பாட்காஸ்ட் – வானொலியின் ஒரு பரிணாம வளர்ச்சி!

What is podcasting

முன்னொரு காலத்தில் வானொலிதான் நமக்கிருந்த ஒரே பொழுதுபோக்குச் சாதனம். செய்திகள், பாடல்கள், நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்வது என முக்கியத் தகவல் தொடர்பு சாதனமே அதுதான். பரிணாம வளர்ச்சியில் அது இப்போது பலரும் விரும்பும் பாட்காஸ்ட்டாய் வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட பாட்காஸ்ட் என்பது பற்றி ஒரு சிறு அறிமுகம்.

பாட்காஸ்ட்’ (podcast)என்றால் என்ன?

‘ப்ராட்காஸ்ட்’ என்பது அனைத்து வகை ஒலி/ஒளிபரப்புகளையும் குறிக்கும் ஒரு சொல். ஆப்பிள் நிறுவனம் ‘ஐபாட்’டை அறிமுகப்படுத்திய பிறகுதான் இதற்கு ‘பாட்காஸ்ட்’ என்ற பெயர் வந்தது. அதாகப்பட்டது ipod broadcast என்பதன் சுருக்கமே பாட்காஸ்ட் (podcast). பாட்காஸ்ட் என்பது அடிப்படையில் ஆன்லைனில் ஒலிபரப்பப்படும் ஒரு வானொலி. ஆடியோ மற்றும் வீடியோ இரண்டு வடிவிலும் பாட்காஸ்ட் இருந்தாலும் ஆடியோ பாட்காஸ்ட்டே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பாட்காஸ்ட்டின் சிறப்புக்கள்

வழக்கமான வானொலிக்கும் பாட்காஸ்ட்டுக்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தோமானால், நமக்கு விருப்பமான நேரத்தில் தேவையான நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும் என்பதுதான். வானொலி நிகழ்ச்சிகளை, ஒலிபரப்பப்படும் அந்த நேரத்தில் மட்டுமே கேட்க முடியும். அந்த நேரத்தில் கேட்கமுடியாமல் போய்விட்டால் பிறகு கேட்பதற்கு வாய்ப்பே இல்லை. ‘பாட்காஸ்ட்டில்’ உங்களுக்குப் பிடித்த வானொலியைப் பின்தொடர்ந்தால், உங்கள் திறன்பேசிக்கே (smartphone) அந்த ஒலிபரப்பு பற்றிய தகவல்கள் வந்துவிடும். விருப்பமான நேரத்தில் அந்த ஒலிபரப்பைக் கேட்டு மகிழலாம். அதாவது, தீபாவளி அன்றைய நிகழ்ச்சியைக் கேட்கத் தவறியவர்கள் பொங்கலன்றுகூட கேட்டுக்கொள்ளலாம். திரையிசைப்பாடல்கள் உள்ளிட்ட அனைத்துவகையான பாடல்கள், கதைகள், புத்தகங்கள், செய்திகள், மற்றும் பல்வேறு தகவல்களை ஒலி வடிவில் கேட்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த வழி. 

பாட்காஸ்ட்களின் வகைகள்

ஒரு பல்பொருள் அங்காடியில் தேடுவது போல நமக்கு எது தேவையோ அதைப் பாட்காஸ்ட்டில் தேடிப் பெற்றுக்கொள்ளலாம். இசை, தமிழ், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், தன்னம்பிகைச் சிந்தனைகள், நகைச்சுவை உரையாடல்கள் என பல துறைகளிலும் உங்களுக்குத் தேவையான வகைகளில் பாட்காஸ்ட்டைக் கேட்கலாம் அவற்றின் வகைகளுள் சில.

பாட்காஸ்டின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு விருந்தினரை நேர்காணல் பாட்காஸ்ட், ஒரு துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் தங்கள் திறமையை அல்லது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சோலோ பாட்காஸ்ட், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு தலைப்பில் பேசும் உரையாடல் பாட்காஸ்ட், தொலைக்காட்சிகளில் வரும் விவாதங்களைப் போன்று ஒன்றுக்கு மேற்பட்ட விருந்தினர்களை உள்ளடக்கிய பேனல் பாட்காஸ்ட், நிஜ வாழ்க்கை நிகழ்வைப் பற்றி பேசும் கற்பனையற்ற கதை சொல்லும் பாட்காஸ்ட்.

பாட்காஸ்ட்டை எப்படி பயன்படுத்துவது?

கணினியில் இதைக்கேட்க விரும்புவர்கள் இணையத்தில் Google Podcasts, Spotify, SoundCloud, Pocket Casts and Stitcher எனும் தளங்களில் கேட்டு மகிழலாம். ஆனால் மொபைல் செயலி(ஆப்) களில் கேட்பதுதான் பெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது. பயணத்தின்போது கேட்கலாம், உங்கள் மொபைலில் நேரடியாக அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது ஸ்ட்ரீம் செய்யலாம், அவற்றைக் கேட்டு முடித்தவுடன் அத்தியாயங்கள் உடனடியாக அகற்றலாம், புதிய எபிசோட் வரும்போது பயன்பாடு உங்களுக்குத் தெரிவிப்பது என நிறைய வசதிகள் மொபைல் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கின்றன. இவற்று இலவச சேவைகளும், கட்டணச் சேவைகளும் இருக்கின்றன உங்களுக்குத் தேவையானவற்றைக் கவனமாகத்  தேர்வு செய்துகொள்ளலாம்.

தமிழில் சில பாட்காஸ்ட்கள்

கதை கேட்கும் நேரம், மரண விலாஸ், கதை பாட்காஸ்ட், திஸ் லைப் டிக்கெட் தமிழ் பாட்காஸ்ட், மிஸ்டர் ஜிகே பாட்காஸ்ட், ஆர்ஜே ஆனந்தி ரப் நோட் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோக இசையமைப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், படம் சார்ந்த பாடல்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. உங்களுக்கான பாட்காஸ்ட்டைத் தேடுவதற்கான வசதியும் செயலியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

நாமே ‘பாட்காஸ்ட்’ தொடங்கலாம்?

நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஒரு கட்டத்தில் சொந்தத் தொழில் தொடங்க முற்படுவதைப்போல, அதே போன்று பாட்காஸ்ட்டையும் சொந்தமாக அதுவும் இலவசமாகவே தொடங்க முடியும். அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.

இணைய வசதி கொண்ட, ஸ்மார்ட்போன் மற்றும் மைக்ரோபோன் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் பாட்காஸ்ட்டைத் தொடங்கலாம். இதற்கென anchor.fmopen.spotify.comgoogle.com/podcastspodcast.apple.com, போன்ற இணையதளங்கள் இலவசமாகவே இடம் தருகின்றன. திரைப்படப் பாடல்களை ஒலிபரப்ப, ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் (mib.gov.in/broadcasting/air-broadcast-code) விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பேசுதலைவிட கேட்டல் என்பது ஒரு சுகமான அனுபவம் அதற்காகத்தான் ஒரு வாய், இரு காதுகள் எனும் அமைப்பை நமக்கு இயற்கை வழங்கியுள்ளது. நம் வேலையை நிறுத்தாமல் அதாவது நடைப்பயிற்சி செய்யும்போது, தோட்டத்தில் தண்ணீர் ஊற்றும்போது, சமையல் செய்யும்போது, ஜிம்மில், கடற்கரையில், பயணத்தில் என எந்த வேலையும் தடைபடாமல் பயனுள்ள முறையில் பொழுதுபோக்க பாட்காஸ்ட் உதவுகிறது. மறந்துபோன இலக்கியங்கள், கேட்க மறந்த கதைகள், அறியாத அறிவியல் செய்திகள். மனதை லேசாக்கும் இசை என கொட்டிக்கிடக்கிறது பாட்காஸ்ட்டில், தேவையானவற்றை அள்ளுங்கள்!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version