டபுள்டக்கர் பஸ் ஒன்றில் ஒருவர் ஏறுவார், ஏறியபின் அதன் மேல் தளத்திற்குச் செல்லுவார். மேலே ஓட்டுநரே இல்லாம பஸ் ஒடுதுப்பா.. என்று பயந்து கீழே ஓடிவருவார். இப்படி ஒரு நகைச்சுவைத் துணுக்கு முன்பு பிரபலம். மும்பையின் இது உள்ளூர் ரயில்களில் இது உண்மையில் நடக்க வாய்ப்பு இருக்கிறது.ஆம், ஓட்டுநர் இல்லாத உள்ளூர் ரயில்கள் மும்பையில் அறிமுகமாகவுள்ளன.
தகவல் தொடர்பு மூலம் ரயில் கட்டுப்பாடு (Communication-Based Train Control – CBTC) தற்போது ஸ்பெயின், லண்டன் இங்கெல்லாம் நடைமுறையில் இருக்கிறது. இது இந்தியாவில் மும்பை மெட்ரோ ரயில்களிலும் அறிமுகமாக இருக்கிறது. இந்த CBTC முறையில் இரயில் தண்டவாளங்களில் சிக்னல்களை வைக்க வேண்டிய அவசியமில்லை, இது இரண்டு சிக்னல்களுக்கு இடையே உள்ள ரயில்களின் தூரத்தைக் குறைக்கவும் அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்கவும் உதவுகிறது.
உள்ளூர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) மற்றும் பன்வெல் நிலையங்களுக்கு இடையே தகவல்தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாடு (CBTC) அமைப்பை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. முதல் ஓட்டுநர் இல்லாத உள்ளூர் ரயில்கள் 2023 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CSMT-கல்யான் மற்றும் சர்ச்கேட்- விரார் இடையே CBDT ஐ அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. மும்பை ரயில் விகாஸ் கார்ப்பரேஷன் (எம்ஆர்விசி) இந்தத் திட்டத்திற்கான டெண்டரை இறுதி செய்யும் நிலையில் உள்ளது. இந்தத் திட்டம் முதலில் துறைமுகப் பாதையிலும், அதைத் தொடர்ந்து மத்திய இரயில்வே மற்றும் மேற்கு இரயில்வேயிலும் செயல்படுத்தப்படும். CBTC திட்டத்திற்கான டெண்டரை செயலாக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம், ”என்று MRVC தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரவி அகர்வால் கூறியிருக்கிறார். டெண்டர் விடப்பட்டு, எம்ஆர்விசி டெண்டரை வழங்க ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என்றும், அதன் பிறகு பணிகள் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. “வெவ்வேறு புறநகர் ரயில் பாதைகளை ஆராய்ந்த பிறகு, முதலில் துறைமுக இரயில்வேயில் அதை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்று எம்ஆர்விசியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஓட்டுநர் இல்லாமல் இயக்க முடியும் என்றாலும், ரயில்கள் மோட்டார்மேன்களால் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.. “புறநகர் இரயில் பாதைகளில் சிக்கலானவை என்பதால், ஒரு மோட்டார்மேனின் மேற்பார்வையில் நேரடி கட்டுப்பாடுகளை செய்வது அவசியமாகிறது. எதிர்காலத்தில், இந்த சிஸ்டம் மோட்டார்மேன் இல்லாமலேயே செயல்படும்,” என்று மூத்த எம்ஆர்விசி அதிகாரி மேலும் கூறினார்.
CBTC ஆனது மும்பை நகர்ப்புற போக்குவரத்து திட்டம் (MUTP) 3 A இன் ஒரு பகுதியாகும், இது 2019 இல் ஒப்புதல் பெற்று ₹5,928 கோடி செலவில் செயல்படவிருக்கும் திட்டமாகும். இந்த அமைப்பு ஒவ்வொரு மணி நேரமும் இயக்கப்படும் உள்ளூர் ரயில்களின் தற்போதைய எண்ணிக்கையை 16 முதல் 24 ஆக அதிகரிக்க உதவும். மேலும் இது ரயில்களுக்கு இடையேயான இடைவெளியை நான்கு நிமிடங்களிலிருந்து இரண்டரை நிமிடங்களாகக் குறைக்கும்.
ஹார்பர் இரயில்வேக்குப் பிறகு, மேற்கு இரயில்வே மற்றும் மத்திய இரயில்வேயில் மெதுவான பாதைகளில் CBTC அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. மத்திய மற்றும் மேற்கு இரயில்வேக்களின் விரைவு ரயில் பாதையிலும் CBTCயை செயல்படுத்த வேண்டும் என்றும் இதுகுறித்த ஆய்வு பரிந்துரைத்திருக்கிறது.