உலகெங்கிலும் உள்ள கிறித்துவர்களால் இயேசு கிறித்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் உருவானதுதான் கிறிஸ்துமஸ் பண்டிகை. கேக், இனிப்பு இவையெல்லாம் நமக்கு இந்த நாளில் கேட்காமலே கிடைக்கும் என்பதைத் தாண்டி நாம் அறிந்திடாத சில தகவல்களை இங்கு காண்போம்,
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நத்தார் பண்டிகை என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. கிறிஸ்துமஸ் என்பது போர்த்துக்கேய மொழியில் natal எனப்படுகிறது. இந்தச் சொல்லின் தமிழாக்கமே நத்தார் என்பதாகும்.
- கிறிஸ்துமஸ் என்பது தனி ஒரு பண்டிகை அல்ல. இவ்விழா கிறித்தவப் பஞ்சாங்கத்தின்படி திருவருகைக் காலத்தினை முடிவுபெறச் செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.
- டிசம்பர் 25ம் தேதியில் தொடங்கி ஜனவரி 5ம் தேதிவரை உள்ள காலம் ‘கிறிஸ்துமஸ்டைட்’(‘Christmastide’) அல்லது ‘பனிரெண்டு புனிதநாட்கள் (‘Twelve Holy Days’) என்று அழைக்கப்படுகிறது.
- இயேசு கிறிஸ்து பிறந்த இடம் பெத்லகேமில் உள்ள “சர்ச் ஆப் நேட்டிவிட்டி” என்பதாகும். பெத்லகேமில் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து வரும் கிறிஸ்தவர்களும், உள்ளூர் மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சேர்ந்து வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். இதையொட்டி “சர்ச் ஆப் நேட்டிவிட்டி”, வண்ண வண்ணக் கொடிகளாலும்,தோரணங்களாலும் அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகிறது.
- மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் பாடல்களில் ஒன்றாக இருந்துவரும் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ உண்மையில் கிறிஸ்துமசுக்காகப் பாடப்பட்டதல்ல. அது ‘தேங்க்ஸ் கிவ்விங்’ நாளிற்காகப் பாடப்பட்டதாகும்.
- சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் ஜெர்மனியின் கிறிஸ்தவர்கள் ஊசியிலை மரத்தை கிறிஸ்துமஸ் மரமாக மின்விளக்குகளால் அலங்கரித்துக் கொண்டாடினர்.பின்னர் 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது அரசமுறை கிறிஸ்துமஸ் விழாவில்தான் முதலில் கிறிஸ்துமஸ் மரத்தை அறிமுகப்படுத்தினார்.
- மெக்ஸிகோவில் உள்ள ‘போய்ன்செட்டியா’ எனும் மலர் கிறிஸ்துமஸ் மலராக அழைக்கப்படுகிறது. இதைப் ‘புனித இரவின் மலர்’ என்றும் அழைக்கிறார்கள்.
- கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே சிவப்பு நிறத்தில் ஆடை அணிபவராக இருக்கவேண்டும் என்றில்லை. தொடக்க காலங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா பச்சை, நீலம், பர்பிள் போன்ற நிறங்களில் உடை உடுத்தினார். பிறகுதான் கோகோ கோலா நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சிவப்பு நிற ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.
- குழந்தைகள் சத்தம் போட்டால் மிட்டாய் வாங்கிக் கொடுப்போம்,ஆனால் குழந்தைகளைப் பயமுறுத்துவதற்காகத்தான் கிறிஸ்துமஸ் மிட்டாய்கள் தயாரிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? 1670ல், ஜெர்மனியில் உள்ள கலோன் (cologne) தேவாலயத்தின் இசைக் குழுத் தலைவர் கைத்தடி வடிவிலான மிட்டாய் கைத்தடியை வடிவமைத்தார். தேவாலயத்திற்கு வரும் குழந்தைகள் சத்தம் போடாமல் இருக்க அவர்களிடம் அவை கொடுக்கப்பட்டது.
- உலகத்திலேயே இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய கிறிஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா? 1886ல் பிரெஞ்சு நாடு அமெரிக்காவிற்குக் கிறிஸ்துமஸ் தினத்தன்று பரிசளித்த, சுதந்திர தேவி சிலை (The Statue of Liberty) சிலைதான் அது. 225 டன் எடை உள்ளது இந்தச் சிலை என்பது குறிப்பிடத் தக்கது.
- கிறிஸ்துமசுக்கு கொடுக்கப்படும் பரிசுகள் எப்பொழுதும் மகிழ்ச்சி தரக்கூடியவை. அந்தப் பரிசுகள் பலரின் உயிரையே காப்பாற்றினால்? அதைவிட பெரும் மகிழ்ச்சி உலகில் வேறு இருக்க முடியுமா என்ன? இரண்டாம் உலகப்போரின்போது, அமெரிக்க நாட்டின் பிளேயிங் கார்ட்ஸ் கம்பெனி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவுத்துறையுடன் சேர்ந்து தனித்துவம் கொண்ட கார்டுகளைத் தயாரித்து, ஜெர்மனில் இருந்த கைதிகளுக்கு பரிசாக கொடுத்தது. அந்தக் கார்டுகளை தண்ணீரில் நனைத்தால், சிறைச்சாலையில் இருந்து தப்பிக்கும் வழி (map) வெளிப்படும் விதமாக தயாரிக்கப்பட்டு இருந்ததுதான் அதன் தனிச்சிறப்பாகும்.
- காலுறைகளை (stockings) தொங்கவிடும் மரபு எப்படித் துவங்கியது தெரியுமா? ஓர் ஏழைக்கு மூன்று மகள்கள். ஏழ்மை காரணமாக திருமணம் செய்ய பணம் இல்லாமல் தவித் திருக்கிறார்கள். இதைப்பார்த்த செயின்ட். நிக்கோலஸ் புகைபோக்கி வழியாக தங்க நாணயங்களைப் போட்டாராம். அவை அங்கு காய்ந்து கொண்டிருந்த காலுறைக்குள் விழுந்தன. அவர்கள் வறுமை நீங்கி, அவர்களுக்குத் திருமணம் ஆனது என்று ஒரு டச்சு நாட்டுப் புராணம் சொல்லுகிறது. இதை நினைவு கூறும் விதமாக இன்றும் காலுறைகளை (stockings) கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடுகிறார்கள்.
- கிறிஸ்துமஸ் விழாவில் உறவினர்களுக்கு,நண்பர்களுக்கு பரிசளிப்பது, ஏழை,எளியவர்களுக்கு உதவுவது இவற்றை அமெரிக்கர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஏழைகளுக்கு உதவுவதற்கென ஆலயங்களில் சிறப்பு உண்டியல்களும் வைக்கப்படுகின்றன.
குடும்பங்கள் ஒன்றிணைந்து, பரிசுப்பொருட்களைப் பரிமாறி, குதூகலமாய்க் கொண்டாடும் இந்த நன்னாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!