கூகுள் பே வழியாகக் கொள்ளை – களவானித்தனத்தின் புது வடிவம்

Robbery Via Google Pay

முன்பெல்லாம் வீடு வாடகைக்கு விடுவோர் ஓர் அட்டையில் வீடு வாடகைக்கு விடப்படும் என்று, தொலைபேசி எண்ணோடு எழுதி தொங்கவிடுவர். அதைப் பார்த்து வருபவர்கள் வீட்டை வந்து பார்த்து,பிடித்திருந்தால் முன்பணம் கொடுத்து வாடகைக்கு வருவார்கள். இப்போது எல்லாம் இணையமயமாகி விட்டது. அட்டையில் எழுதித் தொங்கவிடும் காலம் மலையேறிவிட்டது. வீட்டை விதம் விதமாய்ப் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டால் அது நிறையபேரைச் சென்றடைகிறது. வாடகைக்கு வீடு தேடுவோர், விடுவோர் இருவரும் பதிவு செய்து பயன்பெறும் வகையில் பல இணையதளங்கள் இருக்கின்றன. 99acres, nobroker, magicbricks போன்றவை அவற்றுள் அடங்கும். இத்தளங்கள் எல்லோருடைய பணியையும் எளிதாக்கி விடுகின்றன. அது இணையதளங்களின் வழியாக திரும் “கார்ட் மேல 16 நம்பர் சொல்லு சார்” கும்பலுக்கும் வேலையை எளிதாக்கிவிடுகின்றது.

99acres, nobroker, magicbricks போன்ற தளங்களின்  house rental portal களில்  போடப்படும் விளம்பரங்களைக் கண்கொத்திப்பாம்பாய் கவனிக்கும் ஹிந்திக்காரக் கள்வர் கூட்டம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணுக்கு  அழைத்து தங்களின் திருவிளையாடல்களைத் துவங்குகின்றன. தான் ஒரு ரானுவ அதிகாரி என்றும், தன்னை இந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்திருப்பதாகவும் உடனே வீடு வாடகைக்கு வேண்டும் என்று மெதுவாக ஆரம்பிப்பார்.

வீட்டின் புகைப்படங்களைப் பார்த்ததாகவும் , நேரில் பார்க்கக் கூட தேவையில்லை என்று சொல்லும் அவர், அடுத்த வாரமே குடும்பத்துடன் வந்து பால் காய்ச்சிவிட்டு, குடிவருவதாகவும் சொல்லுவார். அவரை எப்படி நம்புவது என்ற சந்தேகம் உங்களுக்கு வராத வகையில், அவருடைய விவரங்களான பான் கார்டு, ஆதார் கார்டு, லைசென்ஸ் இவற்றை வாட்சாப்பில் அனுப்பி நம்மை நம்ப வைப்பார்கள். நம்பவைத்தபின் அடுத்து கழுத்தறுப்பதுதானே காலம் காலமாக நடக்கிறது. அதேதான் இங்கும், முன்பணத்தை கூகுள் பே யில் அனுப்புவதற்காக, ஐந்து ரூபாயை அனுப்பி உறுதிப்படுத்தச் சொல்வார்கள், தனக்கு கன்பார்ம் செய்ய அந்த லிங்க்கை  க்ளிக் செய்து ஐந்து ரூபாயைத்  திருப்பி அனுப்புங்கள் என்று  சொல்வார்கள். அதை நம்பி அந்த லிங்க்கைக்  கிளிக் செய்தால் அவ்வளவு தான், மொத்தமும் ஸ்வாஹா!!! கணக்கு மொத்தமும் துடைக்கப்பட்டு வாடகைக்கு விடாத உங்கள் வீடு போல காலியாக இருக்கும்.

இன்டர்நெட் ஏகப்பட்ட வேலைகளை எளிமையாகச் செய்ய உதவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது கொஞ்சம் அசந்தாலும் ஏமாறக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும் வழங்கத்தான் செய்கிறது.வீட்டில் குடியேறி,பின்னர் வீட்டைக் காலி செய்வது தான் உலக வழக்கம். வீட்டுக்குக் குடிவருவதாய்ச் சொல்லி உங்கள் பர்சைக் காலிசெய்யும் இந்த கயவர்களிடம் விழிப்பாக இருங்கள். உங்கள் விவரங்களைப் பகிரும் முன் யோசியுங்கள். இதைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் கலந்தாலோசியுங்கள்.

By சிவ.அறிவழகன்

எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையில் பணிபுரிபவர். 2009ல் இருந்து இணையத்திலும் தமிழ் இதழ்களிலும் தளையிலா எழுத்தாளராக (Freelance Writer) இருந்துவருகிறார். தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி படைப்பாளராக பணிபுரிகிறார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version