தமிழரின் வீர விளையாட்டுக்களில் ஒன்றுதான் சல்லிக்கட்டு. தமிழர்களால் பன்னெடுங்காலமாக இது விளையாடப்பட்டு வருகிறது. சல்லிக்கட்டு என்ற பெயர் எப்படி வந்தது என்றும் மேலும் இதைப்பற்றிய சில தகவல்களையும் பார்ப்போம்.
சல்லி என்பதற்கு பணம் என்று ஒரு பொருள் உண்டு. இன்றுமே பேச்சு வழக்கில் “என்னிடம் சல்லிக்காசு இல்லை, அம்மஞ்சல்லிக்குப் பிரயோசனமில்லை” என்பதெல்லாம் பயன்பாட்டில் இருக்கின்றன. (அம்மன் சல்லி என்பது அம்மன் படம் பொறித்த நாணயம்). அப்படிப்பட்ட சல்லிகளை அதாவது பண முடிப்பை, மாட்டின் கொம்புகளுக்கிடையே அல்லது மாட்டின் கழுத்தில் கட்டி மாட்டை அவிழ்த்துவிடுவர். சீறி வரும் அந்தக்காளையை அடக்குபவருக்கு அந்த பணமுடிப்பு பரிசாய் வழங்கப்படும். இதுவே சல்லிக்கட்டு என்று அழைக்கப்படுகிறது. வேட்டி என்பதை வேஷ்டி என்று அழைப்பதைப்போல, கந்தன், ஸ்கந்தன் ஆனதைப் போல வலிந்து வடமொழி திணிக்கப்பட்டு சல்லிக்கட்டு என்பது ஜல்லிக்கட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
சல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளைவிட, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகம் விளையாடப்படுகிறது. அவனியாபுரம், அலங்காநல்லூர் என ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு வகையில் விளையாடப்படுகின்றது. சல்லிக்கட்டு விளையாட்டை நடத்த விரும்பும் தனி நபர், அமைப்பு அல்லது குழு, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும், பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள், இடம் ஆகியவற்றை அரசு வெளியிடும் போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் குறித்த விபரத்தை அளித்து, மாட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும், மேலும், பாதுகாப்பு வசதிகள்,மருத்துவ வசதிகள், மாடுபிடிப்போர், மாடு வளர்ப்போர் பின்பற்றவேண்டிய ஒழுக்க நெறிமுறைகள், ,விளையாட்டு விதிமுறைகள் இவைகளை அரசே அரசிதழில் வெளியிட்டுள்ளது.
சல்லிக்கட்டில் விளையாடி காளையை அடக்குவதும், அடக்க முடியாத வகையில், வலிமைமிக்க மாடுகளை வளர்ப்பதும் இம்மக்களின் உணர்வோடு கலந்த ஒன்று. சல்லிக்கட்டு மாடுகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகள், மின்விசிறியோடு மாடுகளின் இருப்பிட வசதி, (பணக்கார வீட்டு மாடுகளுக்கு குளிர்சாதன வசதியும் உண்டு) சோப்பு போட்டு குளிக்க வைப்பது போன்ற பராமரிப்பு இவையெல்லாம் இங்கே மாடாய்ப் பிறந்திருக்கலாமோ எனப் பார்ப்பவரை பொறாமைகொள்ள வைப்பவை. வறுமையில் இருந்தாலும் வளர்க்கும் மாட்டை செம்மையாக வளர்ப்பவர்கள் இந்த சல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள். குடும்ப அட்டையில் காளையின் பேரைச் சேர்க்க முடிவதில்லை என்ற குறைதானே தவிர காளையும் ஒரு குடும்ப உறுப்பினர்தான்.
ஆபத்துக்கள் நிறைய இருந்தாலும் காளைகளை அடக்கவேண்டும் என்ற ஆர்வம்தான் இந்த விளையாட்டை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. புல்லட்டை பெட்ரோல் இல்லாத தள்ளுவதையே பெரிய சாதனையாய் எண்ணுபவர்களுக்கு மத்தியில், நிறைய படித்த இளைஞர்களும், வேலையில் இருக்கும் இளைஞர்களும் ஆர்வம் காட்டி, இந்த மண்ணின் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தைக் கட்டிக் காத்துவருகிறார்கள். நேற்று (14-01-2022) அன்று சிறப்பாக விளையாடி காரைப் பரிசாக வென்றது ஒரு 2K கிட்ஸ்தான் என்பதே அதற்குச் சாட்சி.
காளையை அடக்குபவர்களுக்குத் தங்கக் காசு, வெள்ளிப்பாத்திரங்கள், மிதிவண்டி, மிக்சி, கிரைண்டர், அண்டா, குண்டா, கார், பைக் என பலதரப்பட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசுகள் பெறுவதைத் தாண்டி, ஒருவர் எத்தனை மாட்டை அடக்கினார் என்ற பெயரையும், புகழையும்தான் இம்மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்!