இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர். மும்பை இந்தியன் அணியின் முதுகெலும்பு. எதிரணி பேட்ஸ்மென்களுக்கோ சிம்ம சொப்பனம். இப்படிப்பட்ட பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்தான் ஜஸ்பிரித் ஜஸ்பிர் சிங் பும்ரா எனப்படும் ஜஸ்பிரித் பும்ரா.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கண்டுபிடிப்பான இவர், மீசை, தாடிகூட சரியாக வளராத பருவத்தில் விளையாட வந்தவர், எதிரணி வீரர்களைத் தனது யார்க்கர் பந்துவீச்சால் நிலைகுலைய வைப்பவர். ஒரு தினப்போட்டிகள், டி20, டெஸ்ட் என எல்லா வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் தனது முத்திரையை பதித்தவர். கிரிக்கெட் வியையாடும்போது மைதானத்தில் என்ன நடந்தாலும் அமைதியாய், புன்னகை பூத்து இருப்பது இருப்பவர்தான் பும்ரா.
ஒரு பந்துவீச்சாளருக்கு தன்னுடைய பந்துவீச்சில் கேட்ச் ஏதாவது தவற விடப்பட்டால் பயங்கரமாகக் கோபம் வரும். ஆனால் பும்ராவோ அதைச் சிரித்த முகத்தோடு கடந்துவிடுவார். முகத்தைச் சுளிப்பது என்பது மிக அரிதாகவே இருக்கும். அவரது இந்தப் பண்பு அனைவராலும் விரும்பப்பட்டது. ஆனால் சமீப காலமாக அவரது நடவடிக்கைகளில் சிறு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புன்னகை கொஞ்சம் குறையத்துவங்கி, கோபம் தலைக்கேறத் துவங்கியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் நடைபெற்ற லார்ட்ஸ் டெஸ்டின் 5-வது நாளில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஹெல்மெட்டால் இவர் தலையை இடித்தது பும்ராவிடம் ஏற்பட்ட மாற்றத்தின் முதல் புள்ளி. இந்த மேட்ச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் மீதும் இவர் காட்டிய கோபம், வெறுப்பு பலருக்கும் அதிருப்தியை அளித்தது. பும்ராவின் தரம் குறைந்துபோனது எனும் விமர்சனத்திற்கும் உள்ளானார்.
இப்போது மீண்டும், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பும்ரா இதேபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கினார். இந்திய தென் ஆஃப்ரிக்கத் தொடரின் அறிமுகவீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான மார்கோ ஜான்சன் பேட்டிங் செய்யும் போது, பும்ரா பலமுறை பவுன்சர்களை வீசினார். பின்னர் விரக்தியுடன், கோபத்துடன் அவரிடம் நடந்துகொண்டார். டேல் ஸ்டெய்ன் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற சர்வதேச கிரிக்கெட்டின் சில பிரபலங்கள் பும்ரா நடந்துகொண்ட விதம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சஞ்சய் மஞ்சரேக்கர் “இந்த கோபம் சுவாரஸ்யமானது. இதேபோல்தான் இங்கிலாந்திலும் நடந்தது. மிகவும் கோபமாக இருக்கும் போது வழக்கம் போல் முகத்தில் புன்னகையுடன் இருக்கவேண்டும்” என்றார். அனைவரின் எதிர்பார்ப்பும் அதுவே!