வாழ்வின் அனைத்து அன்றாடத் தேவைகளை வாங்குவதற்கும் செயலிகள் வந்துவிட்டன. உணவு, உடை, உறைவிடம், மளிகை என சகலவித அன்றாடத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள செயலிகள் உதவி புரிகின்றன. இதன் விபரீத வளர்ச்சியாக இசுலாமிய பெண்களை ஏலம் விட்டு, கடந்த சில தினங்களாகப் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது புல்லிபாய் எனும் செயலி.
சில மாதங்களுக்கு முன்பு சுல்லி டீல்ஸ் (Sulli Deals) என்ற செயலியில் நூற்றுக்கும் மேற்பட்ட இசுலாமிய பெண்களின் புகைப்படங்களோடு அவர்கள் விற்பனைக்கு என்று வெளியிடப்பட்டிந்தது. ட்விட்டர் எனும் சமூக வலைதளத்திலிருந்து சம்பந்தப்ப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் அந்த செயலி முடக்கப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும்.
அதே போல ஒரு சம்பவம் மறுபடியும் நடந்தது கடந்த சில நாட்களாக அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. புல்லிபாய் என்னும் செயலியில் பெண்கள் விற்பனைக்கு என்பது போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும் இசுலாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து இந்த மனிதத் தன்மையற்ற செயல்கள் நடைபெற்றுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அனைவரும் அதிருப்தி தெரிவித்த நிலையில் சிவசேனா எம்பியான பிரியங்கா சதுர்வேதி ஒரு டிவிட்டர் தளம் வாயிலாக புகார் தெரிவித்திருந்தார். பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தான் பலமுறை கேட்டுக் கொண்டும் அதற்கு பலனில்லை என்று அவர் விரக்தியாகப் பதிவிட்டிருந்தார்.
இந்த டிவிட்டர் பதிவுக்குப் பதிலளித்திருந்த அமைச்சர், புல்லிபாய் செயலி முடக்கப்பட்டதாக் கூறியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் கணினி அவசரகால பதிலளிப்புக் குழுவும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடைய இந்தப் பதிவு ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் உள்ளது.
இது குறித்து விசாரித்த மும்பை சைபர் பிரிவு போலீஸார், இரண்டு நாள்களுக்கு முன்பு பெங்களூரில் பொறியியல் படித்துவந்த பீகாரைச் சேர்ந்த விஷால் குமார் ஷா (21) என்பவரிடம் விசாரணை நடத்தியதில், புல்லிபாய் மொபைல் ஆப்பை உருவாக்கிய உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வேதா சிங் (18) என்ற இளம்பெண்ணைக் கைதுசெய்தனர். அவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில், தனது நேபாள நண்பர் கேட்டுக்கொண்டதால் இந்த மொபைல் ஆப்பை உருவாக்கியதாகப் ஸ்வேதா சிங் தெரிவித்திருக்கிறார். இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. எது, எப்படியோ 24 மணி நேரத்தில் துப்பு துலக்கி குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ள மும்பை போலீஸார் பாராட்டத்க்கவர்கள். நல்லவை, கெட்டவை இரண்டுக்குமே செயலிகள் இருக்கின்றன. பயன்படுத்தும் நாம்தான் நல்லவற்றைச் சேர்த்து, தீயவற்றை விலக்கவேண்டும்!