“வேலைப் இழந்தபோது, அன்றாட பிழைப்புக்காக 15க்கும் மேற்பட்ட தொழில்களை நடத்தியவர்… இழந்த வேலையையும், உரிமையையும் பெறுவதற்காக இன்றளவும் போராடி தன்னம்பிக்கை போராளியாக வலம் வரும் ரெயில்வே ஊழியர் பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை, நம் அனைவரின் வாழ்க்கை போராட்டங்களுக்கும் ஒரு உத்வேகம் அளிக்கும் என்றால் மிகையில்லை.”
வாங்க அவரது வாழ்க்கைப் போராட்டம் வழியே… நம் பலரது அன்றாட வாழ்க்கை போராட்டங்களை சமாளிக்கும் வழியை அறிந்து கொள்ளலாம்…
உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்…
நான் பாலசுப்பிரமணியன் வயது 55 ஆகிறது. மும்பை ரெயில்வேயில் ஆபரேட்டிங் பிரிவில் பாயின்ட் மேனாக உள்ளேன். நெல்லை முக்கூடல் அருகே உள்ள காத்தபுரம் எனது சொந்த ஊர்.
உங்கள் சமூக சேவை பற்றி…
நான் நிறைய சமூக சேவை செய்தது இல்லை. ஆனால் என் கண்முன்னால் ஒரு தவறு நடந்தால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். மும்பையில் ஜே.பி. ஸ்டோர் மளிகை கடையில் பொருட்களை எம்.ஆர்.பி. விலையைவிட அதிகமாக விற்றார்கள். அதை எதிா்த்து வழக்கு போட்டேன். உடனே கடைக்காரர் வழிக்குவந்து வழக்கை திரும்ப பெறச் சொல்லி பொருட்களுக்கு இழப்பீடு தந்ததுடன் இன்றளவும் அவர் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பதில்லை. அதை நானே பலமுறை சென்று பார்வையிட்டுள்ளேன்.
வேறு தவறுகள் உங்கள் கண்ணில் பட்டதா?
மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இந்த கொரோனா காலத்தில் கெடுபிடியாக நடந்து கொண்டதை ஒருமுறை பார்த்தேன். அவர்கள் முக கவசம் போடாதவர்களை பிடித்து அபராதம் வசூலித்தார்கள். அப்போது சிலர் முக கவசம் கொண்டு மூக்கை சரியாக மூடவில்லை என்று காரணம் காட்டி அபராதம் போட்டார்கள். அவர்களை எதிர்த்தும் போராடினேன்.
உங்கள் வாழ்க்கையின் முக்கிய போராட்டம் என்றால் எதை சொல்வீர்கள்?
நான் ரெயில்வேயில் 1986ல் சேர்ந்தேன். 16 வருடங்கள் பணியாற்றிய பிறகு, எங்கள் நியமனம் செல்லாது என்று கூறி என்னையும், என்னுடன் சேர்ந்த 4 பேரையும் திடீரென பணிநீக்கம் செய்துவிட்டனர். அதை எதிர்த்து எங்கள் பணியாளர் மன்றம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஜெயித்தேன். அப்போது எங்களை பணிக்கு சேர்த்துக் கொள்ள தீர்ப்பு வந்ததுடன் 50 சதவீதம் அரியர் (பிடித்த தொகை) வழங்க உத்தரவிட்டனர். இதற்குள் 15 வருடம் ஓடிப்போய்விட்டது. இதை எதிர்த்து ரெயில்வே அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட, எந்த வசதியற்றும் இருந்த நான், ஓய்வு பெற்ற சி.டி.ஐ. அதிகாரி வசல்குமார் உதவியால் சுப்ரீம் கோர்ட்டு வழக்கையும் எதிர்கொண்டேன். அவர் எனது வழக்கு செலவுகளை ஏற்று நடத்தினார். நான் தீர்ப்பு வந்தபிறகுதான் செலவுத் தொகையை அவருக்கு வழங்கினேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் எங்களை பணியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டனர். ஆனால் 50 சதவீத அரியர் தொகையை மட்டும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இந்த வழக்கு முடிந்து நாங்கள் பணிக்கு சேர 20 வருடங்கள் ஆகிவிட்டது. 2017-ல் மீண்டும் பணிக்கு சேர்ந்து வேலை செய்கிறேன். இந்த வழக்கில் என்னுடன் பணியிழப்பு பெற்றவர்களுக்காகவும் சேர்த்தே நான் போராடினேன். எனது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை….
என்னது… இன்னும் போராட்டம் முடியலையா?
ஆமாம்… சுப்ரீம் கோர்ட்டு, 20 வருடம் வேலை இல்லாமல் இருந்த எங்களுக்கு 50 சதவீத அரியர் தொகை வழங்குவதை நிறுத்தக்கூறிவிட்டது. அந்தத் தொகையை பெறுவதற்காக இன்னும் வழக்கு நடத்துகிறேன். இந்த முறை எனது வழக்கிற்காக பார்ட்டி ஆப் பிரசன்ட் முறையில் எனக்காக நானே வக்கீல் இ்ல்லாமல் வாதாட இருக்கிறேன்… அதிலும் ஜெயிப்பேன்… அப்படியென்றால்தான் எனது 20 வருட போராட்ட வாழ்வுக்கு தீர்வு கிடைத்த மாதிரி இருக்கும்.
வேலை இழந்த 20 வருட காலத்தில் எப்படி போராடினீர்கள்
வேலை இல்லாத காலத்தில் வாழ்க்கை கொஞ்சம் போராட்டமாகத்தான் இருந்தது. அப்போது எனது அம்மா அப்பா மற்றும் என் குடும்பத்தினர் ரொம்ப சப்போட்டாக (ஆதரவாக) இருந்தனர். அவர்களின் ஆதரவுதான் வாழ்க்கையில் போராட வைத்தது. அந்த காலத்தில் நான் செய்யாத தொழில்களே இல்லை எனும் அளவுக்கு நிறைய தொழில்களை செய்துவந்தேன். பாம்பே முதல் கோவா வரை செல்லும் ரெயிலில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்துள்ளேன். ஒருநாள் பேனா விற்பேன், சில நாள் பெண்களுக்கான கைப்பை விற்பனை செய்வேன்.
பால் வியாபாரம் செய்துள்ளேன். பொருள் ஏற்றுமதி இறக்குமதி செய்துள்ளேன். விமான நிலையம், கப்பல், ரெயில் நிலையங்களில் வியாபாரம் செய்திருக்கிறேன்.
எதற்காக இத்தனை தொழில் செய்தீர்கள்?
வாழ்க்கையில் பணத்தின் அருமை தெரிய ஆரம்பித்த காலம் அது. ஒருநாள் தொழிலில் ரூ.100 சம்பாதிக்க முடிந்தால், இன்னொரு தொழில் செய்தால் ரூ.150 சம்பாதிக்க முடியுமா என போராடினேன். அதற்காக அவ்வப்போது தொழில்களை மாற்றினேன். ரெயிலில் ஒரே நேரத்தில் சுமார் 150 பேக்குகளை தூக்கிக்கொண்டு சென்று தினமும் 100 பேக்குகளையாவது விற்பேன். ஆனால் விலையையும் தாறுமாறாக விற்க மாட்டேன். 35 ரூபாய் பேக்குகளை, ரூ.50க்கு விற்பேன். மற்றவர்கள் என்றால் அதை ரூ.100கு விற்று இருப்பார்கள்.
வாழ்க்கையில் கஷ்டம் வந்தாலே பலரும் முடங்கிப் போகிறார்கள். உங்களை இவ்வளவு போராட தூண்டியது எது?
எனது வேலை இழப்பும், நமது உழைப்பை மற்றவர்கள் சுரண்டப் பார்க்கிறார்கள் என்ற வேதனையும் என்னை போராடத் தூண்டியது. மேலும் முயன்றால் முடியாதது இல்லை என்பதை எனது தாரக மந்திரமாக நினைக்கிறேன். எனவே துணிந்து போராடுவேன்.
போராட்ட காலங்களில் மிரட்டல் வந்ததுண்டா?
வேலையில்லாமல் இருந்தபோது ரெயில்வேயில் பொருட்களை விற்பனை செய்தபோது 2 போலீஸ்காரர்கள் என்னிடம் தகராறு செய்தார்கள். பொருட்களை விற்கவேண்டுமானால் எனக்கு காசு தர வேண்டும், இல்லாவிட்டால் இங்கு தொழில்செய்ய முடியாது என்று மிரட்டினார்கள். ஒருவர் ரூ.100 தான் என்னிடம் லஞ்சமாக கேட்டார். ஆனாலும் நான் உழைக்கும் பணத்தை மற்றொருவர் எளிதில் வாங்கிச் செல்வதா என என் மனம் ஒப்புக்கொள்ளவே இல்லை. எனவே நான் பணம் கொடுக்க மறுத்துவிட்டேன். வாக்குவாதம் செய்து தகாத முறையில் திட்டியதால் அந்த 2 போலீஸ்காரர்கள் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்து போராடினேன். இறுதியில் அவர்களை வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள். என் வேலையை காலி செய்ய நினைத்தவர்களின் வேலை காலியாகிப்போனது.
உங்கள் லட்சியத்தை அடைந்துவிட்டீர்களா?
சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் ஜெயிப்பேன். அதை 100 சதவீதம் உறுதியாக சொல்கிறேன். 50 சதவீத அரியர் தொகை கணிசமாக வரும். மேலும் 20 வருடம் வேலை இல்லாமல் செய்ததற்கான இழப்பீடாக ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். அதிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் கிடைக்கும் தொகையில் 25 சதவீதம் பொது சேவைக்கு செலவிடுவேன் என்று எனது மனைவியிடம் அக்ரிமென்ட் (ஒப்பந்தம் ) போட்டுள்ளேன். இன்னும் 5 வருடம் சர்வீஸ் உள்ளது. அதன்பின்னர் கிடைக்கும் ஓய்வூதியம் எனக்கு போதும். நான் வாங்கும் இழப்பீட்டில் பொது சேவை செய்வேன்.
தமிழக வாழ்க்கைக்கும், மும்பை வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள்…
மும்பை வாழ்க்கையில் குறையில்லை. என்ன இருந்தாலும் சொந்த ஊர் வாழ்க்கை தனி சுகம்தான். வேலை சர்வீஸ் முடிந்ததும் சொந்த ஊரில் குடியேறிவிடுவேன். பெற்றோருக்கும், ஊருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
வாழ்க்கை சுமையாக தெரியும்போது எங்கு செல்வீர்கள்?
திருச்செந்தூர், திருப்பதி சென்று வருவேன். எனக்கு குடும்பத்திருடன் ரெயிலில் செல்ல அனுமதி இருப்பதால் அவ்வப்போது வெளியில் சென்றுவருவோம் சமீபத்தில் பந்தர்பூர் நாராயணசாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வந்தேன். தாமிரபரணி புஷ்கரணி விழாபோல அங்கு நடந்த புஷ்கரணி விழாவில் தமிழகத்தை சேர்ந்த 200 துறவிகள் வந்திருந்தார்கள். நாங்களும் அங்கு சென்று சில நாட்கள் தங்கி விழாவில் பங்கெடுத்து திரும்பினோம்.
உங்களின் விருப்பமான பொழுதுபோக்கு என்றால் என்ன?
டி.வி. பார்ப்பேன், பிரண்ட்ஸ்களுடன் அரட்டை அடிப்பேன். வாரத்தில் ஒருநாள் கொஞ்சம் டிரிங்ஸ் அடிப்பேன். மதுகுடிப்பதை கூட நான் மனைவியிடம் மறைத்ததில்லை.
உங்கள் குடும்பத்தினர் பற்றி சொல்லுங்கள்?
நான் 35 வருடமாக மும்பை தாராவியில் வசித்துவருகிறோம். எனது மனைவி பெயர் முத்துசாரதி, எனது மூத்த மகன் விக்னேஷ். திருமணமாகிவிட்டது. அமேசான் நிறுவனத்தில் வேலைசெய்கிறார். இரண்டாவது பையன் நவநீதன், மோனோ ரெயில்வேயில் வேலை செய்கிறார்.
வாழ்வில் சுமையான தருணங்கள் ஏற்படும்போது திரு.பாலசுப்பிரமணியனின் போராட்டம் நமக்கு ஊக்கம் தரும் என்பதில் சந்தேகமேயில்லை…