தந்தை பெரியாரும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் சேர்ந்து இருப்பது போன்ற படம் ஒன்று நேற்று சமூக வலைதளமான ட்விட்டரில் பகிரப்பட்டது. இருவரும் சேர்ந்து இருப்பதுபோன்ற படங்கள் ஏற்கனவே நிறைய வெளிவந்திருக்கின்றன என்றாலும் இம்முறை வந்த படம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. உற்றுநோக்காமல், மேலோட்டமாகப் பார்த்தால் அறிவாசான் பெரியார், பிரபாகரானோடு சேர்ந்து துப்பாக்கியால் இலக்கைக் குறிபார்ப்பதுபோல வரையப்பட்டிருக்கிறது. முதல்முறை பார்க்கும் எவருக்கும் பெரியார் துப்பாக்கி தூக்கி இருப்பதைப் போலவே தோன்றும். அந்த அளவுக்கு ஏமாறும் வகையில் நுணுக்கமாக வரையப்பட்டுள்ளது.
சிறிதுநேரம் அவதானித்துப் பார்த்தால்தான் தெரியும், தந்தை பெரியார் கையில் இருப்பது கருப்பு நிற கைத்தடி என்பதும், பிரபாகரன் கையில் இருப்பது காக்கி நிறத் துப்பாக்கி என்பதும். கைத்தடியும், துப்பாக்கியும் இணைந்து பெரியார் துப்பாக்கியால் குறிபார்ப்பதைப் போன்ற தோற்றத்தையே தருகிறது. இதையொட்டிப் பல பெரியாரிய இன உணர்வாளர்கள் பலரும், நெட்டிசன்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தார்கள்.
இருவரும் பயணித்த பாதை தமிழ் இன விடுதலையை நோக்கித்தான் அது தான் படத்தின் பொருள் என்று இப்படத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். பெரியார் கையில் இருப்பது துப்பாக்கி அல்ல, கைத்தடிதான் என்று சொல்லிவிடலாம், ஆனால் அவரது படம் வன்முறைக்கு வழிகாட்டுவதைப்போல் அல்லவா இருக்கிறது. என்பதௌ இதைக் கண்டித்தவர்களின் கருத்து.
பெரியார்-பிரபாகரன் இருவரும் தமிழ் மக்களின் நலனுக்குப் பாடுபடுவது என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்திருந்தாலும் இருவரின் போராட்ட வழிமுறைகளும் வேறுவேறு, அணுகுமுறைகள், அவர்கள் இருந்த சூழ்நிலை,காலகட்டம் என்பது வேறுவேறு. வன்முறை வழியை நாடாமல், ஆயுதத்தை அறவே ஏந்தாமல் தமிழ்நாட்டில் மாபெரும் புரட்சியை, விழிப்புணர்வை, அறிவைப் புகட்டி, அறியாமையை அகற்றித் தமிழ் மக்களுக்கு வழிகாட்டியவர் தந்தை பெரியார்.
ஈழத்தில் பிரபாகரனுக்கு இருந்த சூழ்நிலைகள் ,சவால்கள் வேறுவேறு. அங்கிருந்த பிரச்சினைகளும் வேறுவேறு. தம் மக்களுக்கான உரிமையைப் பெறத் தனித் தனி வழியில் நின்று போராடியவர்கள் இவர்கள்.
பெரியாரின் பின்னால் கூடியவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும் ஒருபோதும் அவர்கலை வன்முறைப் பாதைக்கு அழைத்தது இல்லை, ஆயுதம் ஏந்தச் சொன்னதுமில்லை.
தஞ்சையில் 1957 ல் நடந்த திராவிடர் கழக சிறப்பு மாநாட்டில் பெரியாரே பின்வருமாறு சொல்லியிருக்கிறார், “எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக்கூட உதைத்ததில்லை; குத்தியதில்லை. ஒருவனுக்குக்கூட ஒரு சிறு காயம் கூட பட்டதில்லை. கலவரமில்லாமல், நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி, அதன்படி நடப்பவன்” இதுதான் பெரியாரது நிலைப்பாடு.
பெரியார் தன் மீது செருப்பு வீசப்பட்டபோதுகூட மற்றொரு செருப்பைத் தான் கேட்டார் என்பதை அனைவரும் அறிவோம். செருப்பைத் தூக்கிக் காட்டவோ, செருப்பால் அடிப்பேன் என்றோ எந்த வன்முறையையும் கையில் எடுக்காதவர் பெரியார்.
வன்முறையை விரும்பாத, ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்ட அறவழியில் போராடிய பெரியாரும் – ஆயுதம் ஏந்தி தன் மக்களின் நலனுக்காக, உரிமைக்காகப் போராடிய பிரபாகரனும் அவரவர் வழியில் தம் மக்களுக்குப் போராடியவர்கள் என்றால் அது மிகையாகாது!