு ஏற்ப வோல்டாஸின் விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டன. ஓய்வூதியம் வாங்கும் நபர்கள் கூட செலவு செய்யும் திறன் கொண்ட பொருளாக வோல்டாஸ் ஏசி விளம்பரப்படுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி இண்டலிஜெண்ட் கூலிங் என்பது போன்ற விளம்பரங்கள் இந்திய நுகர்வோரை பெரிய அளவில் வோல்டாஸ் நிறுவனம் ஈர்த்தது. இன்வெர்ட்டர் ஏசி போன்றவையும் இந்தியர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியது. அதுபோலவே இந்தியர்கள் மனதில் ஏசி என்பது வெயில் காலத்திற்கான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கொளுத்தும் கோடையை சமாளிக்க ஏசி என்ற அளவில் விளம்பரங்கள் இருந்தன. ஆனால் இதனை மாற்றி எந்த காலநிலைக்கும் தேவையான ஏசி என வோல்டாஸ் நிறுவனம் விளம்பரம் செய்தது.
இந்த மாற்றங்களால் 2001-ம் ஆண்டில் 6 சதவீதமாக குறைந்த வோல்டாஸ் விற்பனை 2012-ம் ஆண்டில் 18.3 சதவீதமாக அதிகரித்தது. முதலிடத்தில் இருந்த எல்ஜி நிறுவனத்தின் சந்தை விற்பனை 2-வது இடத்துக்கு சென்றது. எல்ஜி நிறுவனத்தின் சந்தை விற்பனை 17.7 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு 2012-ம் ஆண்டில் இருந்து இன்று வரை வோல்டாஸ் நிறுவனம் தொடர்ந்து இந்திய ஏசி சந்தையில் முதலிடத்திலேயே தொடர்கிறது.
2012-ம் ஆண்டில் இந்திய ஏசி சந்தையில் 18.3 சதவீதமாக இருந்த வோல்டாஸின் பங்கு 2022-ம் ஆண்டில் 25.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் விற்பனையாகும் 4 ஏசிகளில் ஒன்று வோல்டாஸ் ஏசியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களின் ஏசி இந்தியாவில் வந்து விட்டாலும் இந்தியர்களின் மனம் கவர்ந்த ஏசியாக தொடர்கிறது வோல்டாஸ். இதற்கு உரிய நேரத்தில் மாத்தி யோசித்ததும், மக்களின் தேவை அறித்து திட்டங்களை வகுத்ததும்தான் முக்கியக் காரணம்.