தனது வீட்டுக்கு மளிகை பொருள் டெலிவர் செய்த ஸ்விக்கி ஊழியரிடம் இருந்து அச்சுறுத்தும் விதமாக வந்த வாட்சாப் மெசேஜ்களின் ஸ்க்ரீன்ஷாட்டைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பெண் ஒருவர். மேலும், தனது வாட்சாப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த ஸ்விக்கி ஊழியர் குறித்து ஸ்விக்கியின் உதவிக் குழுவிடமும் புகார் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பிராப்தி.
ஸ்விக்கி, ஜொமாட்டோ முதலான டெலிவரி சேவைகளின் நம்பர் மாஸ்கிங் தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளரும், ஊழியரும் இருவரின் செல்போன் எண்களும் பகிரப்படாமலே உரையாடிக் கொள்ள முடியும்.
இந்த விவகாரத்தில் வாடிக்கையாளரான பிராப்தி ஸ்விக்கி ஊழியருக்குத் தனது call log மூலமாக போன் செய்துள்ளார். இந்த எண்ணைப் பயன்படுத்தி ஸ்விக்கி ஊழியர் பிராப்தியின் வாட்சாப்பிற்கு, மிஸ் யூ’,
நைஸ்.. யூ ஆர் பியூட்டி’ முதலான மெசேஜ்களை அனுப்பி தொல்லை அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிராப்தி, `பெரும்பாலான பெண்களுக்கு இது புரியும் எனக் கருதுகிறேன்.. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் செயலி மூலமாக மளிகை டெலிவர் பெற்றேன். இன்று அந்த டெலிவரி ஊழியர் எனது வாட்சாப்பிற்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுக்கிறார்.. இதுபோல ஒரு நிகழ்வு இவ்வாறு நடப்பது இது முதல் முறையோ, கடைசி முறையோ அல்ல’ எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவாகரம் தொடர்பாக புகார் அளித்தும் ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து போதிய உதவி கிடைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
`உங்கள் செயலி மூலமாக நிகழும் பாலியல் துன்புறுத்தலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ எனவும் பாதிக்கப்பட்ட பிராப்தி ஸ்விக்கி நிறுவனத்தில் முறையிட்டுள்ளார்.
`இதே போல ஏற்கனவே ஒரு சம்பவத்தில் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காததால், பிரச்னை கைகலப்பாக மாறியது.. எனவே இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை கோரியுள்ளேன்’ எனக் கூறியுள்ள அவர் இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக இரவு நேரத்திலும், வீட்டில் தனியாக இருக்கும் போதும் உணவு டெலிவரி மேற்கொள்ள அச்சமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இந்த விவகாரம் தொடர்பான அப்டேட்டைப் பகிர்ந்து கொண்ட பிராப்தி ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாகக் கூறியுள்ளார். `என் கோரிக்கையை முழுமையாக கேட்ட பின், இதுபோல மற்றொரு சம்பவம் நிகழாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஸ்விக்கி தரப்பில் உறுதியளித்துள்ளனர்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது செல்போன் எண்ணை எப்படி டெலிவர் ஊழியர் பெற்றார் என்பது குறித்து பேசிய பிராப்தி, `ஒவ்வொரு முறை டெலிவரி ஊழியருக்கு செயலி மூலமாக அழைக்கும் போது மட்டுமே நம்பர் மாஸ்கிங் வேலை செய்யும்.. அதற்கு வெளியில் இருந்து அழைத்தால், அவர்களால் நமது எண்ணைப் பார்க்க முடியும்’ எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவின் கமெண்ட்களின் ஸ்விக்கி நிறுவனம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிராப்தி காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும் எனவும் பலர் தெரிவித்திருந்தனர்.
ஸ்விக்கி, தொல்லை மெசேஜ்கள் அனுப்பிய நபரை தங்கள் நிறுவனத்தில் இருந்து நீக்கியுள்ளது