புகைப்படத்தில் ஒருவரின் முகம் பளிச் என்று இருந்தால் முன்பெல்லாம் என்ன சோப் பயன்படுத்துறீங்க என்போம், இப்போதெல்லாம் என்ன ஆப் என்கிறோம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அத்தகையது. ஒரு படத்திலிருந்து பின்னணியை (பேக்ரவுண்ட்) அகற்ற வேண்டும் அல்லது விரும்பும் வேறொரு பேக்ரவுண்டைச் சேர்க்க வேண்டும், அல்லது விரும்பும் வண்ணத்தில் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வோம்? சிலர் நேரடியாக போட்டோ ஸ்டூடியோவிற்கு செல்வார்கள், சிலர் போட்டோஷாப் மூலம் முயல்வார்கள்.. ஆனால் இதைவிட மிகமிக எளிதான வழி ஒன்று உள்ளது. Remove.bg எனும் அற்புதமான தலம் மூலம் ஆன்லைனிலேயே இதைச் செய்துவிடலாம், அதுவும் இலவசமாக. இதன் மூலம் 5 நொடிகளில், நூடுல்ஸை விட வேகமாய்ப் பின்னணியை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றிக்கொள்ளலாம்.
Remove.bg என்பது எந்த ஒரு புகைப்படத்தின் பின்னணியையும் அழகாக அகற்றி, மாற்றித்தரும் அற்புதமான இலவச சேவை. உங்கள் கணினியில் இருக்கும் அல்லது மொபைலில் இருக்கும் புகைப்படங்களின் பேக்ரவுண்டை மாற்ற விரும்பினால் அதைக் காப்பி செய்தோ, ப்ரவுஸ் செய்தோ,ட்ராப் செய்தோ பதிவேற்றுங்கள். அடுத்த 5 நொடிகளில் இந்தத் தளம் பின்னணியை நீக்கிவிடுகிறது.
உங்களுக்கு தேவையான அல்லது பிடித்தமான பின்னணிகள், வண்ணங்கள் இந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் தேர்வு செய்து, எடிட் செய்து கொள்ளலாம் .அல்லது இவை எதுவும் பிடிக்காத பட்சத்தில் உங்களிடம் இருக்கும் பின்னணியைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக நீங்கள் வெளிநாட்டில் எடுத்த புகைப்படத்தை உங்கள் ஊரில் அல்லது கிராமத்தில் இருப்பது போன்று மாற்றலாம். ஏற்கனவே இந்த தளத்தில் பதிவேற்றப்பட்டு இருக்கும் பேக்ரவுண்ட் இமேஜ்களும், வண்ணங்களும் ஏராளமாக உள்ளன. அவற்றை நீங்கள் தேர்வு செய்தாலே போதும் எல்லாம் முடிந்தது.பின்னணி மாற்றப்பட்ட புகைப்படம் தயார். இதை நீங்கள் சமூக வலைதளங்களில் பகிரலாம் அல்லது பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ளலாம்.
புகைப்படத்தின் பேரவுண்டடை மாற்றுவதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவோ, சாப்ட்வேர்களோ எதுவும் தேவையில்லாமல்,யாராலும் எளிதாகச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தத் தளம்.போட்டோஷாப்பை விட இது மிக எளிதானது.போட்டோஷாப் மூலம் இதைச் செய்வதென்றால் நல்ல செயல்திறன் மிக்க கணினி,போட்டோஷாப் பற்றிய அறிவு இதெல்லாம் தேவை. ஆனால் இந்த தளத்தின் வழியாகச் செய்வதற்கு இது எதுவும் தேவையில்லை.
படத்தின் பின்னணியை நீக்க, remove.bg தளத்தின் AI ( Artificial Intelligence) தான் இந்த மேஜிக் வேலையைச் செய்கிறது. பிக்சல்களை முறையாக எடுக்க அல்லது படத்தின் பகுதிகளை மாற்ற உங்களுக்கு எந்த கருவிகளும் தேவையில்லை என்பது இதன் தனிச்சிறப்பு. விண்டோஸ் மற்றும் மேக் இவற்றோடு இந்தத் தளம் சிறப்பாக வெலைசெய்கிரது. புகைப்பட எடிட்டிங் பற்றி அதிகம் தெரியாதவர்கள் நண்பருக்கான வாழ்த்து அட்டையை உருவாக்குதல், பின்னணி வண்ணம் மாற்றுதல் போன்றவற்றிற்கு இது ஒரு சிறந்த தளம்.
தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் remove.bg மூலம் பின்னணியை விரைவாக அகற்ற Remove.bg செருகுநிரலைப் (plug in) பதிவிறக்கிப் பயன்படுத்தலாம். இதன் மூலம் அவர்களின் நேரம் பெருமளவில் மிச்சமாகிறது.
புகைப்பட ஆர்வலர்கள், தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள்,விளம்பர நிறுவனங்கள் என அனைவருக்கும் இது ஓர் அவசியமான தளம் என்றால் அது மிகையாகாது!