தியேட்டருக்குச் செல்வது என்பது ஒரு பெரிய திட்டமிடல் சார்ந்த ஒன்று. எந்த தியேட்டரில் நாம் விரும்பும் படம் திரையிடப்படுகிறது? எந்த நேரத்தில் திரையிடப்படுகிறது? திரையரங்கிற்கு எப்படிச் செல்வது? கூட்டமாய் இருக்குமா? டிக்கெட் கிடைக்குமா? போக்குவரத்து நெரிசலில் போய்ச் சேருவது சாத்தியமா? இதையெல்லாம் கவனத்தில்கொண்டுதான் ஒரு திரைப்படத்தைப் பார்க்க இயலும். ஒரு வழியாக திரையரங்கிற்குச் சென்றுவிட்டால், பார்க்கிங்க, இடைவேளையின்போது நம் பர்ஸைப் பதம்பார்க்கப் பாப்கார்ன் என செலவுகள் அணிவகுத்து நிற்கும். இதையெல்லாம் தாண்டி நாம் பார்க்கவந்தத் திரைப்படம் கொடூர மொக்கையாய் அமைந்துவிட்டால் என்ன செய்வது? சுகமான அனுபவம்தான் எல்லோருடைய எதிர்பார்ப்பும், ஆனால் பெரும்பாலும் வாய்ப்பது என்னவோ சோகமான அனுபவம்தானே?
ஒரு புதுப் படத்தைப் நாம் விரும்பும் நேரத்தில், நம் வீட்டிலேயே அல்லது நாம் செல்லுமிடமெல்லாம், அதுவும் நம்முடைய கையிலேயே குடிகொண்டிருக்கும் திறன்பேசியிலே பார்க்கும் வசதியிருந்தால் அதைவிட பெரும் மகிழ்ச்சி ஒன்று இருக்க முடியுமா? அப்படி ஒரு வசதிதான் ஓ டி டி என்பது!
ஓ.டி.டி (OTT) என்றால் என்ன?
Over The Top என்பதன் சுருக்கமே ஓ. டி. டி (OTT) எனப்படுகிறது.
இதுவரையில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் பயன்பட்ட கேபிள் டிவி அல்லது செட்டப் பாக்ஸ் அல்லது திரையரங்கம் என இந்த முறைகள் எல்லாவற்றிற்கும் மேலாக (Over the top ) உங்களுக்கு நேரடியாக இணைய தொடர்பு மூலம் திரைப்படத் தைக் கொண்டுவரும் முறை தான் ஓடிடி.
ஓ.டி. டி யில் எப்படிப் படம் பார்ப்பது?
ஓ.டி. டி சேவையைப் பயன்படுத்த நல்லதோர் இணைய இணைப்பு அவசியம். முதலில் ஓ.டி.டி சேவையை வழங்கும் நிறுவனத்தைத் (நெட்பிளிக்சு, சன் நெக்ஸ்ட், எம்எக்ஸ் பிளேயர், டிஸ்னி+, ஜீ5, ஹாட் ஸ்டார் ) தேர்வு செய்து அதில் கணக்கைத் துவங்க வேண்டும். பின்னர் அதில் மாதாந்திர அல்லது வருடாந்திர முறையைத் தேர்வுசெய்து கட்டணம் செலுத்த வேண்டும். பிறகு, உங்கள் மொபைல், டேப்ளட், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் டிவி என உங்களுக்குப் பிடித்த கருவிகளில் திரைப்படங்களைக் கண்டுமகிழவேண்டியதுதான்.
ஓ.டி. டி யின் நன்மைகள்
- விருப்பமான நேரத்தில், விருப்பமான கருவிகளில் (மொபைல், டேப்லட், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் டிவி) படம் பார்க்கும் வசதி.
- தெள்ளத்தெளிவான, துல்லியமான படம் பார்க்கும் வசதி. (படம் தரமாக இருக்கும், ஆனால் அது தரமான படமாக இருக்குமா என்பதற்கு ஓடிடி பொறுப்பாகாது)
- பிடித்த காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் வசதி, பிடிக்காதவற்றை ஓட்டிப்பார்க்கும் வசதி.
- திரையரங்கு செலவுகளான வாகன நிறுத்தம், டிக்கெட், சோதிக்கும் சோளப்பொறிச் செலவுகள் போன்றவை கணிசமாய்க் குறைதல்.
- தூக்கம் வரும்போது படத்தை நிறுத்தி விட்டு மறுநாள் விட்ட இடத்தில் இருந்து பார்க்கும் வசதி. அதாவது ஒரு படத்தைச் சீரியல்போல கொஞ்சம் கொஞ்சமாய்ப் பார்க்கும் வசதி.
- படத்தை எதிர்க்கின்ற அரசியல்வாதிகள் பெட்டியைத் தூக்கிச் செல்லுதல் போன்ற அச்சுறுத்தல் தயாரிப்பாளர்களுக்கு இல்லாமை.
ஓ.டி. டி யின் குறைபாடுகள்
- திரையரங்கின் தரமான ஒளி,ஒலி மற்றும் தொந்தரவு இல்லாமல் முழு படத்தையும் பார்க்கும் அனுபவம் வீட்டில் நமக்குக் கிடைக்காது.
- நாம் சந்தாதாரர் ஆகியிருக்கும் ஓடிடி தளத்தில் நமக்குப் பிடித்த படம் வெளிவராதது. சந்தாதாரர் ஆகிவிட்டதாலே மொக்கை பாடங்களையும் பார்த்தாக வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாதல்.
- வேற்றுமொழிப்படங்கள் சிலவற்றிற்கு தமிழில் சப் டைட்டில் இல்லாமல் தடுமாறும் நிலை.
- ஓசியில் படம் பார்க்க, ஓ.டி.டி பாஸ்வேர்ட் கேட்கும் உறவினர்கள், நண்பர்களைச் சமாளிப்பது.
- விறுவிறுப்பான காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென இணையம் ஆமைவேகத்தில் செயல்படுவது.
- குடும்பத்தோடு, குழந்தைகளோடு உட்கார்ந்து படம் பார்க்கும்போது ஆபாச வார்த்தைகளுக்கு ‘பீப்’ போடாமல் அப்படியே ஒளிபரப்பாவது.