மீண்டும் மஞ்சப்பை | பூமியைக் காக்கும் புதிய முயற்சி

meendum manjaipai say goodbye to plastic

மழைக்காலத்தில் ஊரெங்கும் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கும் காட்சியை நாம் அனைவரும் ஆங்காங்கே காண நேரிடும். அதற்கு என்ன மூல காரணம் என்று பார்த்தோமானால் அந்த வடிநீர் குழாய்களில் நெகிழிப்பைகள் உள்ளிட்ட குப்பைகள் நிறைந்து அடைத்துக் கொண்டிருக்கும். இவை மண்ணில் மக்கிவிடாத தன்மையைக் கொண்டிருப்பதால் மழைநீரை மண் உறிஞ்சுவது தடுக்கின்றன. மண்வளம், நீர்வளம் இவையும் இந்த நெகிழிப்பைகளால் பாதிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் இவை பெரும் பாதிப்பை உண்டாக்குகின்றன. இதைச் சாப்பிட்டு நோய் வந்து இறந்துபோகும் கால்நடைகள் ஏராளம். மக்களால் சராசரியாக 20 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு பிளாஸ்டிக் பைகள் மக்க எடுத்து கொள்ளும் காலம் பலநுாறு ஆண்டுகள் என்றால் இதன் வீரியத்தை நாம் உணரவேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களின் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்தச் சூழ்நிலையில் இதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அவசியமாகிறது. அதற்கான முன்னெடுப்பாக சுற்றுச்சூழலைக் காக்க நெகிழிப்பையை (பிளாஸ்டிக் பை அல்லது கேரிபேக்) விடுத்து மீண்டும் மஞ்சப்பையை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. க ஸ்டாலின்.

பிளாஸ்டிக் பை சுற்றுச்சூழலுக்கு கேடு என்று பரப்புரைக்குப் பிறகு துணிப்பைகளைக் கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அதை மேலும் அதிகரிக்கவே இந்த விழிப்புணர்வுப் பயணமாகும். நாம் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் சம அளவில் முக்கியத்துவம் தர வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு, மனிதகுலத்தை மீளாத துயரத்தில் ஆழ்த்துகிறது,எனவே சுற்றுச்சூழலுக்கு மிகக் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைத்தாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிறது.

துணிப்பை காலப்போக்கில் மக்கிவிடும். பிளாஸ்டிக் மக்காது. ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இன்று சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக அமைந்திருக்கிறது. பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் மண் கெடுகிறது. மண் கெட்டால் வேளாண்மை பாதிக்கிறது. கால்நடைகளும் இவற்றை உண்டு இறந்துபோகின்றன. நீர் நிலைகளில் வீசுவதால் நீர் மாசுபடுவதுடன் அங்குள்ள உயிரினங்களும் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு மடிந்து போகின்றன.அவற்றை எரிப்பதால் டையாக்சின் வேதிப்பொருள் காற்றில் கலந்து,  சுவாசக் கோளாறுகள், நுரையீரல் பாதிப்புகள் எற்படுகின்றன. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தவும், குறைக்கவும் தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

யூஸ் அண்ட் த்ரோ எனப்படும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. மக்கும் தன்மைகொண்ட இயற்கைக்கு உகந்த மாற்று பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுவிதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்கு இதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அரசு மட்டுமே நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாகக் கொண்டுவர முடியும்.
மஞ்சள் பையை அவமானமாகக் கருத வேண்டாம். சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள் பை என்பதை நிரூபித்துக் காட்டுவோம்  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மக்கள் தாங்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய, மஞ்சப் பைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசார இயக்கத்திற்கு, மீண்டும் மஞ்சப்பை என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அரசு என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதைப் பின்பற்ற மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எனவே மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம். மளிகைக்கடையோ, மருந்துக்கடையோ, காய்கறிக் கடையோ, கசாப்புக்கடையோ, பெரிய கடையோ, பெட்டிக்கடையோ எங்கு சென்றாலும் மஞ்சப்பையோடு செல்வோம், மாற்றத்தை உண்டாக்குவோம், இந்த மண்ணைக் காப்போம்!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *