கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் பழ வியாபாரி கத்தியால் குத்தி கொலை

Crime Scene Do Not Cross

மும்பை நல்பஜார் பகுதியில் பழங்கள் மொத்த வியாபாரம் செய்து வருபவர் பாபுஜி குரோஷி (வயது 55) இவரது மகன் சோட்டு குரோஷி இருவரும் சேர்ந்து பழ வியாபரத்தை கவனித்து வந்தனர்.

இவரது கடையில் மலாடு பகுதியை சேர்ந்த வாடிக்கையாளரான சோரப் குரோஷி (வயது 25) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.25 ஆயிரத்திற்கு ஆப்பிள் பழங்களை வாங்கி விட்டு பணத்தை பின்பு தருவதாக கூறி சென்றார். இந்நிலையில் இதற்கான பணத்தை கொடுக்காமல் அவர் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் காலை 10.30 மணி அளவில் கடைக்கு வந்த சோரம் குரோஷியிடம் பணம் கேட்டு பாபுஜி குரோஷி தகராறு செய்தார். ஆத்திரமடைந்த சோரப் குரோஷி அங்கிருந்த கத்தியை எடுத்து பாபுஜி குரோஷியை சரமாரியாக குத்தினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் சோட்டு குரோஷி அவரை தடுக்க முயன்ற போது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த தந்தை, மகன் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இந்நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கடைக்கு ஓடி வந்தனர். இதைப் பார்த்ததும் சோரப் குரோஷி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ரெண்டு பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பைகுல்லாவில் உள்ள ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி பாபுஜி குரோஷி உயிரிழந்தார்.

மகன் சோட்டு குரோஷி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்த ஜே.ஜே. மார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்ற சோரப் குரோஷியை வலைவீசி தேடி வந்தனர். விசாரணையில் அவர் சொந்த ஊரான மால்வாணி தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் மால்வாணிக்கு சென்று அங்கு சோரப் குரோஷியை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Mumbai Today Tamil News

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *