கொரோனாவால் பலியானவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை – ஆதித்யபிர்லா குழுமம்

scholorship children of corona victims aditya birla group

ரோனா எனும் பெருந்தொற்று, சகலமானவர்களின் வாழ்வாதாரத்தையும் சகட்டுமேனிக்குப் பாதித்து நோயின் முன் அனைவரும் சமம் என சமத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறது. ஏழை, பணக்காரர், பெரியவர், சிறியவர் என பாரபட்சமின்றி பலரையும் பழிவாங்கியிருக்கிறது, பலியும் வாங்கியிருக்கிறது. இதில் தாய், தந்தை இருவரையும் கொரோனாவால் இழந்து வாடும் குழந்தைகள் நிலைதான் கொடுமையானது. அவர்களுக்கு அனைவரும் உதவிக்கரம் நீட்டி ஆறுதல் அளிக்கின்றனர். அந்தவகையில் அவர்களின் கல்விக்கு உதவுகின்ற ஒரு மகத்தான பணியை ஆதித்யபிர்லா குழுமம் முன்னெடுத்திருக்கிறது.

ஆதித்யா பிர்லா கேபிடல் கோவிட் ஸ்காலர்ஷிப் திட்டம்

இது சமூக நலனில் அக்கறைகொண்ட ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் இலாப நோக்கமற்ற அமைப்பான ஆதித்யா பிர்லா கேபிடல் ஃபவுண்டேஷனின் ஒரு முன்னெடுப்பாகும். கோவிட்-19 காரணமாக பெற்றோரை  இழந்த மாணவச்செல்வங்களின் கல்வி தடைபட்டுவிடாமல் தொடர்ச்சியாகப் பயில நிதி உதவி மற்றும் அவர்களின் கல்வி தொடர்பான சேவைகளை வழங்குவதே இந்த அரிய திட்டம். இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ், 1 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலைப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க 60,000 ரூபாய் (ஒருமுறை) வரையிலான உதவித்தொகையைப் பெறலாம்.

தகுதிகள்

  • விண்ணப்பிப்பவரின் பெற்றோர் கோவிட் 19 ஆல் இறந்திருக்கவேண்டும்.
  • ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு அல்லது கல்லூரி இளங்கலை பயின்று கொண்டிருக்கவேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கல்வியைத் தொடர்பவராக இருக்க வேண்டும்.
  • இந்தியராய் இருக்க வேண்டும்

பலன்கள்

1 முதல் 8 ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு 24,000 ரூபாய், 9 முதல் 12 ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு 30,000 ரூபாய், professional UG courses படிப்பவர்க்கு 60,000 ரூபாய், general UG courses படிப்பவர்க்கு 36,000 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த உதவித்தொகையை கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், புத்தகம் உள்ளிட்ட கல்விக்குத் தேவையான பொருட்கள், இணையம், இணைய வழிக்கல்வி போன்றவற்றிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  1. முந்தைய வகுப்பின் மதிப்பெண் பட்டியல்
  2. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று (ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுநர் உரிமம்/பான் அட்டை)
  3. நடப்பு ஆண்டு சேர்க்கைச் சான்று (கட்டண ரசீது/சேர்க்கை கடிதம்/நிறுவன அடையாள அட்டை/ bonafide certificate )
  4. பெற்றோரின் இறப்புச் சான்றிதழ்
  5. கோவிட்-19 ஆல் இறந்ததற்கான ஆதாரம் (மருத்துவமனை ரசீதுகள், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு, கோவிட் பரிசோதனை அறிக்கை, கோவிட் மருந்துக்கான கட்டணங்கள், மருத்துவமனை டிஸ்சார்ஜ் சுருக்கம் போன்றவை)
  6. விண்ணப்பதாரரின் (அல்லது பெற்றோர்) வங்கி கணக்கு விவரங்கள்
  7. வருமானச் சான்று (கட்டாயமல்ல)
  8. புகைப்படம்

எப்படி விண்ணப்பிப்பது?

www.buddy4study.com வழியாக இதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். Buddy4Study எனும் தளம் இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தை செயல்படுத்துகிறது (implementation partner).

Buddy4Study இல் உங்கள் மின்னஞ்சல்/மொபைல்/ஜிமெயில் கணக்குடன் பதிவு செய்து இணையம் வாயிலாகவே ‘ஆதித்ய பிர்லா கேபிடல் கோவிட் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31-01-2022

இதற்கான லிங்க்:
https://www.buddy4study.com/page/aditya-birla-capital-covid-scholarship-program

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறி வித்தல்
எனும் பாரதியின் வாக்கிற்கு இணங்க செயல்படும் ஆதித்யபிர்லா குழுமத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

By சிவ.அறிவழகன்

எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையில் பணிபுரிபவர். 2009ல் இருந்து இணையத்திலும் தமிழ் இதழ்களிலும் தளையிலா எழுத்தாளராக (Freelance Writer) இருந்துவருகிறார். தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி படைப்பாளராக பணிபுரிகிறார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *