தக்காளி விலை தாறுமாறாய் ஏறி பெட்ரோல் விலையை சமீபத்தில் முந்தியது அனைவருக்கும் நினைவிருக்கும். அன்றாட சமையலில் தக்காளி தவிர்க்க முடியாததே.தக்காளிக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அதைக்காட்டிலும் விலை குறைவான, சத்துமிகுந்த, மருத்துவகுணம் கொண்ட மகத்தான மணித்தக்காளிக்குக் கிடைப்பதில்லை அப்படிப்பட்ட மணித்தக்காளியின் மகத்துவத்தை இங்கு காண்போம்.
மணித்தக்காளியின் தோற்றம்
இது இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும் ஒரு கீரையாகும். சமவெளிகளிலும் வரப்புகளிலும் ஏரி, ஆறு மற்றும் குளங்களின் கரைகளிலும் தானாக வளரக்கூடிய ஒருவகை செடி. இதன் இலைகள் பழங்களின் முக்கியத்துவம் கருதி வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இது நீள்வட்ட இலைகளைக்கொண்ட கிளைத்து வளரும் தன்மை கொண்ட ஒரு சிறு செடியாகும். வெள்ளை நிற மலர்கள், பச்சை நிற காய்கள், கருமை நிறக் கனிகள் இவற்றைக் கொண்டது மணித்தக்காளி. ‘சொலானம் நிக்ரம்’ (Solanum Nigrum) என்பது மணித்தக்காளியின் அறிவியல் பெயராகும். இது ‘சொலனாசியே’ (Solanaceae) எனும் குடும்பத்தைச் சார்ந்தது.
மணித்தக்காளி கீரையின் வேறுபெயர்கள்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பெயர்கள் இந்தக்கீரைக்கு வழங்கப்படுகின்றன. இந்தக்கீரையின் பழங்கள் மணிமணியான தோற்றத்தைக் கொண்டதால் மணித்தக்காளி என்றும், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இதை மிளகுதக்காளி என்று அழைக்கிறார்கள். காய வைத்ததும் (வற்றல்) இந்தக்கீரையின் காய்கள் மிளகு போன்ற தோற்றத்தில் இருப்பதால் இந்தப்பெயர் பெற்றிருக்கிறது. மணத்தக்காளி என்றும் இதற்குப் பெயர் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் இந்தப்பெயரில்தான் அழைக்கிறார்கள். வாசனை நிறைந்த பழங்களைக் கொண்டிருப்பதால், ‘மணத்தக்காளி’ என்ற பெயர் உருவானது. மணம் என்றால் மதிப்பு என்றொரு பொருள் உண்டு. மதிப்பு மிக்க கீரை என்பதாலும் இப்பெயர் வந்திருக்கக்கூடும். கோயமுத்தூரில் இதற்கு சுக்குட்டி கீரை என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கூறிய பெயர்கள் இல்லாமல் கறுப்பு மணித்தக்காளி, உலகமாதா, விடைக்கந்தம், வாயசம், காகமாசீ போன்ற பெயர்களும் உண்டு.
மணித்தக்காளியில் அடங்கியுள்ள சத்துக்கள்
இது நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு தன்னிகரில்லாக் கீரை. அதாவது 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரதச்சத்து 5.9%, கொழுப்பு 1%. தாது உப்புக்கள் 2.1% அடங்கியுள்ளன எளிதில் கிடைப்பதாலும் குறைந்த விலையில் கிடைப்பதாலும் இதன் அருமை பலருக்கும் தெரிவதில்லை. இதில் வைட்டமின் இ, டி போன்றவையும் அதிக அளவில் உள்ளன.
மருத்துவ பயன்கள்
சாதாரணமாக வீட்டில் உள்ளவர்களுக்கு வாய்ப்புண், வயிற்றுப்புண் வந்தால் மணித்தக்காளிக் கீரையைச் சமைக்கச் சொல்லி வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி ஓர் அருமருந்து இந்தக்கீரை. இக்கீரையுடன் பாசிப்பருப்பு, மஞ்சள் சேர்த்துச் சமைத்து உண்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை விரைவில் குணமாகும்.
மணித்தக்காளிக்கீரையைத் தேங்காய்ப்பால் சேர்த்து சூப் வைத்த் சாப்பிடுவதும் சிறந்த பலனை அளிக்கும். இதன் பழங்களை உண்டுவந்தாலும் வாய்ப்புண் குறையும்.
மணித்தக்காளியின் இலைகளை தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலமும் வாய்ப்புண்ணைக் குணப்படுத்தலாம்.
மணத்தக்காளியைக் கீரையைப் பயன்படுத்தினால் சளி, இருமல், இளைப்பு போன்ற கப நோய்கள் குணமாகும்.
மார்புச்சளி இளகி வெளியேறவும், மலச்சிக்கல் குறையவும் மணித்தக்காளி வற்றலை உபயோகிக்கலாம்.
வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தவல்லது இந்தக் கீரை. சிறுநீர் மற்றும் வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
மணத்தக்காளியின் கீரையைச் சாறுபிழிந்து 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், உடலில் நீர் கோர்ப்பதால் ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவை குணமாகும்.
வயதானவர்கள் மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுவார்கள், அத்தகையவர்வளுக்கு மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மணித்தக்காளி இலைச் சாறு 5 தேக்கரண்டி அளவு தினமும் மூன்று வேளைகள் குடித்து வர உடல் சூடு குணமாகும்.
இக்கீரை மாதவிடாயின் போது ஏற்படும் வலி, சோர்வை அகற்றி, கருவுறுதலின் சாத்தியக்கூறுகளைக் கூட்டி, பிரசவத்தை எளிதாக்க உதவுகின்றது.
நாவின் சுவையின்மையை நீக்கும் தன்மையும் வாந்தி உணர்வைக் கட்டுப் படுத்தும் தன்மையும் மணித்தக்காளி வற்றலுக்கு உண்டு. ஆதலால் கர்ப்பிணிப் பெண்கள் குறைந்த அளவில் தினமும் வற்றலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இப்படி எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கையின் கொடையாகிய மணித்தக்காளி கீரை எளிதில் கிடைக்கக் கூடியது. ஏழைகளுக்கும் எட்டக்கூடியது அன்றாட சமையலில் மணித்தக்காளியைச் சேர்ப்போம், உடல் ஆரோக்கியம் காப்போம்!