மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் பல ஏமாற்றங்களைச் சந்திப்பது இயற்கைதான். இதில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவது பெருத்த ஏமாற்றம். ஆம், நமக்கிருப்பது ஒரே வயிறு என்பதால் அதற்குச் செல்லம் கொடுத்து வளர்த்து, அதனால் உடல் எடை கூடிய அந்த பெருத்த ஏமாற்றம்தான் அது. சின்னச்சின்ன அன்றாட செயல்களில், அதை எப்படியெல்லாம் தவிர்ப்பது என்பதைப் பற்றி ஜாலியாக அலசலாம் வாருங்கள்!
- பக்கத்துத் தெரு, அடுத்த தெருவுக்கெல்லாம் ஆட்டோ, பைக், கார் இவற்றைப் பயன்படுத்தாதீர்கள். அதாகப்பட்டது,குறைவான தூரங்களுக்கு கால் டாக்சியைப் பயன்படுத்தாதீர்கள்,அதெற்கெல்லாம் காலையே டாக்சியாகப் பயன்படுத்துங்கள் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதை உணருங்கள்.
- வயிறு, குப்பைத்தொட்டி அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உணவு வீணாகிறதே என்று குப்பைத்தொட்டியில் போடாமல் வயிற்றுக்குள் போடாதீர்கள். குப்பை உணவுகளுக்கு “குட் பை” சொல்லுங்கள். இப்போது வள்ளுவர் மாம்ஸ் இருந்திருந்தால் “குப்பையில் கொட்டிவிடத் தோன்றவில்லை என்பதுதான் தொப்பை வளர்க்கும் கலை” என்று எழுதியிருப்பார். தேவையான அளவே சமையுங்கள், அளவுக்கு மிஞ்சினால் ஐஸ்கிரீமும் நஞ்சுதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!
- ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று சில அறிவுரைகளைக் கேட்டிருக்கலாம். எல்லா இடங்களிலும் இதைப் பின்பற்றக்கூடாது. ,முக்கியமாக பஃபெட் (buffet) பரப்புணவுகளில் இதை முயன்று பார்க்கக் கூடாது .நோய்வாய்ப்படுவதற்கு முக்கிய காரணமே எதற்கும் ‘நோ‘ சொல்லாமல் வாயில் போடுவதுதான் என்பதை மறவாதீர்கள்!
- பெட்ரோல் விலையும், நமது உடல்எடையும் ஒன்றுபோலத்தான், ஏறுமே ஒழிய இறங்குவதற்கு வாய்ப்பு என்பது மிகமிக கடினம். இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிக்க நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். உங்கள் பைக்கிற்கு பை பை சொல்லிவிட்டு. பைசைக்கிள் வாங்கவேண்டியதுதான் அது. இதனால் உங்கள் உடல் பருமன் குறையும், பர்ஸின் எடை கூடும். இரண்டுமே உங்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது என்பதை உணருங்கள்!
- உடல் எடைக்குறைப்பில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, மின் தூக்கியை, அதாங்க லிஃப்டைப் பயன்படுத்தாமல் படிகளைப் பயன்படுத்துவது. அதுதான் எடைக்குறைப்பில் செய்யும் முதல் படியாக இருக்கவேண்டும். படிப்படியாய் ஏறுங்கள், படிப்படியாய் உங்கள் எடையும் குறையும். படி, அதுதான் உங்கள் வாழ்க்கைக்கு லிஃப்ட் என்பதை உணருங்கள்!
- யார் என்ன சொன்னாலும் எண்ணெய்ப் பலகாரங்கள் மேல் ஈர்ப்பு இருக்கிறதா? எண்ணெய்ப் பொறியல்களுக்கு ஒரு மறியல் போராட்டம் செய்து, அவற்றைத் தவிருங்கள். பொறித்த உணவுகளை உண்பதென்பது உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் “ஆயில்” தண்டணை என்பதை மறவாதீர்கள். வறுத்த உணவுகள் உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
- வீட்டில் இருக்கும் சின்னச்சின்ன வேலைகளை நீங்களே செய்யுங்கள். ஒட்டடை அடிக்க ஆளைத் தேடாதீர்கள். ஒல்லிக்குச்சியாக ஆகவேண்டும் என்றால் ஒட்டடைக்குச்சியை எடுத்துத்தான் ஆகவேண்டும். வீட்டைக்கூட்டித் துடைத்துப் பெருக்குங்கள். வீடு சுத்தமாகும், வியர்வையால் உங்கள் உடலும் சுத்தமாகும். உடல் எடை பெருக்காமலிருக்க நீங்கள் வீட்டைப் “பெருக்கவேண்டியது” அவசியம்.
- காலையில் நேரத்தோடு எழுந்து உடற்பயிற்சி செய்யுங்கள். நேரத்தோடு எழுந்திருப்பதெல்லாம் நடக்குற கதையா? என்றெல்லாம் யோசிக்காதீர்கள். ஏனெனில் உங்கள் உடல் எடையில் நடந்த தவறு என்பது நடக்காமல் விட்டதனால் வந்த தவறுதான். எனவே வாக்கிங், ஜாக்கிங், சைக்ளிங் எதோ ஒன்றில் ஆர்வமாய் ஈடுபடுங்கள். அதுவே உங்களை யாரும் ரேகிங் செய்யாமல் இருக்கும் வழி!
- நாவடக்கம் என்பது மிக முக்கியமானது. வாரம் முழுவதும் இலை,தழை,சாலட் என பிராணிகளைப் போலச் சாப்பிட்டவர்கள்.ஞாயிறன்று அந்த பிராணியையே பிரியாணியாக சாப்பிட்டு,டயட்டுக்கும் விடுமுறை கொடுத்துவிடுவதைத் தவிர்க்கவேண்டும். உடல் இளைக்க ஓடும் பயணத்தில், வீட்டுச்சமையலிலும் இறைச்சி “வேக” தடை போடுங்கள். குறிக்கோளை அடையும்வரை இதுபோன்ற உணவுகளுக்கு குட் பை சொல்லிவிடுங்கள்,இல்லையேல் அவை குப்பைபோல் உங்கள் உடலில் சேர்ந்து தொப்பையாக மாறிவிடும் அபாயத்தை உணருங்கள்!
- புதுவருடத்தின் தொடக்கத்தில் ஜிம்முக்குப் போய் உடல்எடையைக் குறைக்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவர்களைப் பார்ப்பது மிகவும் கடினம். விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் மட்டுமே என்பதுபோல் இந்த ஆர்வத்திற்கும் ஆயுள் குறைவே. அந்த லட்சியத்தின் ஆயுளை அதிகப்படுத்துங்கள்,அதுவே உங்கள் ஆயுளையும் அதிகப்படுத்தும். பக்கத்துத் தெருவில் இருக்கும் ஜிம்முக்குப் பைக்கில் செல்லாமல் இருப்பது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று!
- குண்டானவர்களுக்கு உண்டான எளிதில் செய்யக்கூடிய ஒன்று நடைப்பயிற்சிதான். அதற்குப் பணம் எதுவும் தேவையில்லை,இளைக்கவேண்டும் என்ற மனம் இருந்தாலே போதும்.ஏனெனில் நாக்கு மூலம் பெருத்த நம் உடலை “வாக்(walk)”குமூலம்தான் சரிசெய்ய முடியும்.அதுவே நாம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய “வாக்”குறுதி அதைமட்டும் விடாமல் தொடர்ந்து செய்தால் நாமும் வெற்றிநடைபோடலாம் வாழ்த்துக்கள்!