தடுப்பூசி கொண்டுவரும் மின்வண்டு! மஹாராஷ்டிராவில் வினோதம்

covid vaccine drone maharashtra

“தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம், தீயைக்கொண்டு மூடரெல்லாம் ஊரைக்கூட எரிக்கலாம்!” என்பது ஒரு பிரபலமான தமிழ்த் திரையிசைபாடல்.

அறிவியலின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் மின்வண்டு அல்லது மின்னீ எனப்படும் ட்ரோன் (drone). இதைக்கொண்டு போதைப் பொருள் கடத்துவதைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மகாராஷ்டிராவில் இதைவைத்து கோவிட் 19 தடுப்பூசியை வினியோகம் செய்திருக்கிறார்கள்.

சமீப காலமாக கோவிட் 19 தொற்றுநோய் மனித குலத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை லட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய இந்நோய் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், கோவிட் 19 தடுப்பூசியே மக்ககளின் ஒரே நம்பிக்கை தரும் ஒன்றாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசியைக் கொண்டுபோய்ச் சேர்க்க இந்திய அரசாங்கம் செயல்பட்டு வரும் நிலையில், முதன்முறையாக, மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திற்கு ட்ரோன் மூலம் சுமார் 300 டோஸ் கோவிட் 19 தடுப்பூசி வழங்கப்பட்டது ஒரு நல்ல முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்ட நிர்வாகம் இந்த சோதனையை நடத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது. “ஜவ்ஹரில் இருந்து ஜாப் கிராமம் சுமார் 20 கிலோமீட்டர்கள் தூரம் கொண்டது.ஜாப் கிராமம் ஒரு கரடுமுரடான பகுதியாகும். சுகாதாரப் பணியாளர்கள் மூலம் அங்கு 300 தடுப்பூசிகளை வினியோகம் செய்திருந்தால் 40 நிமிடங்கள் ஆகியிருக்கும். ஆனால் ட்ரோன் மூலம் நடைபெற்றதால் இந்தச் சோதனை 9 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டது.  ஜாப் கிராமத்தின் உள்ளூர் பொது சுகாதார மையத்தில் இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழனன்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த சோதனைதான், மாநிலத்தின் முதல்முறை என்று சோதனையை ஒருங்கிணைத்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் மாணிக் குர்சல் தெரிவித்தார்.

உதவி செய்ய முன்வரும் தனியார் நிறுவனங்களால்தான்  இது சாத்தியமானது என்று மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் தயானந்த் சூர்யவன்ஷி கூறினார். மேலும் அவர் கூறுகையில்,”தடுப்பூசி மையங்களுக்குச் செல்வதில் சிரமம் உள்ள கிராமவாசிகளின் வீட்டு வாசலுக்குக்கூட இம்மருந்துகளை எளிதாக அனுப்ப முடியும் என்பதால் இது ஓரளவிற்கு, தடுப்பூசி தொடர்பான தவறான எண்ணங்களை மக்கள் மனதில் இருந்து அகற்ற உதவும்” என்றார்.

இதற்கிடையில், மகாராஷ்டிரா முதல்வர் முதல்வர் உத்தவ் தாக்ரே இந்த சோதனை வெற்றிக்காக அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், “ஆளில்லா விமானங்கள் மூலம் பால்கரின் தொலைதூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை வெற்றிகரமாக கிடைக்கச் செய்ததற்காக பொது சுகாதாரத் துறை மற்றும் பால்கர் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நான் வாழ்த்துகிறேன்” என ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மருத்துவ நோக்கங்களுக்காக நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவும்  அவசரகாலத்தில் உயிர்காக்கும் மருந்துகள், இரத்தப் பைகள், தடுப்பூசிகள் போன்றவற்றை அனுப்பவும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இந்த நல்ல முயற்சியை நாமும் மனதார வாழ்த்துவோம்!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *