வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைப் பார்க்கும் வழக்கம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஆனாலும் கரோனா பெருந்தொற்றுக்குப் (கோவிட் 19) பிறகு இத்தகைய வொர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரம் பெருகிவிட்டது. இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி இன்று பார்ப்போம்.
- அரக்கப் பறக்க எழுந்து, அலுவலகத்து ஓடவேண்டிய அவசியம் இல்லை. பொறுமையாக எழுந்து பல்துலக்காமல், படுக்கையிலிருந்தே ஃபைலைப் பார்க்கும் வசதி இதெல்லாம் வொர்க் ஃப்ரம் ஹோமில்தான் சாத்தியம்.
- வீடியோ கால் செய்யநேரும்போது மட்டுமே நேர்த்தியான ஆடை தேவைப்படும். அப்பொழுதும் ஆள் பாதி ஆடை பாதியாய், பாஸ்போர்ட் போட்டோ எடுக்க பேண்ட் எதற்கு என்று சுதந்திரமாய் இருக்கலாம். நெடுநாள் வாடை கொண்ட துவைக்காத சாக்சுக்கும், ஷூவுக்கும் விடுதலை அளித்து வெறுங்காலோடு உலாவி மகிழலாம்.
- உணவு உண்ணக்கூட நேரமின்றி அலுவலகம் ஒடியவர்களுக்கு இது வரப்பிரசாதம். அலுவலகத்தில் வேலைக்கு நடுவே உணவு. வீட்டில் உனவுக்கு நடுவே வேலை. வேலைப்பளு கூடுகிறதோ இல்லையோ வேலை செய்பவர்களின் பளு (வெயிட்) கூடிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
- இணைய வசதி இல்லை, மின்சாரம் இல்லை என்ற எதாவது காரணம் சொல்லி வேலையிலிருந்து இடைவேளை எடுக்கும் வசதி இதில் உண்டு.
- பெட்ரோல் விற்கும் விலையில் பைக், கார் இவற்றை அலுவலகம் செல்வதற்குப் பயன்படுத்தாமல் இருப்பதால் பெருமளவு பணம் மிச்சமாகிறது. ஆனால், விதவிதமாய்ச் சமைப்பதால் கேஸ் சிலிண்டர் விரைவில் காலியாகும் அபாயம் உண்டு.
- “என்னதான் இருந்தாலும் ஆம்பளைன்னா வெளியில போய் சம்பாதிச்சாதான்யா அழகு” என்று அட்வைஸ்களை அள்ளித்தெளிக்கும் அப்பத்தாக்களைச் சமாளிக்கும் திறமையை வீட்டிலிருந்து வேலைபார்ப்பவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
- மின்சாரம், இணையம், காபி, டீ இதற்கான செலவுகள் இவையெல்லாம் உங்கள் அலுவகத்துக்குக் குறையத் தொடங்கியிருக்கும். ஆனால் உங்கள் இல்லத்தில் இவையெல்லாம் எக்கச்சக்கமாய் எகிற வாய்ப்பிருக்கிறது. அலுவலகத்தில் அளவில்லாமல் பயன்படுத்தியவர்கள், வீட்டில் அளவாய்ப் பயன்படுத்தி தக்காளி சட்னிக்கும் ரத்தத்திற்கும் வேறுபாட்டை உணர்வார்கள்.
- குடும்ப உறவினர்களிடம் அதிக நேரம் செலவழிக்கலாம் அதனால் மன அழுத்தத்தைப் போக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உங்களால் மற்றவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- அலுவலகத்தில் வேறு எந்த வித தொந்தரவும் இல்லாமல் பணி செய்யும் சூழ்நிலை இருக்கும் . ஆனால் வீட்டில் இருக்கும்போது . ‘’இந்த பாட்டில் மூடியைக் கொஞ்சம் திறந்து கொடேன், ரிமோட்டைப் பாத்தியா ‘’ எனத் தொந்தரவுகள் அதிகம்.
வொர்க் ஃப்ரொம் ஹோம் செய்து, ஹோம்லி ஃபுட் களை, நொறுக்குத்தீனிகளை அதிகமாய் உண்டு உடல் எடை கூடித் துன்பப்படாமல் இருக்க வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யும்போது அவ்வப்போது வொர்க்கவுட் ஃப்ரம் ஹோமும் செய்யுங்கள்!!