வேர்களை மறக்காத விழுதுகள் வீழ்வதில்லை என்பதற்கிணங்க பிழைப்பு தேடி நகரத்தை, நாட்டைத் தாண்டியபோதும் நம் தமிழர்கள் தமிழை, நம் கலாச்சாரத்தை மறப்பதில்லை,அதனாலே தமிழர்களும் வீழ்ந்துவிடாமல் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள்.
தரணி எங்கும் சுற்றினாலும் தமிழ்தான் நம் அடையாளம்.அந்த வகையில் மும்பையின் புற நகர்ப்பகுதியான கோரேகான் கிழக்கு பகுதியில் உள்ளதுதான் ஆரே காலணி இங்கு இருக்கும் ஒரு தமிழ்ப்பள்ளியில் படிக்கும் பழங்குடியினச் சிறுவர்கள் இருவர் மரத்தடியில் உட்கார்ந்து பாடிய ஹிப் ஹாப் பாடல் ஒன்று யூட்யூப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்ட இந்த ஐம்பது நொடிகள் மட்டுமே கொண்ட பாடலைப் பார்த்தவுடன் மனதிற்குப் பிடித்துவிடுகிறது.. ட்விட்டர் இணையதளத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டு நடிகர் சூர்யாவுக்கும் மென்ஷன் செய்திருந்தனர், அவரும் இந்த வீடியோவை லைக் செய்திருக்கிறார். அதனால் இந்த வீடியோ இன்னும் பிரபலமானது.
”உலகத்துல எல்லாம் மாறிப்போச்சி… ஆனாலும் குப்பக்காடா ஏன் எங்க ஏரியா வச்சிருக்க… சின்ன பையன் சொல்றான்னு நினைக்காத… நீ பெரிய மனுசனா நடக்கவில்லை” என சமூகப் பொறுப்புணர்வும்,சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் மிக்க இந்தப் பாடல்வரிகளை மழலைக் குரலில் கேட்கும்போது மிகவும் இனிமையாக இருக்கின்றது.இந்தப்பாடலின் இசையமைப்பும் சிறப்பு வாய்ந்தது.மவுத் ஆர்கனில் இசையைக் கேட்டிருக்கிறோம், மவுத்தையே இசைக்கருவியாக வைத்து சிறுவன் அசத்தி இருக்கிறான்.ஆங்கிலத்தில் இதை பீட் பாக்சிங் என்பார்கள். வாயாலேயே வடை சுடுறான்டா எனக் கிண்டல் பேச்சுக்களைக் கேட்டிருப்போம்,இந்தச் சிறுவனின் இந்த முயற்சி வாயார வாழ்த்தவல்லது.தாய்மொழியும்,அதற்கு இசையாக இந்த வாய்மொழியும் சிறப்பாக அமைந்ததுதான் இப்பாடலைப் பிரபலமாக்கி இருக்கிறது.கிரிக்கெட்டில் ஃப்ரீஹிட் எப்படியோ அதுபோல மரத்தடியில் பாடிய ட்ரீஹிட்டும் அனைவரின் விருப்பமாக ஆகியிருக்கிறது.
இன்றைக்கு சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, எஞ்ஜாயி பாடல் மூலமாகப் பிரபலமான தெருக்குரல் அறிவு போன்றோர் இதுபோன்றுதான் தங்கள் இசைப்பயணத்தைக் கல்லூரி படிக்கும் காலத்தில் மரத்தடியில்,பூங்காவில் உட்கார்ந்து பாட்டு பாடியவர்கள்தான்.
சமூக அக்கறையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் உடைய இந்த இசைப்பிஞ்சுகள் காயாகி,கனியாகி அனைவருக்கும் பயன் தர மனதார வாழ்த்துவோம்!