“இந்த கொரோனாவோட பெரிய தலைவலியாப் போச்சுப்பா’’ என நம்மில் பலர் அலுத்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம். மைக்ரேன் என்றால் ஒருபக்கத் தலைவலி என்றும் தெரிந்திருக்கிறோம். ஆனால் அது என்ன ஓமிக்ரோன் ?
மைக்ரான் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன் மரபணு பிறழ்வு அல்லது திரிபு என்பதைப் பார்த்துவிடுவோம். பொதுவாக வைரஸ் என்பது ஓர் உயிரினத்தின் உடலுக்குள் உள்ள செல்களுக்குள் நுழைந்து தன்னைப் போன்ற எண்ணற்ற பிரதிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. பின் மற்றொரு உயிரினத்தின் உடலுக்குள்ளும் பரவி அங்கும் பெருகும். இப்படிப் பரவிய பின் உருவாகும் வைரஸின் பிரதிகளில் பரிணாம வளர்ச்சிமூலம் சில மாற்றங்கள் ஏற்படும். அதாவது புதிய வைரஸின் மரபணுவானது 100% பழைய வைரஸைப் போலவே இருக்காது. சிறு, சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இந்த மாற்றத்தைத்தான் வைரஸ் மரபணுப் பிறழ்வு அல்லது திரிபு என்கிறார்கள். அத்தகைய கொரோனா வைரசின் திரிபுகளில் ஒன்றுதான் கொடூரமான கொரோனா குடும்பத்தின் புதுவரவான ஓமிக்ரோன்!
கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து அது பல உருமாற்றங்களைப் பெற்றுவருகிறது. கொரோனா வைரசின் புத்தம் புதிய அதிக வீரியமுள்ள உருமாறிய வைரசுக்குத்தான் ஓமிக்ரோன் என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. ‘ஓமிக்ரோன்’ தென் ஆப்ரிக்கா, மொசாம்பிக் போன்ற நாடுகளிலும், ஹாங்காங்கிலும் இந்த புதிய வகை வைரஸ்மூலம் பாதிப்பு ஏற்பட்டு, அது உலக மக்களின் மனதில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. இது தென் ஆஃப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த ஒருவர் மூலம் இந்தியாவிற்கு வந்துவிட்டது கவலையளிக்கக் கூடிய ஒரு செய்தி.
ஓமிக்ரோன் எனும் பெயர் எப்படி வந்தது?
கிரேக்க எழுத்துகளின் வரிசையில்தான் மரபணு மாறிய கொரோனா வைரசின் புது வரவுகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில்தான் ‘ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா’ என பெயரிடப்பட்டது. இந்நிலையில் தற்போது உருவாகி உள்ள புதிய வகை வைரசுக்கு, கிரேக்க எழுத்து வரிசையில் உள்ள, ஓமிக்ரோன் என்ற எழுத்தை வைத்து பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஓமிக்ரோன் எப்படிப்பட்டது?
இவை மற்ற உருமாறிய வைரஸ்களை விட அதிக வீரியம் கொண்டவை என்று அறிவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்குமுன் உருமாறிய கொரோனா வகைகளை விட அதிக ஸ்பைக் புரோடீன்களை ஓமிக்ரோன் வைரஸ் கொண்டுள்ளதால், எளிதாக மனித செல்களுக்குள் புகுந்து விட முடியும். இதனால்தான் முந்தைய வைரஸ்களை விட மிகவேகமாக பரவக் கூடியதாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே போட்டிருக்கும் தடுப்பூசி மருந்துகளை 40 சதவீதம் செயலிழக்க வைக்கும் சக்தி, ஓமிக்ரோன் வைரசுக்கு இருப்பதாக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரானின் அறிகுறிகள் | Omicron Symptoms In Tamil
ஏற்கனவே தடுப்பூசி போட்டுவிட்டோமே என்ற தைரியத்தில் இருப்பவர்களுக்கு ஒமைக்ரானால் எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என்பது கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. வறட்டு இருமல், காய்ச்சல், உடல்வலி, இரவில் அதிக வியர்வை இவைதான் ஒமைக்ரானின் அறிகுறிகளாக இருக்கின்றன.
ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் வழக்கத்திற்கு மாறானதாக இருக்காது என்று தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிலபேரிடம் இதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாமலேயே ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரானின் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிகள்
முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், கைகளைச் சோப்பு, கிருமி நாசினி கொண்டு அடிக்கடிக் கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம்தான், ஓமிக்ரோன் பரவலை குறைக்க முடியும் என்பது வல்லுனர்களின் கருத்து. வருமுன் காப்பதே சிறந்தது என்பது நம் முன்னோர் வாக்கு கவனமாய் இருப்போம், கொரோனாவை வெல்வோம்!