நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. டீ, காபி, குளிர் பானம் என்பதையெல்லாம் அனாவசியம் என்ற பிரிவில் ஒதுக்கிவிடலாம், ஆனால் தண்ணீர் என்பது அத்தியாவசியத் தேவை. பயணங்களின் போது தண்ணீர் என்பது தவிர்க்க இயலாத ஒன்று.
மும்பையிலிருந்து நாகர்கோயில் வருவதற்கு பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்துவது ரயிலைத்தான். அத்தகைய மும்பை எக்ஸ்பிரஸில்தான் இந்தியன் ரெயில்வேயின் மினரல் வாட்டரான இரயில் நீருக்குப் பதில், ஹெல்த் ப்ளஸ் என்ற பெயரில் தேதி எதுவும் குறிப்பிடப்படாத தரமற்ற குடிநீர் விற்கப்பட்டிருக்கிறது. ரயில் நீர் கையிருப்பு இல்லை என்று இந்த தரமற்ற தண்ணீரைத் தமிழர்கள் தலையில் கட்டியிருக்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் தமிழ்நாட்டு எல்லையைத் தொட்டபிறகே இந்தத் தவறு நடந்துள்ளது. இரயிலில் உள்ள தண்ணீர்க் குழாய்களில் பிடித்தது போன்று, பிளீச்சிங் பவுடர் வாடை வந்ததால் மக்கள் கோபமடைந்தனர்.
கோவில்பட்டியைச் சேர்ந்த கனேஷ் என்பவர் ஒரு லாரி உரிமையாளர். மும்பையில் இருந்து ஊர் திரும்பியிருக்கிறார். இந்தத் தண்ணீரைக் குடித்துப் பார்த்ததில் இது மினரல் வாட்டரே இல்லை என்பதை அதன் சுவை, வாடை மூலம் கண்டுகொண்டு கோபமடைந்திருக்கிறார். அனைத்து மக்களையும் திரட்டி நியாயம் கேட்டிருக்கிறார். டிடிஆரிடம் முறையிட்டு அவரையும் குடிக்க வைத்திருக்கிறார். அவரும் இந்த நீரானது சரியில்லை என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
தண்ணீர் பாட்டில் விற்பவர்கள், ஒப்பந்தக்காரர்கள் அனைவருக்கும் தமிழ் தெரியாது என்பதால் ஹிந்தியிலேயே பேசி வாட்டர் பாட்டிலைத் திரும்பப் பெற்று அதற்கான பணத்தையும் திரும்பக் கிடைக்குமாறு செய்திருக்கிறார்கள் கனேஷ் உள்ளிட்ட பயணிகள்.
ரயிலின் பேண்ட்ரி கார் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் சோதித்துப் பார்க்கும்போது அங்கு 300 பாட்டில்கள் கையிருப்பு இருந்ததைக் கண்டறிந்தனர். தரமற்ற குடிநீரை விற்பதற்காகவே பொய் சொல்லியிருந்ததும் தெரிய வந்தது. இந்தக் குளறுபடிகளைக் கண்டு கொதித்த பயணிகள் அரக்கோணம் நிலையத்தில் போராட்டத்தில் குதித்தனர். இதனை அடுத்து ரயில்வே காவல்துறையினர் ஒப்பந்தக்காரரைக் கையோடு விசாரனைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அனைவருக்கும் தரமான ரயில்நீர் எனப்படும் மினரல்வாட்டர் கிடைக்கப்பெற்ற திருப்தியில் பயணத்தைத் தொடர்ந்தனர்
தமிழக எல்லைக்குள் வரும்முன் இந்த தவறுகள் நடக்கவில்லை. ஆனால் தமிழ எல்லையில் இப்படித் தரமற்ற குடிநீரைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழர்களின் அநீதியைக் கண்டு போராடும் குணத்தைச் சோதித்துப் பார்த்தவர்களுக்குத் தகுந்த பாடத்தைக் கற்றுத் தந்த தமிழ்ப்பயணிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பது பழமொழி. ஆனால் இங்கே தண்ணீர் குடிப்பதற்கே அழ வேண்டியிருக்கிறது, போராட வேண்டியிருக்கிறது!!!