புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே நிறைய புது வரவுகள் வீட்டுக்குள் வந்து சேரும். அவற்றுள் நாட்காட்டிகள் (காலண்டர்கள்), நாட்குறிப்புகள் (டைரிகள்) போன்றவை மிக முக்கியமானவை. நாட்குறிப்புகளைக்கூட அனாவசியம் என்று ஒதுக்கிவிடலாம், ஆனால் நாட்காட்டிகள் என்பவை ஒவ்வொரு வீட்டுக்கும் அத்தியாவசிமான, தவிர்க்கமுடியாத ஒன்று.
ஆண்டு முழுவதும் தேவைப்படும் நாட்காட்டியைப் பணம் கொடுத்து வாங்குபவர்கள் மிகவும் குறைவே. ஏனெனில் சமூகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அது இலவசமாக அல்லது ஓசியில் அல்லது விலையில்லாமலேயே கிடைத்துவிடுகிறது. பொருளாதாரத்தில், தகுதியில், செல்வாக்கில், பெருமையில் எவ்வளவு உயர்ந்திருந்தாலும் நாட்காட்டியை வேண்டாம் என்று சொல்பவரை இந்த நானிலத்தில் காண்பது அரிது. இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், ஓசி காலண்டர் வாங்குவதில்தான் அவர்களின் மனம் நிம்மதியடைகிறது.
அரசரே ஆனாலும், வரலாறு முக்கியம் அமைச்சரே என்பது போல காலண்டர் முக்கியம் அமைச்சரே என ஓசி காலண்டருக்கு ஆசைப்படுவது இயற்கையே. ‘கப்பு முக்கியம் பிகிலு’ என பாக்கி சில்லறையைக்கூட வாங்காமல் டிசம்பர் இறுதியில் அனைவரும் மக்கள் காலண்டர் வாங்க முயல்வதே இதற்குச் சான்று. நமக்கெல்லாம் புத்தாண்டுக்கென யார் பரிசு தருகிறார்கள்? நமக்கு வாழ்வில் கிடைக்கும் ஒரே பரிசு அதுமட்டும் தானே? விலையில்லா நாட்காட்டிகள் எப்படிக் கிடைக்கின்றன,எதற்குக் கொடுக்கப்படுகின்றன சற்று விரிவாய்ப் பார்க்கலாம், வாருங்கள்.
இலவச நாட்காட்டிகள் எப்படிக் கிடைக்கின்றன?
பொதுவாக நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனத்தோடு தொடர்பு உள்ளவர்களுக்கும் இலவச நாட்காட்டிகளை வழங்குகின்றன. நிறுவனங்கள் அல்லாமல் கட்சிகள், இயக்கங்கள் போன்றவையும் தங்களைச் சார்ந்தவர்களுக்கு நாட்காட்டிகளை வழங்குகின்றன. வழக்கமாக மக்கள் பொருட்கள் வாங்கும் மளிகைக்கடைகள், உணவகங்கள், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், நகைக்கடைகள், மின்சாதனப் பொருட்கள் போன்ற பெரும்பாலான வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு நாட்காட்டிகளை வழங்குகின்றன.
கேபிள் டிவி, காப்பீட்டு நிறுவன முகவர், உள்ளூர் அரசியல்வாதிகள், கடன் வாங்கியிருக்கும் நிதி நிறுவனங்கள், அடகுக் கடைகள். கல்வி நிறுவனங்கள் என எந்தவொரு தனிமனிதனுக்கும் தான் தொடர்புடைய ஏதாவது ஒரு வழியாக விலையில்லா நாட்காட்டிகள் வீட்டுக்குள் வந்துவிடுகின்றன. அப்படி இல்லையென்றாலும் என்னப்பா, காலண்டர்லாம் இல்லையா எனக் கேட்டு வாங்கிவிடும் தன்மை பெரும்பாலும் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது. என் தங்கம் என் உரிமை என பிரபு விளம்பரத்தில் முழங்குவாரல்லவா, அதைப்போல் என் காலண்டர், என் உரிமை என மக்கள் விழிப்புணர்வு உடையவர்களாகவே இருக்கிறார்கள். இதனால் தனி ஒரு மனிதனுக்கு நாட்காட்டி இல்லாத சூழ்நிலை இத்தரணியில் வருவது மிக மிக கடினமே!
இலவச நாட்காட்டிகள் எதற்குக் கொடுக்கப்படுகின்றன?
இலவச நாட்காட்டிகள் எதற்குக் கொடுக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு ஒரு வரியில் பதில் வேண்டும் என்றால் என்றால்’ காரணம் இல்லாமல் காரியம் இல்லை’ என்றுதான் சொல்லவேண்டும். ஒரே சொல்லில் பதில் வேண்டுமென்றால் ‘விளம்பரம்’ என்றுதான் சொல்லவேண்டும்.
தங்களை வருடம் முழுவதும் விளம்பரப்படுத்த, வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க, அதிகரிக்க, வணிகத்தைப் பெருக்கிக்கொள்ள உதவும் அரிய வாய்ப்புதான் இந்த விலையில்லா நாட்காட்டி வழங்குதல். மற்ற விளம்பரங்கள் செய்ய ஆகும் பணச்செலவைவிட இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவே. செய்தித்தாள், வானொலி, கானொளி வழியாக விளம்பரம் செய்தால் அது குறிப்பிட்ட கால அளவே விளம்பரமாகும். ஆனால் ஆண்டு முழுமைக்குமான அம்சமான விளம்பரம் இலவசமாக நாட்காட்டிகளை வழங்குவதன் மூலம் கிடைத்துவிடுகிறது.
வருட துவக்கத்தில் கொடுக்கப்படும் நாட்காட்டி தருகின்ற நன்றி உணர்வால் விட்டுவிலகாத வாடிக்கையாளர்கள் பலர் உண்டு. பல பிரபல அரசியல்வாதிகள், தாங்கள் பெரும்புள்ளியாக ஆவதற்கு வைக்கின்ற ஆரம்பப் புள்ளிதான் இந்த இலவச நாட்காட்டிகள். நாட்காட்டி தருபவர்கள் நல்லாட்சி தரக்கூடும் என்ற நம்பிக்கையை விதைக்கவும் இது பயன்படும். இலவசமாக வழங்கப்படும் எல்லா நாட்காட்டிக்குப் பின்னாலும் அவர்களின் வளர்ச்சிக்கான விளம்பரம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும்.
நாட்காட்டியை வாங்க ஆர்வம் காட்டும் அன்பு நண்பர்களே, வீட்டில் எத்தனை நாட்காட்டி மாட்டியிருந்தாலும் ஒரு வருசத்துக்கு 365 நாள்தானே? நம்மால் நாட்காட்டியை, கடிகாரத்தை வாங்கமுடியுமே தவிர காலத்தை ஒருபோதும் வாங்கமுடியாதல்லவா? எனவே நாட்காட்டியின் தேதியைக் கிழிப்பதில் என்ன இருக்கிறது. அந்தத் தேதியில் நாம் என்ன செய்து கிழித்தோம் என்பதில்தானே எல்லாமும் அடங்கி இருக்கிறது!