சிறியவர், பெரியவர் அனைவரும் விரும்புவது நிஜாம் பாக்கு என்று ஒரு பிரபல விளம்பரத்தை அனைவரும் அறிவோம். உண்மையில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒன்று என்னவென்றால் அது ரயில்தான். படுத்துக்கொண்டே பயணிக்கலாம், படுத்துறங்கலாம், பலதரப்பட்ட உணவுகளைச் சுவைக்கலாம், இயற்கை அழகை ரசிக்கலாம், பல் துலக்கலாம், பாத்ரூம் போகலாம் என பல வசதிகள் இந்த ரயில் பயணங்களில் உண்டு. அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க விரும்பும் அனைவரும் தேர்ந்தெடுப்பது ரயிலைத்தான்.
இயற்கையை ரசித்துக் கொண்டே செல்லும் இனிமையான பயணத்தில், அந்த ரம்மியமான சூழ்நிலையைக் கெடுப்பதற்கென்றே, சில வருவார்கள்.சத்தமாக பாடல் கேட்பது, வீடியோக்கள் பார்த்து சீமானைவிடக் கொடூரமாய் புஹாஹா எனச் சிரிப்பது, ஊர்க்கதை, உலகக் கதைகளை ஊருக்கே கேட்கும் வகையில் போனில் பேசுவது, இரவில் அனைவரும் கண்ணயரும் வேளையிலும் விளக்கை அணைக்காமல் வேடிக்கை காட்டுவது போன்றவற்றைச் செய்யும் வினோதர்கள் அவர்கள். அவர்களைச் சத்தம் போட்டுப் பணியவைக்க இயலாததால் சட்டம் போட்டு தடுக்க இந்திய ரயில்வே முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
தொந்தரவு இல்லாத ரயில் பயணத்தை மக்களுக்கு வழங்கும் வகையில், அதிக ஒலி எழுப்பும் இசை கேட்கவும், தொலைபேசியில் சத்தமாக பேசுவதற்கும் இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது.
சத்தமாகப் பேசுதல் அல்லது சத்தமாக இசையைக் கேட்டல் இதுபோன்ற செயல்களைச் செய்து பிடிபடும் பயணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அதுமட்டுமின்றி, குழுவாகப் பயணிக்கும் பயணிகள் வெகு நேரம் வரை பேசக் கூடாது என்றும், நைட்லேம்ப் தவிர அனைத்து விளக்குகளும் இரவு 10 மணிக்குப் பிறகு அணைக்கப்பட வேண்டும் என்றும் புதிய விதிகள் கூறுகின்றன. விதிகளை பின்பற்றாத பயணிகள் மீது ரயில்வே சட்ட விதிகளின்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.பயணிகளுக்கு இதுபோன்ற இடர்கள் எதுவும் ஏற்பட்டால், ரயில் ஊழியர்களே பொறுப்பாவார்கள். இதுபோன்று, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விவகாரம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததால், இந்திய ரயில்வே இந்த விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயணிகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க, RPF, டிக்கெட் பரிசோதகர்கள், கோச் உதவியாளர்கள் மற்றும் கேட்டரிங் உள்ளிட்ட ரயில் ஊழியர்கள், பயணிகளை ஒழுங்கையும் கண்ணியமான நடத்தையையும் உறுதி செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாகப்பட்டது அந்நியன் படத்தில் வருவதுபோல, பாட்டுப் பாடிக்கொண்டு, பஜனை செய்து கொண்டு பயணிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. லவுட் ஸ்பீக்கர் பயனாளிகள் ஒரு நல்ல ஹெட்செட் வாங்கிக் கொள்வது நல்லது. தாமாக நன்னடத்தைகளைப் பின்பற்றாத போது இதுபோன்ற சட்ட திட்டங்கள் அவசியமாகிறது!