மும்பையில் போலீஸார் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர். தனியாக இருக்கும் முதியவர்கள் பட்டியலை சேகரித்து வைத்துக்கொண்டு அடிக்கடி அவர்களுக்கு என்ன தேவை என்பதை கண்காணித்துக் கொள்கின்றனர். மும்பை மாட்டுங்கா பகுதியில் பாரத் ருபேரல் (74) என்பவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரின் மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். நேற்று திடீரென தனது மகளுக்கு போன் செய்து தனக்கு தனியாக இருக்க மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், நோய் பிரச்னைகளில் இருந்து தன்னை கவனித்துக்கொள்ள முடியவில்லை என்றும் கூறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
அதோடு தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி வைத்திருப்பதாகவும், சொத்து தொடர்பாக உயில் எழுதி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அவர் போனை வைத்தவுடன் அமெரிக்காவில் இருக்கும் அவரின் மகள் உடனே மாட்டுங்கா போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து தனது வீட்டு முகவரியை சொல்லி தனது தந்தை தற்கொலை செய்து கொள்ளப்போகிறார். அவரை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டார். உடனே போலீஸார் சிறிதும் தாமதிக்காவில் ருபேரல் இல்லத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஏற்கனவே ருபேரல் 30 தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார். உடனே அவரை மீட்டு போலீஸார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸார் தக்க நேரத்தில் சென்று தனது தந்தையின் உயிரை காப்பாற்றியதால் அவர்களுக்கு அமெரிக்காவில் இருக்கும் ருபேரல் மகள் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். படித்து வேலைக்காக பிள்ளைகள் வெளிநாடுகள் அல்லது வெளியிடங்களுக்கு சென்றுவிட்ட நிலையில் மும்பையில் இருக்கும் முதியவர்களில் 40 சதவீதம் பேர் தனியாக வசிப்பதாகவும், அவர்களை கவனிக்க யாரும் இல்லாமல் இருப்பதாகவும் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
Source: விகடன்