இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் படங்கள் எல்லாமே பரபரப்பானவை, பெரும் வெற்றிகளைக் கொடுப்பவை. பாகுபலி வெற்றிக்குப் பின் அகில இந்திய அளவில் கவனம் ஈர்த்த பிரபல இயக்குநர் ஆனார் ராஜமௌலி.. இவரின் அடுத்த படமான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் 19 காரணமாக தள்ளிப்போடப்பட்ட இப்படம் வரும் மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் தயாரிக்கும் மேக்னம் ஓபஸ் நிறுவனம் திங்களன்று இந்த வெளியீட்டு தேதியை அறிவித்தது. இது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள `ஆர்ஆர்ஆர்’, பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடிய, நிஜ வாழ்க்கையில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத இரண்டு ஹீரோக்களின் கற்பனைக் கதை என்று சொல்லப்படுகிறது.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முறையே 1922 ஆம் ஆண்டு ரம்பா கிளர்ச்சியின் தலைவரான அல்லூரி சீதாராம ராஜுவாகவும், ஹைதராபாத் நிஜாமை எதிர்கொண்ட கிளர்ச்சியாளர் கொமரம் பீம் ஆகவும் நடித்துள்ளனர். அலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவ்கன் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் இராஜமௌலி, இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் வெற்றிக்கூட்டணி இதிலும் தொடர்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
`ஆர்ஆர்ஆர்` ஜனவரியில் திரைக்கு வரவிருந்தது, கோவிட் 19 காரணமாக மார்ச் 25ல் வர இருக்கிறது.லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு!