உடலுக்கு ஊறு உண்டாக்கும் குடல் அப்பளங்கள் – கலர்ஃபுல் கலவரங்கள்

Health Hazards of Color Papads

‘’கோணலா இருந்தாலும் என்னதாக்கும்” எனக் குழந்தைகள் குதூகலமாக உண்ணுகின்ற ஒரு நொறுக்குத்தீனிதான் குழல் அப்பளம். இவை குடல் அப்பளம், ஆட்டுக்குடல், போட்டி, நல்லி என ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், குர்குரே இவையெல்லாம் அறிமுகம் ஆகாதிருந்த காலத்தில் இவைதான் குழந்தைகளின் எளிய நொறுக்குத்தீனி. குறைந்த விலையில் பக்கத்துப் பெட்டிக்கடைகளிலேயே கிடைக்கும் என்பது இதன் சிறப்பு. குழந்தைகள் மட்டுமல்ல, விரைவாக செய்யக்கூடிய, விலை குறைவான ஒன்றாக இருப்பதால் உணவுக்குத் தொட்டுக்கொள்ள இதைப் பெரியவர்களும் பயன்படுத்துகிறார்கள்.

2K கிட்ஸ் எனப்படும் இப்போதைய குழந்தைகளை ஈர்க்கும் வகையில் வண்ண மயமான வற்றல்கள், வடகங்கள், குடல் அப்பளங்கள் வரத்தொடங்கின. வெண்டைக்காய், நட்சத்திரம், சக்கரம் என வடிவங்களும் மாறத்தொடங்கின. அழகிருக்கும் இடத்தில் ஆபத்து வருவது இயற்கைதான் அல்லவா?

பொதுமக்கள், குழந்தைகள் விரும்பி உண்ணும் நிறம் சேர்க்கப்பட்ட குடல்/குழல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்குப் பல புகார்கள் வந்ததன் விளைவால் நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வுசெய்ய உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள், 2011இன்படி குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் வரையறுக்கப்பட்டுள்ளது. குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் பல நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், அனுமதிக்கப்படாத நிறமிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2006 இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

வண்ணம் சேர்ப்பதன் விளைவுகள்

தரமற்ற, நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுப்புண் உண்டாவதற்கான வாய்ப்பிருக்கிறது. அது நாளடைவில் புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக் கெடுகளை ஏற்படுத்த வாய்ப்பும் உள்ளது என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

  • குடல் அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் உணவுப் பாதுகாப்புத்துறையின் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
  • வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்துத் தயாரிப்பாளர்களும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் – 2011இல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவுப்படி, அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து உணவு வணிக நிறுவனங்களும் நுகர்வோருக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தங்களுடைய உணவுப் பாதுகாப்பு உரிம எண்ணை அவசியம் குறிப்பிட வேண்டும்.
  • கடைகளில் விற்பனை செய்யப்படும் குடல் அப்பளம், வடகம், வத்தல் பொட்டலங்களின் மீதுள்ள லேபிள்களில் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், முழுமையான முகவரி, நிகர எடை, கோடு, பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு ஆகியவை குறித்த விவரங்கள் இடம் பெற வேண்டும்.
  • பொதுமக்கள் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விவரங்கள் உள்ளனவா எனப் பார்த்து வாங்க வேண்டும்.

புகார் செய்யும் வழிகள்

குடல் அப்பளம், வடகம், வத்தல் மற்றும் பிற உணவுப் பொருட்களில் உள்ள தரம் பற்றிய குறைபாடு குறித்து 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம்” அல்லது unavupugar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

By சிவ.அறிவழகன்

எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையில் பணிபுரிபவர். 2009ல் இருந்து இணையத்திலும் தமிழ் இதழ்களிலும் தளையிலா எழுத்தாளராக (Freelance Writer) இருந்துவருகிறார். தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி படைப்பாளராக பணிபுரிகிறார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *