உணர்ச்சிகளை வெளிப்படுத்த எளிய வழி | எமோஜி

Emoji For Children

இணைய வழித்தகவல் பரிமாற்றத்தின்போது நம் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை எழுத்துக்களுக்குப் பதிலாக அனுப்பப்படும் மிகச்சிறிய படங்களை எமோஜி என்கிறோம். சமூக வலைதளங்களில் எந்த உரையாடலிலும் எமோஜி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எக்கச்சக்கமாய் எழுத்துக்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது இந்த எமோஜிகள்.

ஸ்மைலி என்பது நகைமுகம் (சிரித்த முகம்) எனப்படுகிறது. எமோஜிகள் எல்லா வகையான உணர்ச்சியையும் வெளிப்படுத்த உதவும் சித்திரங்கள் என்பதால் இவை உணர்சித்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மனிதர்களின் அனைத்து விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் எமோஜிகள் கிடைக்கின்றன. சிரிக்கும்போதும் கண் நீர் வரும் எமோஜி, பல்லைக் காட்டும் எமோஜி, வாயில்லா எமோஜி, ஒளிவட்ட எமோஜி, யோசிக்குற எமோஜி, திரு திருன்னு முழிக்குற எமோஜி, கன்னத்துல கை வைக்குற எமோஜி என கவலை, மகிழ்ச்சி, வியப்பு, கொண்டாட்டம் எல்லா ஃபீலிங்கும் எமோஜி வழி சாத்தியமே.

இப்படி இணையத்தில் எமோஜி என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகியிருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்த எமோஜிபீடியாவின் நிறுவனர் ஜெரிமி புர்ஜ் உலக எமோஜி தினம் கொண்டாடுவதென முடிவு செய்தார்.இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பதினேழாம் நாள் உலக எமோஜி தினம் கொண்டாடப் படுகிறது.

எமோஜியால் இப்போதுள்ள இளைய தலைமுறை எழுத்துக்களைப் பயன்படுத்துவது வெகுவாய்க் குறைந்திருக்கிறது. இப்படி எல்லாமே சித்திரம் பேசுதடின்னு எல்லாமும் எமோஜிமயம் ஆகிவிட்டால்? இதன் விளைவுகள் என்னவாகும் என ஒரு கற்பனை.

  1. குழந்தைகளுக்கு எமோஜி பற்றிய அறிவைப் புகட்ட எல்கேஜி, யூகேஜி படிக்கும்முன்னே ஜென் Z குழந்தைகளுக்கு எமோஜி என்றொரு வகுப்பு துவங்கப்படலாம்.
  2. பழமொழிகள் பரிணாம வளர்ச்சி அடைந்து, எமோஜியறிவித்தவன் இறைவனாவான், எண்ணும் எமோஜியும் கண்ணெனத் தகும்னு புதுமொழி உண்டாகலாம்.
  3. எழுத்து என்பதையே மறந்து மக்கள் எல்லாவற்றையும் எமோஜியாகவே அனுப்புவதால் ஒரு வார்த்தை கேட்க ஒரு வருடத்தைத் தாண்டியும் காக்க நேரலாம்.
  4. பெயர்ப்பலகைகள் யாவும் எமோஜியாய் மாறும். 1000 + விளக்கு, அடை+ ஆறு என பேருந்தின் பெயர்ப்பலகைகள் எமோஜிகளைத் தாங்கி நிற்கலாம்.
  5. ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்பவர்கள் எமோஜிகளை அனுப்பி நாதாரித்தனத்தை நாசூக்காய் செய்யலாம்.
  6. எம்ஜியாராக‌ ஆசைப்படும் அரசியல்வாதிகள் எக்கச்சக்கமாய் எமோஜியைப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் எமோஜியார் எனப் பெயரெடுக்கலாம்.
  7. சிறந்த எழுத்தாளருக்கு விருதுகள் வழங்கப்படுவதைப்போல சிறந்த எமோஜியாளருக்கும் விருதுகள் வழங்கப்படலாம்.
  8. ‘எமோஜி’ வடிவிலே நான் என்னை அனுப்பினேன்’ என்று காதல் கவிதைகள்?! வர ஆரம்பிக்கலாம்.
  9. உணவகங்களின் மெனுகார்டுகள் முழுவதும் எமோஜியால் நிரம்பியிருக்கும். உலகில் எந்த நாட்டுக்கு உணவகங்களுக்குச் சென்றாலும் மொழி தெரியாதது ஒரு பிரச்சினையாய் இருக்காது.
  10. சொல்ல வார்த்தை இல்லை என்றால் எமோஜியைப் போடும் கலாச்சாரம் பரவி இருக்கும். நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு என்றெல்லாம் பாடல் வராது.

Related Post

One thought on “உணர்ச்சிகளை வெளிப்படுத்த எளிய வழி | எமோஜி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version