மும்பையின் சயான் பகுதியில் வசிப்பவர் சுந்தர் சிவலிங்கம் நாயுடு. வயது 47. அவரது மனைவி புஷ்பராணி சுந்தர் நாயுடு. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சாய் பிரசாத், மும்பை கிரிக்கெட் அகடமில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் விளையாடும் வீரர் ஆவர். மகள் அஸ்வினி 10ம் வகுப்பு படிக்கிறார்.
சுந்தர் சிவலிங்கம் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மும்பை குடிசை மேம்பாட்டு பிரிவு தலைவராக உள்ளார். 1997 முதல் அவர் கட்சியில் செயல்பட்டு வருகிறார். பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ள அவர், தனது சிறந்த செயல்பாடுகளால் இந்த பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். கட்சியின் தலைவரான சரத்பவார் மற்றும் மேல்மட்ட தலைவர்களும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவர் மற்றும் சிறந்த பண்புகள் மற்றும் எளிமையாக பழகும் குணம் கொண்டவர்.
சுந்தர் சிவலிங்கம் பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் மும்பைதான். அவரது பெற்றோர் காலத்திலேயே மும்பையில் குடியேறிவிட்டனர். ஆனால் அவர்களின் மூதாதையர்கள் தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, கொட்டாவூர் பகுதியில் வசித்துள்ளனர். எனவே வருடம் ஒருமுறை தமிழகம் வரும்போது இந்த பகுதிகளுக்கு சென்றுவருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் சுந்தர் சிவலிங்கம் நாயுடு.
சுந்தர் சிவலிங்கம் நாயுடு அதிகம் படிக்காதவர். 8ம் வகுப்புவரையே படித்திருந்தாலும், உழைப்பாலும், ஊக்கத்தாலும் இன்று உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளார். படித்துமுடித்ததும் பெங்களூரு பகுதிக்கு சென்று சிறுவயதில் மாடுகள் மேய்த்ததையும் நினைவு கூர்ந்த அவர், பின்பு மும்பைக்கு திரும்பி ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்து தனது உழைப்பைக் காட்டி உயர்ந்துள்ளார். உழைப்பின் பலனாக 2000 ஆண்டிலேயே மும்பையில் சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.
இளம் பருவத்திலேயே கட்சி பணிகளிலும் ஆர்வம் காட்டிய அவர், கருணை உள்ளத்துடன் யார், என்ன உதவி கேட்டாலும் தன்னால் இயன்றவரை உதவுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். குறிப்பாக தமிழர்கள் கேட்கும் உதவிகளை தட்டாமல் செய்து கொடுத்து வந்துள்ளார்.
அவரிடம் கேட்கப்பட்ட பரபரப்பான கேள்விகளுக்கு, மிக எளிமையான பதில் அளித்தார். அந்த சுவையான நேர்காணல் இதோ…
அரசியலிலும், வாழ்விலும் வருத்தப்படும் சம்பவங்கள் என்றால் எதைச் சொல்வீர்கள்?
அரசியலில் வருத்தப்படும் நிகழ்வு ஏதுமில்லை. வாழ்க்கையில் எனது 7 வயதிருக்கும்போது அம்மாவை இழந்தேன். 8 வயதில் அப்பாவை இழந்துவிட்டேன். பின்னர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தேன். சொந்த உழைப்பில் முன்னேறினேன்.
அரசியல் பயணத்தால் சொந்த வாழ்க்கையில் இழப்புகளை சந்தித்தீர்களா?
நான் உழைத்து சம்பாதித்த பணத்தை அதிகமாக அரசியலில் இழந்துள்ளேன். வேறு எதையும் நான் வாழ்க்கையில் இழக்கவில்லை.
அரசியலையும், குடும்ப நிர்வாகத்தையும் குழப்பிக் கொள்ளாமல் எப்படி சமாளிக்கிறீர்கள்?
அரசியல் நிகழ்வுகளுக்கும், குடும்பத்திற்கும் தனித்தனியே நேரம் ஒதுக்க முயற்சிப்பேன். சில அரசியல் நிகழ்வு பயணங்கள் நீண்ட நேரத்தை பிடித்துக் கொள்ளும் என்பதை அறிந்தால் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளிடம் விஷயத்தை சொல்லிவிட்டு செல்வேன். அதனால் குடும்பத்தினர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதேபோல அரசியல் நிகழ்வுகள் முடிந்து வீட்டிற்குள் வந்துவிட்டால் அரசியல்வாதி என்பதை மறந்துவிட்டு, குடும்பத்தலைவனாக வீட்டில் உள்ள பொறுப்புகளை கவனிப்பேன். அப்போது அரசியல் பேசமாட்டேன். காய்கறி வெட்டிக் கொடுப்பது போன்ற உதவிகளை செய்வது என வீட்டில் ஒரு கணவராக, தந்தையாக செயல்படுவேன். அரசியல்வாதியாக இருக்கமாட்டேன்.
உங்கள் அரசியல் முன்னோடி யார்?
தலைவர் சரத்பவார்தான்.
உங்கள் உயர்வுக்கான காரணமாக எதை நினைக்கிறீர்கள்?
சாயி பாபாவின் அருளாசியும், என் குடும்பத்தார் ஒத்துழைப்பும், சொந்த உழைப்புமே எனது முன்னேற்றத்துக்கு காரணமாக நினைக்கிறேன்.
மக்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
மும்பையின் சயான் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி எதிரே எனது அலுவலகம் உள்ளது. மக்கள் பலரும் என்னை அறிவார்கள். எனவே எந்த நேரத்திலும் அலுவலகத்தில் வந்து உதவி கேட்பார்கள். என்னால் முடிந்ததை செய்து கொடுப்பேன். பலநேரங்களில் உதவி கேட்பவர்கள் யாரென்று பார்க்காமல் உதவி உள்ளேன். உதவி தேவைப்படுபவர்கள் என்னை அலுவலகத்தில் வந்து பார்க்கலாம்
உங்கள் உழைப்புக்கு கிடைத்த கவுரவமாக எதை நினைக்கிறீர்கள்?
எனது சேவையை பாராட்டி தி அமெரிக்கன் பல்கலைக்கழகம், 8ம்வகுப்பு வரையே படித்துள்ள எனக்கு 2019ல் டாக்டர் பட்டம் வழங்கியதை சிறந்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.
தமிழக இயக்கங்களை மும்பையில் வளர்க்க ஆர்வம் காட்டியது உண்டா?
நாம் தமிழர் இயக்கம் தோன்றிய ஆரம்ப காலத்தில் மும்பை தமிழர்களை ஒன்றிணைக்க உதவியாக இருக்கும் எனக் கருதி, நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கான உதவிகளை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளேன்.
உங்கள் கட்சியை தமிழகத்தில் வளர்க்கும் எண்ணம் உண்டா?
கட்சி தலைமை அதற்கான வாய்ப்பு வழங்கினால் தமிழகத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பணியை சிறப்பாக செய்வேன்.
மும்பை தமிழர் இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளீர்களா?
அரசியல் சாராமல் செயல்படுவதற்காக ஜெய் ஜவான், ஜெய்கிசான் இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். இது அனைத்து மக்களுக்குமான தொண்டு இயக்கம். இதன் அறக்கட்டளை மூலம் கடந்த 67 வாரங்களாக 500 பேருக்கு வாரம் தோறும் அன்னதானம் வழங்கி வருகிறோம். மும்பை தமிழர்களை ஒன்றிணைக்க போராடுவதே எனது லட்சியம்.
மும்பை தமிழர்களுக்கு என்ன திட்டம் கிடைப்பதற்காக போராடி வருகிறீர்கள்?
தென்னிந்தியாவில் இருந்து இளம் வயதிலேயே மும்பையில் குடியேறியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பலருக்கு சாதி சான்றிதழ் கிடையாது. அவர்களால் மும்பையிலும் சான்றிதழ் பெற முடியாத நிலையில் பல்வேறு உதவிகள் கிடைக்காமல் வாடி வருகிறார்கள். அவர்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் சலுகைகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம். அதை பெற்றுக்கொடுப்பது எனது லட்சியங்களில் ஒன்றாகும்.
மும்பை வாழ்க்கைக்கும், தமிழக வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் பற்றி சொல்லுங்கள்?
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையில்தான். தமிழகத்தில் உள்ள பூர்விக பகுதிக்கு ஆண்டிற்கு ஒருமுறை செல்வோம். மும்பை வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது. தமிழகத்தில் தமிழர்கள் இலவசங்களை வாங்காமல் இருந்தால் இன்னும் சிறப்பாக முன்னேறுவார்கள் என்பது என் கருத்து.
ஆன்மிக நம்பிக்கை உள்ளதா?
நிச்சயமாக. 100 சதவீதம் கடவுளை நம்புகிறேன். நான் தீவிர சாயிபாபா பக்தன்.
அரசியல் ஒரு சாக்கடை என நினைக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்வீர்கள்?
அரசியல் சாக்கடையாகத் தெரிந்தால் அதை சுத்தம் செய்யும் பொறுப்பும் இளைஞர்களுக்குத்தான் உள்ளது. இளைஞர்கள் ஒரு இயக்கமாக இணைந்தோ, ஒரு கட்சியில் இணைந்தோ அரசியலை புனிதப்படுத்த வேண்டும். அரசியலில் சேர விரும்பும் இளைஞர்கள் ஒரு இலக்கு வைத்துக் கொள்ள வேண்டும். படிக்கும்போது எப்படி இவ்வளவு மார்க் வாங்க வேண்டும், இநத வேலைக்கு செலல வேண்டும், இவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறோம். அதுபோல அரசியலிலும் இலக்கு வைத்துக்கொள்ளலாம். அரசியலில் சம்பாதிக்கவும் வழி இருக்கிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் ஊழல்வாதிகளாகி சிக்கிக்கொள்கிறார்கள். அரசியலில் சேவை செய்யும்போது நமக்கான உழைப்புக்கான பலனையும் சம்பளமாக பெற்றுக்கொள்ளலாம் தவறில்லை.
சிறப்பு மும்பை தமிழர்களின் சிறப்பு மற்றும் திறைமைகளை வெளியே கொண்டுவந்து அனைத்து மக்களிடமும் அறிமுகபடுத்தும் அற்புதமான பணியினை பாராட்டுகிறேன
Good vwark