கொரோனா பெருந்தொற்றால் பல தொழில்கள் நலிவடைந்தன. பலருக்கு வேலைகள் பறிபோயின. வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் அகத்தையே அலுவலகமாகக் கொண்டவர்கள் தப்பித்தார்கள். அத்தகைய வாய்ப்பு இல்லாதவர்கள் நிலைமை மோசமானது.
கொரோனாவால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் துவங்கின. அதற்கான செயலிகளும் பிரபலமாகத் தொடங்கின. மாணவ,மாணவியர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்குப் பழகினார்கள். பள்ளிக்கல்வி, பாட்டு, பரதம், இசை, சமையல், பிறமொழிகள் என கல்வி கற்கச் சென்றவர்கள் முதல் கராத்தே கற்கச் சென்றவர்கள் வரை அனைவரும் ஆன்லைனிலே ஐக்கியமாகத் தொடங்கினர்.
“கல்வி கரையில; கற்பவர் நாள்சில” என்பது நம் முன்னோர் வாக்கு. கற்றுக்கொள்ள வேண்டும் எனும் தாகத்தை அவ்வளவு எளிதில் அடக்கிவிட முடியாது. வெயில், மழை, வாகனம், வசதி என நேரடி வகுப்புகளுக்குச் செல்வதில் சிரமங்கள் உண்டு. ஆனால் நமக்கு பிடித்தமான நேரத்தில், நமக்கு உகந்த இடத்தில், காலநிலை பற்றிய கவலை இல்லாமல் பயில உதவும் இணைய வகுப்புகள், கற்கும் ஆர்வத்தை மாணவர்களிடம் மட்டுமல்ல பொதுமக்களிடமும் அதிகப்படுத்தி இருக்கின்றது. அந்த ஆர்வம், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கியுள்ளது.
இணையத்தில் எப்படிச் சம்பாதிப்பது?
நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அல்லது துறையில் அல்லது தொழிலில் சிறந்து விளங்குபவராக இருக்கும் பட்சம் அதை நீங்கள் இணையத்தில் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் சம்பாதிக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்ற முறையில் உங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம்.
இணையத்தில் யாரெல்லாம் சம்பாதிக்கலாம்?
ஆர்வம், பயிற்சி, முயற்சி இருக்கும் அனைவரும் இணையம் வழியே பணம் சம்பாதிக்கலாம். படிப்பு முடித்தவர்கள், படிக்காமல் இருந்தாலும் அனுபவத்தின் மூலம் தங்களுக்குத் தெரிந்த நிபுணத்துவத்தைப் பிறருக்குச் சொல்லித்தரத் தெரிந்தவர்கள் அனைவரும் ஆன்லைனில் வகுப்பெடுத்துச் சம்பாதிக்கலாம்.
மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டுமல்லாமல் சமையல், சங்கீதம், பாட்டு, நடனம், கலைகள், கராத்தே, தகவல் தொழிநுட்பத் துறைசார்ந்த வகுப்புக்கள், நிதி, நிர்வாகம், டிசைனிங், நெட்வொர்க்கிங் இப்படி வயர்கூடை பின்னுவதில் தொடங்கி வைபை தொழில் நுட்பப் பயிற்சி வரை ஆன்லைன் வகுப்புக்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். உங்களுக்குத் தெரிந்ததைப் பகிருங்கள், பணம் சம்பாதியுங்கள் என்கின்றன இணைய தளங்கள். ஆகவே உங்களுக்குப் பொருத்தமான ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து இருந்த இடத்தில் இருந்தே இணையம் வழியே சம்பாதிக்கத் துவங்குங்கள். உங்கள் வகுப்புக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியதும் உங்கள் வருமானமும் அதிகரிக்கத் தொடங்கும்.
இணையத்தில் எப்படிச் சம்பாதிப்பது?
உங்களுக்குச் கற்பிக்கத் தெரியும், கற்பதற்கு ஆர்வமாய் இருப்பவர் யார் என்று எப்படித் தெரியும்? சேவையை விற்பவரையும் வாங்குபவரையும் இணைப்பதற்கென்றே சில இணைய தளங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில
- Udemy: https://www.udemy.com
- Skillshare: https://www.skillshare.com
- Teachable : https://teachable.com
- Tutor me: https://tutorme.com
- Skooli: https://www.skooli.com
இது போன்ற தளங்களில் கற்பிப்பவராக இணையுங்கள். உங்கள் துறையைத் தேர்ந்தெடுங்கள். எதைக் கற்பிக்கப்போகிறீர்கள், எப்படிக் கற்பிக்கப் போகிறீர்கள் என்பதையெல்லாம் முடிவுசெய்யும் சுதந்திரம் உங்களிடம்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் அந்தந்தத் தளங்களே உங்களே உதவுகின்றன. ஒரு சிறந்த கேமரா, மைக் இவற்றைக் கொண்டு நீங்கள் கற்பிக்கப் போகும் காணொளி (வீடியோ)யைப் பதிவுசெய்து அதைப் பதிவேற்றுங்கள். உங்களுடைய வகுப்புக்கள் இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்டதாய் இருத்தல் நலம். இந்த வகுப்புகளில் ஒவ்வொருவராய்ச் சேரச்சேர உங்களுடைய கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும். உலகெங்கும் உங்களிடம் பயின்றவர்கள் இருப்பார்கள்!