பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் வாங்கும்போது அவற்றில் கருப்பு வெள்ளை நிறங்களில், சிறுசிறு கட்டங்கள் போன்ற குறியீடு இருப்பதைக் கண்டிருக்கலாம். சாதாரணமாக அந்தக் குறியீட்டு விவரங்களை நம்மால் அறிய முடியாது. வருடிகள் (ஸ்கேனர்ஸ்) மூலமாகத்தான் அறிய இயலும். இதற்கு QR குறி (Quick Response Code) என்றுபெயர். இணையம் வழியாக பல தகவல்களைப் பெற்றுக்கொள்ள இந்தக் குறியீடுகள் உதவுகின்றன. மரங்களுக்கும் இதற்கும் மும்பைக்கும் என்ன தொடர்பு என்பதைப் பார்ப்போம்.
இந்தியாவின் முதல் மாநில பல்கலைக்கழகம், உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று எனும் பெருமைகளைக் கொண்டதுதான் மும்பை பல்கலைக்கழகம் (MU). கலினா வளாகம், தானே துணை வளாகம் மற்றும் கோட்டை வளாகம் என மூன்று பெரும் வளாகங்களைத் தன்னகத்தே கொண்டது இப்பல்கலைக் கழகம்.
இங்குள்ள கலினா வளாகத்திற்குச் செல்லும்போது, அங்குள்ள குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் தாய்நிலம் தந்த வரமான தாவரங்களைப் பற்றிய தகவல்களைப் படிக்கலாம். இவ்வளாகத்தில் உள்ள சுமார் 5,500 மரங்கள் அடையாளம் காணப்பட்டு, அதன் புவியியல் அமைவிடம் பதிவேற்றப்பட்டு, QR குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாவரங்களைப் பற்றி, அதன் பெயர், அறிவியல் பெயர், எந்த குடும்பத்தைச் சார்ந்தது உள்ளிட்ட எல்லாவற்றையும் அறிந்துகொள்ளலாம்.
கான்கிரீட் கட்டடங்களும் அதிக மாசுபாடுகளும் கொண்ட பாந்த்ரா-குர்லா வளாகத்தின் நடுவில் இப்படி ஒரு இடமா என்று வியக்கும் வகையில் 64 வகையான பறவைகள் மற்றும் 137 வகையான மரங்கள், 10 வகையான ஊர்வன, தவளைகள், எறும்புகள் மற்றும் சிலந்திகளும் இங்கு உள்ளன என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வாய்ந்த வல்லுநர்களின் வழிகாட்டுதல்படி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதன் அடிப்படையில், 0.15 சதுர கி.மீ அளவுள்ள வளாகத்தில் உள்ள ஈரநிலத்தைப் பாதுகாக்க குழு பரிந்துரைத்துள்ளது, இது உள்நாட்டு மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விடம் என்றும் அறியப்பட்டுள்ளது.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் பல்லுயிர் பட்டியலைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கோகம், சந்தன், சீதா அசோகா போன்ற சில மரங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகவும், பில்வா, மயூர்பங்கி மற்றும் பெல் மரங்கள் அழியும் நிலையில் இருப்பதாகவும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க, நீண்ட காலத்திற்கு பூர்வீக மரங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் கருதி காடு வளர்ப்பு, வண்ணத்துப்பூச்சி தோட்டத்தை உருவாக்குதல் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பல்லுயிர் ஆய்வு நடத்துதல் ஆகியவற்றை இந்தக் குழு பரிந்துரை செய்தது. மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் மலர்களின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளும் வகையில் லைவ் கிரீன் என்ற மொபைல் செயலியையும் இந்தக் குழு உருவாக்கியுள்ளது.
புவியியல் துறையைச் சேர்ந்த பிஎச்டி அறிஞர் நிகில் கவாய் கூறுகையில், கான்கிரீட் மற்றும் மாசுபட்ட பிராந்தியத்தில் பல்கலைக்கழக வளாகம் மட்டுமே சுற்றுச்சூழல் காக்கும் பசுமையான நுரையீரல் ஆகும், எனவே அதைப் பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவை என்றும். தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் விவரங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குவது அதன் ஒரு படியாகும் என்று அவர் கூறினார்.
மரம்தான் மரம்தான்
எல்லாம் மரம்தான்.
மறந்தான் மறந்தான்
மனிதன் மறந்தான்…….
என்பது வைரமுத்துவின் வைரவரி. அத்தகைய மரங்களை மனிதர்கள் மறந்துவிடாமல் இருக்க இந்த மரங்களுக்கும் QR குறி செயல்பாடுகள் உதவும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது!!!