இயந்திர மயமான, பரபரப்பான நகர வாழ்க்கையில் இளைப்பாறுதல் என்பது ஓர் அவசியத் தேவை. கான்கிரீட் காடுகளாய் ஆகிவிட்ட நகரங்களில் வசிப்பவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் தங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்ள பூங்கா, கடற்கரை இதுபோன்ற ஓர் இடம் அவசியம். அப்படிப்பட்ட சூழலுக்கு சென்றால் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. குழந்தைகள் விளையாடி மகிழ, அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்க இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத்தான் பெற்றோரும் விரும்புகின்றனர். அப்படி ஒரு புதிய இடம்தான் சென்னையின் கிண்டி பகுதியில் அமைந்துள்ள கத்திப்பாரா சதுக்கம்.
சென்னையின் முக்கிய சாலைகள் பலவும் சந்திக்கும் இடம்தான் கத்திப்பாரா. சென்னையின் எந்தப்பகுதிக்குச் செல்லவேண்டும் என்றாலும் வாகனங்கள் இங்கு வந்து ‘U’ திருப்பம் செய்ய இயலும். கோயம்பேடு, வடபழனி, போரூர், அண்ணாசாலை, தாம்பரம் என எல்லாப்பகுதிக்கும் இங்கிருந்து செல்லலாம். அப்படி ஒரு சிறப்பான வண்ணத்துப்பூச்சி வடிவ மேம்பாலம் (ஃப்ளவர் பாலம், கிளாவர் பாலம்) இங்கு கட்டப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு வண்ணத்துப்பூச்சி, பூ, சீட்டுக்கட்டில் இருக்கும் கிளாவர் போன்றதொரு வடிவத்தை ஒத்து இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இங்கிருந்த பெரிய போக்குவரத்து நெரிசலைக் குறைத்தது இந்தப் பாலம்தான். இதற்கு அருகில்தான் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையமும் உள்ளது.
சென்னை பலதரப்பட்ட போக்குவரத்துகள் நிறைந்துள்ள பரபரப்பான ஓர் இடம். இந்தப் போக்குவரத்தையெல்லாம் ஒருங்கிணைத்து, ஒரு போக்குவரத்தில் இருந்து மற்றொரு போக்குவரத்திற்கு மாறிச் செல்லவும், பயணியர் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறிச் செல்லவும் வசதியாக, கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், 14.50 கோடி ரூபாய் செலவில், ‘கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்’ நிறுவப்பட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது சென்னை மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த சதுக்கத்தில் 128 சிறுபேருந்துகள், 340 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. எட்டு இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. விமான நிலையம் செல்லும் சாலையோர உட்பக்கம், நேரு சிலை அருகில், இருக்கையுடன் கூடிய உணவுக் கூடங்கள், சில்லரை அங்காடிகள், பேருந்து நிறுத்தம் போன்றவை அமைக்கப்பட்டு அழகாய்க் காட்சியளிக்கின்றன.
போரூர்,பூந்தமல்லி செல்லும் சாலை சந்திக்கும் பகுதியில், சிறார் விளையாடுமிடம், சில்லரை அங்காடிகள், பேருந்து நிறுத்தம், இரு சக்கர வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈக்காட்டுதாங்கல் அணுகு சாலையோரம் சில்லரை அங்காடிகள், வாகன நிறுத்தம், மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்தனியே நவீன கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவும் பொதுமக்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
இங்கு உணவகங்கள் வைப்பதற்கு, கைவினைப்பொருட்கள் அங்காடி வைப்பதற்கு என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சதுக்கம் முழுவதும், 27 வகையான, 7,069 செடிகள் நடப்பட்டு, பச்சைப்பசேல் புல்வெளிகளோடு வளாகம் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. அனைத்து பகுதிகளிலும், சூரிய சக்தி மின் விளக்குகள் மற்றும், பேரொளி தரும் மின் விளக்குகள் நிறுவப்பட்டு உள்ளன. முக்கியமான ஒன்றாக தமிழின் பெருமையை உலகுக்குக் கூறும் வகையில் தமிழ் உயிர் எழுத்துக்கள், ஆயுத எழுத்து இவற்றுடன் கூடிய அலங்கார விளக்குகளின் அணிவகுப்பு மனதைக் கவர்கிறது. மக்கள் குடும்பம் குடும்பமாய் இங்கு தாமி (செல்பி) எடுத்துக்கொள்வது மனதிற்கு நெகிழ்ச்சியை அளிக்கிறது.
சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்ற, பரபரப்பான தார்ச்சாலையில் பயணக்களைப்பு தீர, குழந்தைகள் குதூகலத்தோடு விளையாடி மகிழ சென்னை போன்ற பெரு நகரங்களில் இதுபோன்ற அமைப்புககள் அவசியமே!