மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் ஆபாசமா?- வதந்தியும் உண்மையும்

Untitled 1

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் ஆபாசமா என்ற செய்திக்குப் போவதற்கு முன் அது என்ன மார்கழியில் மக்களிசை என்பதைத் தெரிந்துகொள்வோம். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி போன்ற படங்களை இயக்கிய பா. ரஞ்சித், மக்களின் இசையையும், பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய கலைகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்க ஈடுபட்டுள்ளத் அனைவரும் அறிந்ததே. இந்த முயற்சியின் இனிய செயலாக்கம்தான் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.

பனி இல்லாத மார்கழியா என்பது ஒரு பழைய சொற்றொடர். அதைக் காலத்துக்கேற்ப புதிதாகச் சொல்லவேண்டும் என்றால் பறை இல்லாத மார்கழியா என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு சமீபகாலத்தில் புகழ்பெற்று இருக்கிறது இந்த நிகழ்ச்சி.

மார்கழி மாதம் என்றாலே சபாக்களில் கர்நாடக சங்கீதமும். வீதிகளில் திருப்பாவை பாடல்களாலும் நிறைந்திருக்கும். ஆனால் மார்கழி எனும் இசை மாதம் மக்கள் அனைவருக்கும் பொதுவானது அல்லவா? நம் வாழ்வியலுடன் தொடர்புடைய, கண்டுகொள்ளப்படாத இசை வடிவங்களை, புதுப்புது நாட்டார் கலைவடிவங்களை தனி இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற, மக்களிசைப்பாடகர்களை முன்னுக்குக் கொண்டுவரும் முயற்சிதான் இது. இதன் வாயிலாக கிராமிய இசைக் கலைஞர்கள், தாரை, தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியும் வருகின்றனர். மக்களிடம் உள்ள வரவேற்பு காரணமாக சென்னையில் மட்டும் நடந்த இந்த மார்கழியில் மக்களிசை, இந்தமுறை கூடுதலாக மதுரையிலும் கோவையிலும் கோலாகலமாக நடந்திருக்கிறது.

இந்தப் பாடலில் என்ன சர்ச்சை என்ற செய்திக்கு வருவோம். ” எட்டாவது பாசாயிட்டு எடுக்க வச்சேன் வாந்திய” எனும் சர்சையைக்குரிய பாடல் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. பிரச்சினை என்னவென்றால் இந்தப் பாடல் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்டது என பகிரப்படுவதுதான். இந்தக் காணொளியானது கடந்த 2020-ம் ஆண்டு டோனி ராக் எனும் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.

தமிழக பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி. சூர்யா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்தப் பாடல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் பாடப்பட்டதாகப் பதிவிட்டு பின்பு வழக்கம்போல நீக்கி இருக்கிறார். மேலும், இந்தப் பாடல் பழைய கணொளி என்றும் , மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியைச் சேர்ந்தது அல்ல. தவறை திருத்திக் கொள்வதாக ” பதிவிட்டு இருக்கிறார். ஆனால் பொய்யானது உண்மையைவிட வெகுவிரைவாகப் பயணிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே. பதிவை மறுக்கும் முன் அது பல்கிப் பெருகிவிட்டது.

பெண் குழந்தைகளை தவறாக சித்தரிப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அனைவரின் கண்டனத்தை பெற்ற அந்தப் பாடல் யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களது ஒதுக்கப்பட்ட கலையையும் மீண்டும் மக்களிடமே கொண்டு சேர்க்கும் முயற்சிக்கு எதிர்வினையாக இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

மார்கழி மாதத்தில் சபாக்களில் புரியாத மொழியில் பாடப்பட்ட பாடல்களைக் கேட்பதிலிருந்து, எளிய மக்களின் வாழ்வியலை இனிய தமிழில் கேட்கக் காரணமாய் இருந்த இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாமர மக்களின் மண்சார்ந்த வாழ்க்கைமுறை, பண்பாடு, போராட்டம், உணர்ச்சி வெளிப்பாடுகள் என பல சாராம்சங்கள் நிறைந்த பாடல்கள் மூலம் சாதியற்ற, சமத்துவ சமுதாயத்தை முன்னெடுக்கும் இந்த மார்கழியில் மக்களிசையின் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துவோம்!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version