மம்தா பானர்ஜியின் மஹாராஷ்டிரா பயணம் – புதிய கூட்டணிக்கான முன்னோட்டமா?

mamata maharashtra visit

மேற்கு வங்கத்தின் முதல்வரும் பாரதீய ஜனதா கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவரும் திரிணமுல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த வாரம் 3 நாட்கள் பயணமாக மகாராஷ்டிரா சென்றிருந்தார் அல்லவா? அவரது இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பல அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு புதிய அணி அமைப்பதற்கான முன்னோட்டமாகவே அனைவராலும் இது பார்க்கப்படுகிறது.

மஹாராஷ்டிரா சென்ற மம்தா பானர்ஜி அங்கு  சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத், என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்றுக் கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என்று மம்தா குற்றம் சாட்டினார்.

மம்தா பானர்ஜி, செய்தியாளர் சந்திப்பில் ஐக்கியமுற்போக்குக் கூட்டணி என்ற ஒன்றே இல்லை” என்று தெரிவித்ததும், ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதும்தான் இத்தகைய யூகங்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

சிவேசனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில்,அந்தக் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்  எழுதிய கட்டுரையில், மத்தியில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சி அல்லாத புதிய மாற்று அணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார் என்று கூறியிருக்கிறார்.இதை உறுதிப்படுத்தும் விதத்தில் மம்தா பானர்ஜியின் சமீபத்திய நடவடிக்கைகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடுதல், திரிபுரா, மேகாலயாவிலும் தன் கட்சியை விரிவுபடுத்தி அங்கே  தடம் பதி்க்க முயலுதல்.சரத் பவாருடனான சந்திப்பு, மே.வங்கத்தில் தொடங்க உள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்கு வருமாறு ஆதித்யா தாக்கரே அழைப்பு விடுத்துள்ளது போன்ற சமீபத்திய செயல்பாடுகளே அதற்குச் சாட்சி.

காங்கிரஸ் கட்சியை தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கிவைத்தல், ஐக்கியமுற்போக்குக் கூட்டணிக்கு இணையாக புதிய அணியை உருவாக்குதல். பாஜகவையும், பாசிஸ சக்திகளையும் எதிர்த்தல் என்பதுதான் மம்தாவின் தற்போதைய நிலைப்பாடு என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ரும்பாதவர்கள், அல்லது அதிருப்தியில் உள்ளவர்கள் அல்லது மாற்றத்தை விரும்புவர்களின் நிலைப்பாடு மம்தா பானர்ஜியோடு ஒத்துப்போகுமா என்பதை என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்தியாவின் பெரிய, பழமையான கட்சி என்பதை மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் கட்சி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ள மாபெரும் தேசிய இயக்கம்.சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952 முதல் 1977 வரை தொடர்ந்து கால் நூற்றாண்டாக இந்தியாவை காங்கிரஸ்தான் ஆண்டிருக்கிறது.

பாரதீய ஜனதா கட்சி இந்தியாவின் வட மாநிலங்களில் வலுவாக இருக்கும் பெரிய கட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு வடகிழக்கு மாநிலங்களிலும் தன் கணக்கைத் துவங்கி தனது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கிறது.இந்த தேசிய கட்சிகள் இரண்டும் இல்லாத ஒரு கூட்டணி உருவாக சாத்தியக்கூறுகள் இருந்தாலும் எந்த அளவுக்கு வெற்றிகரமான கூட்டணியாக அமையும் என்பது கேள்விக்குறியே. தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க, ஆந்திராவில் தெலுங்கு தேசம், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாளம், பஞ்சாபில் அகாலிதளம் என்று நாடு முழுவதும் சக்திவாய்ந்த பிராந்தியக் கட்சிகள் இருக்கின்றன.ஆனால் இவையெல்லாம் ஓரணியில் திரள்வது என்பது சாத்தியம் என்றாலும் ஒருமித்த கருத்தோடு இருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார், தொகுதிப் பங்கீடுகள், பிரதமர் வேட்பாளர் யார் என குழப்பங்கள் ஏற்படத்தான் வாய்ப்புகள் அதிகம். காங்கிரஸ் அல்லாத இத்தகைய கூட்டணியின் நிலைப்பாடுகள் யாவும் பாரதீய ஜனதாவுக்குத்தான் சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை. பாரதீய ஜனதா கட்சியை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்பதுதான் மம்தாவின் ஒற்றைக்குறிக்கோள் எனில் எண்ணற்ற சமரசங்களோடுதான் வலுவான கூட்டணியை அமைக்கவேண்டும்.

பாஜக வின் எதிர்ப்பையும்மீறி மேற்கு வங்கத்தில் வெற்றிவாகை சூடியது, காங்கிரசிலிருந்து விலகி திரிணமுல் காங்கிரசுக்கு வருபவர்கள் என்பதெல்லாம்தான் தீதிக்கு (வங்காளத்தில் அக்கா) அதிக தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

நாம் போடும் கணக்குகள் நமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும். அப்படி இல்லை என்றாலும் எதிராளிக்குச் சாதகமாய் போய்விடாமல் இருக்கவேண்டும். எதிரியின் வேலையை நாம் எளிதாக்கிவிடக் கூடாது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து.

யார் என்ன கணக்கு போட்டாலும், வெற்றி என்பது வாக்காளர்கள் போடும் வாக்குக் கணக்கில்தானே இருக்கிறது!!!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version