கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முதல் பல்தோன்றி பேஸ்ட் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி. நாகரீக வளர்ச்சியடைந்து, அறிவியல் வளர்ச்சியடைந்து தரணியெல்லாம் புகழ்பரவி நிற்பது நம் தமிழ்க்குடி. அப்படிப்பட்டத் தமிழ்க்குடிகளின் குழந்தைகள் பெயரைக் கேட்டால் தமிழல்லாத பெயர்களைச் சொல்லுகிறார்கள். ஷ, ஸ,ஹ,ஜ என வாயில், காதில் நுழையாத பெயர்களை சின்னக்குழந்தைகளின் உதடுகள் சிரமப்பட்டு உச்சரிக்கின்றன.
வேற்றுமொழிப்பெயர்கள் வைப்பது ஏன்?
வடமொழியில் பெயர்வைக்க பல காரணங்கள் இருக்கின்றன, அவற்றுள் முக்கியமானது, பெயர் மாடர்னாக இருக்கவேண்டும் என்பது. ஷ, ஹ, ஜ, ஸ வரிசைகளில் பெயர் வைத்தால் அது மாடர்னாக இருப்பதாக நம் மக்கள் நம்புவது ஒரு முக்கிய காரணம். வைக்கப்படும் பெயரின் பொருளைப் புரிந்துகொண்டும் வைப்பதில்லை என்பதுதான் சோகம்.
சோதிடம், நியுமராரலஜி இவற்றில் நம்பிக்கை உடையவர்கள், இந்த எழுத்துக்களில் பெயர் வைக்கவேண்டும் என்று அவர்களால் குறித்து கொடுக்கப்பட்டு வைக்கிறார்கள். ர, ல,ட இந்த வரிசைகளில் தமிழ்ச் சொற்கள் துவங்காது. ஆனால் அவர்கள் குறித்துக்கொடுப்பது பெரும்பாலும் இந்த வரிசைகளில்தான். பெயர் டு வில் தொடங்க வேண்டுமென்றால் டுபாக்கூர் என்றுதான் வைக்கவேண்டும் என்று இதனால் புலம்ப நேர்வதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது.
கடவுளர் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டும் வழக்கம், முன்னோர்களின் பெயர்களைக் குழந்தைக்குச் சூட்டும் வழக்கம் போன்றவையும் தமிழ் அல்லாத பெயர்கள் வாரிசுகளுக்கு வாய்த்துவிடக் காரணமாய் அமைகின்றன.
தமிழில் ஏன் பெயர் சூட்ட வேண்டும்?
செல்லக்குழந்தைகளுக்கு ஏன் செந்தமிழில் பெயர் சூட்டவேண்டும் என்றால் உலகின் தொன்மையான உன்னத மொழிகளில் ஒன்றுதான் நம் தாய்மொழியாம் தமிழ் மொழி. அப்படிப்பட்ட சிறப்பான தமிழ்மொழியில் நாம் பெயர் வைக்கவில்லை என்றால் வேறுயார் வைப்பார்கள்?
வேற்றுமொழி பேசுகின்ற யாராவது தமிழில் பெயர் வைப்பார்களா? நாம் மட்டும் ஏன் அன்னைத் தமிழோடு அயலார் மொழியைக் கலக்கவேண்டும்? தமிழில் பெயர் வைத்தால் தலைமுறை தலைமுறையாய் தமிழும் நம் குழந்தைகளைப்போல தழைத்து வாழும்.
சாதிக்கும் குழந்தைகளின் பெயர்கள் உலக அரங்கில் ஒலிக்கும்போது அருமைக்குழந்தைகளின் பெயரோடு அன்னைத்தமிழும் அல்லவா ஓங்கி ஒலிக்கும்? இதற்கு அண்மையில் நடந்த ஓர் அழகு எடுத்துக்காட்டைப் பகிர்வது பொருத்தமாய் இருக்கும். 2019 ம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற உலக அளவினாலான துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. அதில் சிறப்பாக விளையாடி தங்கம் வென்ற தங்கத்தின் பெயர் இளவேனில். இளவேனில் வாலறிவன். இவர் வெற்றி பெறும்போது உலகத்தமிழர்கள் அனைவரும் தாங்களே வெற்றிபெற்றதுபோல் உவகை கொண்டார்கள்.
இளவேனில் என்று பெயர் வைத்ததற்கே இன்னுமொரு தங்கம் தரவேண்டும் என்று பெருமகிழ்ச்சி அடைந்தார்களே, அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏது? தமிழர்கள் வெற்றிவாகை சூடும்போது, நம் தமிழும் வெற்றிவாகை சூடும்.
தற்போது தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு வந்து, அழகுத் தமிழ்ப் பெயர்கள் சூட்டுவதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. தமிழில் பெயர் வைப்பது ஒரு பெருமை என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தமிழில் பெயர் கேட்க சமூக வலைத் தளங்களில் நண்பர்களிடையே ஆலோசனை கேட்பது பெருகிவிட்டது. இது ஒரு வியக்கத்தக்க, விரும்பத்தக்க மாற்றம் என்றால் அது மிகையாகாது.
அழகான பெயர்களும், நவீனமான பெயர்களும் தனித்துவம் பெற்ற பெயர்களும் அள்ள அள்ளக் குறையாமல் அன்னைத்தமிழில் கொட்டிக்கிடக்கின்றன. தயக்கமில்லாமல் தமிழில் பெயர் வைத்து, தனித்துவமாய் இருப்போம், தமிழைக் காப்போம்!