[ad_1]
உடல் இளைப்பதில் தொடங்கி, உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுவது வரை அற்புத மருத்துவ குணங்களைக் கொண்டது வாழைத்தண்டு. ஆனாலும் வாழைத்தண்டில் என்ன சமைப்பது என்பதுதான் பலரின் கேள்வியும். ரசம் முதல் ஸ்நாக்ஸ் வரை, வாழைத்தண்டில் விருந்தே வைக்கலாம் என்பது தெரியுமா?
இந்த வார வீக் எண்டை வாழைத்தண்டு ஸ்பெஷலாக கொண்டாடுங்கள்.
வாழைத்தண்டு ரசம்
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒன்று
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 3 பற்கள்
ரசப்பொடி – சிறிதளவு
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கொத்தமல்லி நறுக்கியது – சிறிதளவு
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
நெய், கடுகு, சீரகம் – தேவையான அளவு

செய்முறை
வாழைத்தண்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு காய்ந்த மிளகாய், தக்காளி, பூண்டு இந்த மூன்றையும் தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து வாழைத்தண்டு சாற்றுடன் கலக்கவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், ரசப்பொடி சேர்த்துக் கலந்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, சீரகம் தாளிக்கவும். பின்னர் வாழைத்தண்டு கலவையை இதில் சேர்த்து கொதிக்கவிடவும். கலவை நான்கு கொதித்ததும், எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
வாழைத்தண்டு ஸ்நாக்ஸ்
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒன்று
கோதுமை மாவு – 2 கப்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
கடலை மாவு – ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – ஒரு டீஸ்பூன்
வெள்ளை எள் – கால் டீஸ்பூன்
ஓமம் – கால் டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு துண்டு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
வாழைத்தண்டைச் சுத்தம் செய்து சின்னச் சின்னத் துண்டாக வெட்டி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். அதில் எள், ஓமம், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
பின்னர் அதனுடன், தயாரித்து வைத்துள்ள வாழைத்தண்டு சாறு சேர்த்து, பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். பின்னர் இதனை கத்தியை கொண்டு கோடுகள் போட்டு, உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். அதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். டேஸ்ட்டி வாழைத்தண்டு ஸ்நாக்ஸ் ரெடி.
வாழைத்தண்டு பொங்கல்
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பயத்தம்பருப்பு – 100 கிராம்
நெய் – 50 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
அரிசி – கால் கிலோ
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
தண்ணீர் – 4 கப்
உப்பு, மஞ்சள்தூள் – தேவைக்கேற்ப

செய்முறை:
ஒரு குக்கரில் சிறிது நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வதக்கிக்கொள்ளவும். அதனுடன் அரிசி, பயத்தம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் குக்கரை மூடி மூன்று முதல் நான்கு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பிறகு ஒரு கடாயில் இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து முந்திரி போட்டு வேகவைத்துள்ள சாதத்தில் சேர்த்துக் கிளறினால் வாழைத்தண்டுப் பொங்கல் தயார்.
வாழைத்தண்டு மோர்
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒன்று (நறுக்கவும்)
கெட்டி தயிர் – ஒரு கப்
தண்ணீர் – அரை டம்ளர்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
நறுக்கிய வாழைத்தண்டு, கெட்டி தயிர், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். பிறகு இதை வடிகட்டி உப்பு சேர்த்தால் வாழைத்தண்டு மோர் தயார்.
வாழைத்தண்டுச் சாற்றில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். வாழைத்தண்டுச்சாற்றை, தொடர்ந்து குடித்துவர, ரத்தச்சோகை குணமாகும்.
வாழைத்தண்டு சுக்கா
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கடுகு – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
தனியா – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் – 3
எண்ணெய் – 50 கிராம்
தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
தனியா, கடுகு, சோம்பு, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை சிறிது எண்ணெயில் வறுக்கவும். பின்னர் இதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்ஸியில் மையப் பொடிக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும். வாழைத்தண்டு நன்கு வெந்ததும் அதனுடன் அரைத்த பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாகக் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது சுவையான வாழைத்தண்டு சுக்கா ரெடி.