சாட்டை துரைமுருகன் எனும் யூட்யூபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது எனும் செய்தி தற்பொழுது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி. சமுதாயத்தில் பலரும் மதிக்கக்கூடியத் தலைவர்கள் மீது பொதுக்கூட்டங்கள், சமூக வலைதளங்களில் வாயிலாக அவதூறு பரப்புவது, பெண்களை, பள்ளிச் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுப்பது, பொது மக்களுக்கு குந்தகம் விளைவிப்பது, தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்பி மக்களை அச்சத்தில் வைப்பது என குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
தோற்றத்தைவைத்து, குண்டர் சட்டம் பாயும் என்று பலரும் சிறுவயதில் எண்ணியிருக்கலாம். அது அப்படி அல்ல என்பதை சிறைக்கம்பிகளின் வழியாகப் புகுந்து வந்துவிடும் ஒல்லியான தோற்றம் கொண்ட கிஷோர் கே சாமி என்பவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்த நிகழ்வு பொய்ப்பித்தது. அத்தகைய குண்டர் சட்டம் பற்றி அதிகம் அறிந்திடாத தகவல்களைப் பார்ப்போம்.
- குண்டர் சட்டம் அல்லது குண்டாஸ் என்று நாம் சொல்வதெல்லாம் “தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள், காணொலித் திருடர்கள் ஆகியோரின் பயங்கர நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம 1982” என்பதன் சுருக்கமே.
- குண்டர்கள் என்ற வரையறையை விளக்கும்போது, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வருகின்ற குற்றங்கள் செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் என்று சந்தேகித்தாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்.
- குண்டர் சட்டம் என்பது தண்டனை கிடையாது. அது ஒரு தடுப்பு நடவடிக்கைதான். குற்ற வழக்கில் உள்ளவர் வெளியில் வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும், அமைதிக்குப் பங்கம் விளையும் எனும் பட்சத்தில் அவரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கின்றனர்.
- இந்த சட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜிஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. சட்டவிரோத மது தயாரிப்பாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வன்முறையாளர்கள், சட்டவிரோத பொருள் கடத்தல்காரர்கள், நில அபகரிப்பாளர்கள் போன்ற வன்முறையாளர்களை ‘குண்டர்கள்’ என்று வகைப்படுத்திக், ‘குண்டர் சட்டம்’ என்றே இந்தச் சட்டம் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
- 2004-ஆம் ஆண்டில் தமிழ்த்திரையுலகினரின் வேண்டுகோளுக்கு இணங்க திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக சி.டி.க்களில் பதிவு செய்து விற்கும் குற்றமும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2006 ல் மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு குற்றங்களும் இதன் கீழ் சேர்க்கப்பட்டன.
- நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரின் அனுமதியோடும், கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடும் இந்தச் சட்டமத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- குண்டர் சட்டத்தின்படி ஒருவர் கைதானால், அவரை 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும். எந்தவிதமான விசாரணையும் அவரிடம் மேற்கொள்ளத் தேவையில்லை, அவர்களுக்கு பிணையும் (ஜாமீன்) வழங்கப்படாது.
- இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒருவர், தன்மீது குற்றமில்லை என்று நிரூபிக்க விரும்பினால் கைதானவர் சார்பில் வழக்கறிஞர் வாதிட இயலாது. அவர் சார்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லது நண்பர்கள்தான் முறையீடு செய்யவேண்டும்.
- குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டவர், அவருக்கு நிபந்தனைகளை மீறும்பட்சம், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புண்டு.